Last Updated : 02 Jun, 2018 09:17 AM

 

Published : 02 Jun 2018 09:17 AM
Last Updated : 02 Jun 2018 09:17 AM

எழுத்தாளர்கள் திருப்தி அடைவதே இல்லை!- அ.முத்துலிங்கம் பேட்டி

ரு எட்டு கேள்விகள். வாரம் ஒரு ஆளுமையிடம் கேட்பது. எத்தனை மாதிரியான பதில்கள் வருகின்றன என்று பார்ப்பது. இப்படி ஒரு விளையாட்டை ‘இந்து தமிழ்’ ஆசிரியர் குழுவில் யோசித்தோம். முதல் வாரத்துக்கு யாரை அழைப்பது? தமிழின் மூத்த படைப்பாளிகளில் ஒருவரான அ.முத்துலிங்கத்துக்கு மின்னஞ்சல் தட்டினேன். கேள்விகள் சென்ற வேகத்தைத் தோற்கடிப்பதுபோல் கனடாவிலிருந்து உடனடியாக வந்தன பதில்கள்.

ஏன் எழுதுகிறீர்கள்?

முதல் காரணம் எழுதும்போது கிடைக்கும் மகிழ்ச்சிதான். இதே கேள்வியை 500 புத்தகங்கள் எழுதிய அறிவியல் எழுத்தாளரான ஐஸக் அசிமோவிடம் கேட்டார்கள். அவர், ‘வேறு என்ன? என்னுடைய டைப்ரைட்டரில் அடுத்து என்ன வார்த்தை வந்து விழுகிறது என்பதைப் பார்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்காக எழுதுகிறேன்’ என்றார். உலகத்தில், முன் இல்லாத ஒன்றை சிருட்டிப்பதில் உள்ள மகிழ்ச்சி வேறு எதில் உண்டு? ஒரு பெண், குழந்தை பெற்றால் அது சாதாரண விசயமா? புது உயிரை உண்டாக்கும் மகத்தான காரியமல்லவா? ஒரு சிற்பி சிலையை வடிப்பதும், ஓவியர் புதிதாக ஒன்றை வரைவதும், இசையமைப்பாளர் புதிய இசையை உருவாக்குவதும் இந்த வகைதான். படைக்கும்போது எழுத்தாளருக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி அதைப் படிக்கும் வாசகருக்கும் கிடைக்கிறது. மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. இது தவிர, உங்கள் படைப்பினால் உலகத்துக்கு ஏதாவது நன்மை கிட்டுமானால் அதைவிடப் பேரானந்தம் வேறு என்ன இருக்க முடியும்!

எந்த நேரத்தில் எழுதுகிறீர்கள்?

அதிகாலை நேரத்தில்தான் எழுதுகிறேன். காலை 5.30 மணியிலிருந்து 9 மணி மட்டும் எழுதுவேன். காலை உணவுக்குப் பின்னர் இரண்டு மணி நேரம் எழுதலாம். ஆனால், ஊக்கம் குறைந்துவிடும். மதிய உணவுக்குப் பின்னர் சோர்வு ஆரம்பித்துவிடும். அந்த நேரத்தில் வாசிப்பேன். வாசிப்பின் வெற்றி கையில் இருக்கும் புத்தகத்தைப் பொறுத்தது. என்னுடைய எழுத்தாள நண்பரிடம் இதே கேள்வியைக் கேட்டிருக்கிறேன். அவரும் காலைதான் எழுதுகிறார். ஆனால், ஒரு நாளில் அவருக்கு இரண்டு காலைகள். அதிகாலையிலிருந்து மதியம் வரை எழுதுவார். மதிய உணவுக்குப் பின்னர் சிறு தூக்கம். எழுந்தவுடன் ஒரு நடைபோய்விட்டு வந்து மீண்டும் எழுதத் தொடங்குகிறார். ஒரு நாள், இரண்டு விடியல், இரண்டு எழுத்து. இதையும் முயன்றுபார்த்திருக்கிறேன். நான் வேக மான எழுத்தாளன் இல்லை. நான்கு மணி நேரத்தில் சிலவேளைகளில் ஒரு பக்கம்தான் தேறுகிறது.

