

வெ
ண்புள்ளிகள் என்பது ஒரு நோய் அல்ல; அது ஒரு நிறக் குறைபாடு என்று தொடர்ந்து வலியுறுத்திவரு கிறோம். முன்பிருந்ததைவிட, இந்தக் குறைபாடு தொடர்பாக மக்களிடம் நல்ல புரிதல் ஏற்பட்டிருக்கிறது. எனினும், இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாத பலர், இந்தக் குறைபாடு உள்ளவர் களிடம் பாரபட்சத்துடன் நடந்துகொள்வது வேதனையளிக்கிறது. இதனால், மனதளவில் உடைந்துவிடும் பலர், வெளியில் செல்வதைத் தவிர்த்துவிடுகிறார்கள். தாழ்வு மனப்பான்மையும் அதிகரித்துவிடுகிறது. திருமணப் பருவத்தில் இருப் பவர்கள் படும்பாடு சொல்லி மாளாது.
இந்நிலையில், 2012 மார்ச் 4 முதல் சென்னை மேற்குத் தாம்பரத்தில் உள்ள வள்ளுவர் குருகுலம் பள்ளியில், வெண்புள்ளிகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கை நடத்தத் தொடங்கினோம். அதில் கலந்துகொண்ட பலர், வெண்புள்ளிகள் எனும் இந்தக் குறைபாடு காரணமாகத் தாங்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைக் கண்ணீருடன் பதிவுசெய்தனர். அவர்களுடன் தொடர்ந்து உரையாடி, அவர்களை இயல்பான நிலைக்குக் கொண்டுவந்தோம். அவர்களிடம் ஏற்பட்ட உளவியல் மாற்றம் மிகுந்த மகிழ்ச்சி தந்தது. இந்தக் கருத்தரங்கத்தை ஒவ்வொரு ஞாயிறு அன்றும் 10 மணிக்கு, வள்ளுவர் குருகுலம் பள்ளியில் நடத்துகிறோம்.
வெண்புள்ளிகள் உள்ளவர்களை வாட்டி வதைக்கும் கேள்விகள் இரண்டு. வெண்புள்ளிகள் மறைந்து பழைய தோலின் நிறம் திரும்புமா? பிறரைப் போல் தங்களுக்கும் திருமணம் நடக்குமா? மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) வெண்புள்ளி களுக்குப் பக்கவிளைவுகள் எதுவும் இல்லாத ‘லுகோஸ்கின்’ எனும் மூலிகை மருந்தைக் கண்டு பிடித்தது. இந்த மருந்தை 300 முதல் 400 நாட்கள் எடுத்துக்கொண்டால், வெண்புள்ளிகள் மறைகின்றன. இதில் உணவுக் கட்டுப்பாடும் அவசியம்.
வெண்புள்ளிகள் உள்ளவர்களைத் திருமணம் செய்துகொள்ளப் பலரும் முன்வராத நிலையில், பலர் திருமணம் செய்துகொள்வதையே தவிர்த்துவிட்டு, தனிமையில் உழல்கிறார்கள். வேதனை யான இந்தச் சூழலிலிருந்து அவர்களை மீட்டெடுக்க சுயம்வர நிகழ்ச்சிகளைத் தொடங்கினோம். இதுவரை நடத்தப்பட்ட ஐந்து சுயம்வரங்கள் மூலம், 380-க்கும் மேற்பட்ட ஜோடிகள் திருமண பந்தத்துக்குள் நுழைந்திருக்கிறார்கள். வெண்புள்ளிகளை துணிச்சலுடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்வோம்.
- கே.உமாபதி, செயலாளர்,
வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம்,
தொடர்புக்கு: leucodermafree@yahoo.in
ஜூன் 25: உலக வெண்புள்ளிகள் தினம்