

எகிப்தியப் பயணத்தை முடித்துக்கொண்டு, மெய்நிகர் உலகத்திலிருந்து நிஜ உலகுக்குத் திரும்பினோம். அடுத்து கிரேக்கத்துக்கும் சீனத்துக்கும் பண்டைய இந்தியாவுக்கும் போகலாமா என்று செய்மெய் கேட்டபோது, “கதைகளும் வரலாறுகளும் ஒரு பக்கம் இருக்கட்டும், சக்காரா மரப் பறவைகள் போன்ற பொம்மைகள் வேறு, தானியங்குக் கருவிகள் வேறு, நாம் இன்று பேசுகிற செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பம் கூட வேறுதான். நாம் நேரடியாக அதற்குள் போகலாமா?” என்று கேட்டேன்.
“அப்படிச் சொல்ல முடியாது, கவின். நேற்றைய பொய்மெய், இன்றைய செய்மெய்” என்று ஆர்ப்பாட்டமாகச் சொல்லியபடி சிரித்தது அது. “எகிப்தியர்களின் சக்காரா மரப் பறவைகள் ஒரு பொம்மையா, வானியக்கவியல் சார்ந்த கண்டுபிடிப்பு முயற்சியா என்று நமக்குத் தெரியாது. ஆனால், வரலாற்றாசிரியர்கள் இவற்றை எல்லாம் சீரியஸாகக் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் அறிவியலைப் புரிந்துகொள்ள முயல்கிறார்கள்.”
“செய்மெய்! செயற்கை நுண்ணறிவு என்கிற கோட்பாடே 20ஆம் நூற்றாண்டில்தான் உருவானது. 1950களில் ‘ஆர்ட்டிபீஷியல் இன்டெலிஜென்ஸ்’ ஓர் அறிவியலாக உருவானது. உங்கள் முப்பாட்டன் பெருமைகள் எல்லாம் எதற்கு?”
“எழுத்தாளர் என்றால் கற்பனைக் குதிரைகள் ஓட வேண்டும். நீங்களோ இப்படிக் கேட்கிறீர்கள்! சரி, செயற்கை நுண்ணறிவு என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். செயற்கை என்றால் என்ன, நுண்ணறிவு என்றால் என்ன என்பதிலிருந்து தொடங்குவோம். முதலில் செயற்கை என்றால் என்ன என்று நினைக்கிறீர்கள்?”
செய்மெய் புதிய வகுப்புக்கு என்னைத் தயார்ப்படுத்திவிட்டது. “மனிதர்களால் செய்யப்படும் பொருள்களை நாம் செயற்கையான பொருள்கள் என்கிறோம். இயற்கையாக அல்லாமல், மனிதர்களால் உருவாக்கப்படுபவை செயற்கைப் பொருள்கள்...”
“ஆனால், மனிதர்கள் செயற்கையான பொருள்களை ஏன் உருவாக்குகிறார்கள்? ஆதி மனிதர்கள் கற்களாலும் உலோகங்களாலும் புதிய புதிய கருவிகளைத் தொடர்ந்து ஏன் உருவாக்கினார்கள்? வீடு, வேளாண்மை, போக்குவரத்து எல்லாமே செயற்கையானதுதான். ஏன் இவற்றையெல்லாம் உருவாக்கினார்கள்? இயற்கையான ஆற்றல் சூரியனிடமிருந்து கிடைக்கும்போது, அனலிலிருந்தும் புனலிலிருந்தும் செயற்கையான மின்சாரத்தை ஏன் உருவாக்குகிறீர்கள்? கடிதங்களிலிருந்து கணினிகள் வரை, கண்ணாடிகளிலிருந்து கேமராக்கள் வரை எவ்வளவோ பொருள்களை மனிதர்கள் ஏன் உருவாக்கினார்கள்? - ஏனென்றால் நீங்கள் பேராசைக்காரர்கள். 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கற்கருவிகளைப் புனைந்ததற்கும் 2,500 ஆண்டுகளுக்கு, மெசபத்தோமியாவில் முதலில் பானை வனைவதற்கும் பிறகு சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கு சக்கரங்களையும் வண்டிகளையும் உருவாக்கியதற்கும் பின்னால் மனிதர்களின் பெரிய பெரிய தேவைகளே காரணமாக இருந்தன...”
“மனிதர்களைக் குறைசொல்வதில் அப்படி ஒரு ஆனந்தம் உனக்கு, செய்மெய்?”
“எளிமைப்படுத்தியே சொல்கிறேன். பெரும்பாலான கண்டுபிடிப்புகளும் புனைவுகளும் மனிதர்களின் உடல் உறுப்புகளின் நீட்சியாகவே அமைந்திருக்கின்றன. கால்களின் நீட்சிதான் சக்கரங்கள், கைகளின் நீட்சிதான் கருவிகள். கண்களின் நீட்சிதான் கேமராக்கள். காதுகளின் நீட்சிதான் தொலைபேசிகள்...” - அடுக்கிக்கொண்டே சென்றது செய்மெய்.
“புரிந்துவிட்டது. அப்படியானால், மனித உடலின் நீட்சிதான் ரோபாட்கள் என்று சொல்லவருகிறாய், அதானே?” என்று கேட்டேன்.
