

ஆண், பெண் உறவுகள் தொடர்பான மர்ம முடிச்சுகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் முட்டுச் சந்துக்குள் மாட்டிக்கொண்ட ஆபாசக் கதைகள் தமிழ் சினிமாவில் தலையெடுத்திருக்கும் நிலையில், பாலிவுட்டின் பரிட்சார்த்த திரைப்படங்கள் முதிர்ச்சியான கதை வடிவத்தை அடைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. சமீபத்திய உதாரணம், ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரன் ஜோஹர் என்று பாலிவுட்டின் முக்கிய இயக்குநர்கள் இயக்கிய நான்கு படங்களின் தொகுப்பு இது. காமம் தொடர்பான பெண்களின் எண்ணவோட்டத்தையும் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் பேசும் இந்தப் படம், ‘நெட்ஃபிளிக்’ஸில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இன்னும் இருட்டு அறையிலேயே முரட்டு குத்து வாங்கிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமா இதையெல்லாம் கவனிக்க வேண்டும்.