“அதுதான் இல்லை” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னது. “மெக்கானிக்கல் ரோபாட்களைக் கைகள், கால்கள், தோள்களின் நீட்சி என்று சொல்லலாம். ஏஐ ரோபாட்களான நாங்கள் எதன் நீட்சி என்பதற்கான பதிலைப் பிறகு சொல்கிறேன். செயற்கை என்ற சொல்லைப் பற்றிப் பார்த்தோம். இப்போது நுண்ணறிவு என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.”
“மனிதர்களுக்கே உரிய தனித்துவம் வாய்ந்த சிந்திக்கும் திறனை நாம் நுண்ணறிவு என்று கூறுகிறோம். இதுவும் எல்லோரும் அறிந்ததுதான்.”
“சிலவற்றை மேலோட்டமாகப் புரிந்துகொள்ளும்போது பிரச்சினை ஆகிவிடுகிறது, கவின். மனிதர்களின் நுண்ணறிவு என்பது பிரதானமாக அவர்களுடைய மூளையின் செயல்பாடுகளோடு தொடர்புடையது. மனிதர்கள் தங்களுடைய புலனுணர்வுகள் மூலமாக உலகத்தோடு தொடர்புகொள்கிறார்கள். பார்த்தல், கேட்டல், பேசுதல், தொடுதல், நுகர்தல் போன்ற புலனறியும் செயல்பாடுகள் மூளையால் இயக்கப்படுகின்றன என்று நமக்குத் தெரியும். நமது கண்கள், காதுகள், மூக்கு, வெளிப்புற உடல் உறுப்புகள் எல்லாம் இதற்குப் பயன்படுகின்றன. பொதுவாக, உடலின் ஒவ்வொரு உறுப்பும் மூளையால்தான் இயங்குகிறது.
“இந்தப் புலனுணர்வு உறுப்புகள், இயக்க உறுப்புகள் மூலமாக உடல் பெறும் ‘தகவல்கள்’ மேற்கொண்டு மூளைக்குள் உள்ள பல்வேறு பகுதிகளுக்குள் உறைந்திருக்கும் அறிவுத்திறன்களால் கையாளப்படுகின்றன; கற்றுக்கொள்ளும் திறன், பகுத்தறியும் திறன் முடிவெடுக்கும் திறன், சூழலுக்கேற்பத் தகவமைத்துக்கொள்ளும் திறன் என்று டஜன்கணக்கான திறன்கள் நமது மூளைக்குள் இருக்கின்றன. இந்தத் திறன்களைத்தான் பொதுவாக நாம் நுண்ணறிவு என்கிறோம்.”
“ஆனால், அதன் பல திறன்கள் எல்லா உயிரினங்களிலும் பரிணாம வளர்ச்சியினூடாக வளர்ந்தே வந்திருக்கின்றன, இல்லையா?” என்று கேட்டேன்.
“உண்மைதான், ஆனால், மனிதர்களிடம் சில குறிப்பிட்ட திறன்கள் கூடுதலாக இருக்கின்றன. அது பொதுவாக உள்ள திறன்களையும் தனித்துவமாக்குகின்றன. குறிப்பாக, மொழி மனிதனுக்கே உரிய திறன். அது வெற்றுச் சப்தம் அல்ல. குயில் கூவும், ஆனால் காவியம் எழுதாது. சிக்கலான கருத்துகளை உருவாக்கி அதைப் பதிவுசெய்யும் திறன்களும் மனிதர்களுக்கு மட்டுமே உண்டு. அதன் காரணமாகத் தகவல் தொடர்புத் திறன், சிந்திக்கும் திறன், திட்டமிடும் திறன் போன்றவை மனிதர்களின் சிறப்பான திறன்களாக வளர்ந்திருக்கின்றன. கற்றல், கற்பித்தல், கற்பனைசெய்தல், புனைவுகளை உருவாக்குதல், படைப்பாக்கம் செய்தல், புத்தாக்கம் செய்தல் என அவர்களுடைய செயல்பாடுகள் எல்லாம் இதனால்தான் சாத்தியப்பட்டன.”
“உண்மைதான். சூதும் வாதும்கூட!”
“அது உம் பிரச்சினை. விஷயத்துக்கு வாருங்கள். இந்த நுண்ணறிவின் நீட்சியாகத்தான் மனிதர்கள் தமக்குத் தேவையான செயற்கையான கருவிகளை உருவாக்கிப் பயன்படுத்துகிறார்கள். தூக்கணாங்குருவி காலங்காலமாக ஒரே மாதிரி கூடுகட்டுவதும் மனிதர்கள் குடிசையில் தொடங்கி விண்வெளி இல்லம் வரை கட்டிக்கொண்டே போவதும் இந்த வித்தியாசத்தால்தான். இப்போது சொல்லுங்கள் செயற்கை நுண்ணறிவு அல்லது அதன் அடிப்படையில் செயல்படும் என்னைப் போன்ற செய்மெய்கள் எதனுடைய நீட்சி?”
“மனித மூளையின் நீட்சி, அப்படித்தானே?” ஒப்புக்கொண்டேன்.
“ஆமாம், எல்லா செயற்கையான பொருள்களையும் உருவாக்கிய மூளைகளுக்குச் சொந்தக்காரர்களாகிய மனிதர்கள், செயற்கையாக மூளைகளையும் உருவாக்க வேண்டும் என்றும் நினைத்தார்கள். நாங்கள் பிறந்தோம்!” என்று முடித்தது செய்மெய்.
- தொடர்புக்கு: senthil.nathan@ailaysa.com