உங்களது எந்தப் படைப்பு உங்கள் எழுத்து வாழ்க்கையைப் பூர்த்தியாக்கியது எனச் சொல்வீர்கள்?

எழுத்தாளர்கள் திருப்தி அடைவதே இல்லை. டோல்ஸ்டோய் 1,300 பக்கங்கள் கொண்ட ‘போரும் சமாதானமும்’ நாவலை எழுதினார். எழுதி முடித்த பின்னர் பின்னுரை ஒன்று எழுதினார். அது திருப்தி தராமல் இன்னொரு பின்னுரை எழுதினார். மூன்றாவதாகவும் தன் நாவலை விளக்கி ஒன்று எழுதினார். இறுதிவரை அவருக்குத் திருப்தி கிடைத்ததாகத் தெரியவில்லை.

எழுத்தில் நீங்கள் சோர்வாக உணர்வது எப்போது?

எப்போதும்தான். ஒரு புத்தகம்கூட எழுதிடாத பல சிறந்த எழுத்தாளர்களைச் சந்தித்திருக்கிறேன். சிந்தனையில் அவர்கள் பல நூல்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதை எழுத்தில் மாற்றுவதற்கு சோம்பல் இடம்கொடுக்கவில்லை. எழுத்தாளருடைய உண்மையான வெற்றி சோம்பலைத் தோற்கடிப்பதுதான். நான் கணினியில் எழுதும்போது அடிக்கடி நினைப்பது 10,200 பாடல்களை இயற்றிய கம்பரைத்தான். ஓலையை ஒரு கையிலே பிடித்து மறுகையில் எழுத்தாணியை எடுத்து அத்தனை பாடல் களையும் எழுதினாரே அதற்கு எத்தனை உடல் உழைப்பு தேவைப்பட்டிருக்கும்! அதிகமாக எனக்கு சோர்வு நேர்ந்தது நேர்காணல் செய்யும்போது. ஒருவரை முன்னும் பின்னும் துரத்தி தொந்தரவுபடுத்தி நேர்காணலுக்குத் தேதி வாங்கியிருப்போம். பல மைல்கள் பயணிக்க வேண்டி வரலாம். நேர்காணல் முடிந்து எழுதித் திருத்தி பத்திரிகைக்கு அனுப்பிவிட்டுக் காத்திருக்க வேண்டும். பிரசுரிப்பதில் தாமதம் ஏற்படும்போது மிகவும் மனச்சோர்வாக உணர்வேன். அதைக் கடந்து மீண்டும் எழுதவருவது சிரமம்தான்.

எழுதுவது பற்றி உங்களுக்குக் கிடைத்த சிறந்த அறிவுரை எது?

1999 என்று நினைக்கிறேன். பல மைல்கள் பயணித்து அமெரிக்காவில் சாந்தகுரூஸ் என்ற இடத்தில் சுந்தர ராமசாமியைச் சந்திக்கப் போயிருந்தேன். முதல் சந்திப்பு. நான் எழுதிய சில சிறுகதைகளை அவர் படித்திருந்தார். பாராட்டுகள் வந்திருந்தன. ஒன்றிரண்டு எதிர்மறையாகவும் இருந்தன. அப்போது அவர் சொன்ன அறிவுரை இன்றுவரை பயனுள்ளதாகவே இருக்கிறது. ‘திறனாய்வாளரை முற்றிலும் ஒதுக்கக் கூடாது. காழ்ப்புணர்வு விமர்சனம் என்றால் முதல் இரண்டு வரிகளிலேயே அதைக் கண்டுபிடித்துவிடலாம். அவற்றைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. உங்கள் படைப்புத் திறனை அழிப்பதுதான் அவர்கள் நோக்கம். திறனாய்வாளர் வெளிப்படுத்திய கருத்தில் உண்மை இருந்தால், அதை மதிக்கப் பழக வேண்டும். நல்ல விமர்சனங்கள் எழுத்தை மேம்படுத்தும்.’

இலக்கியம் தவிர்த்து - இசை, பயணம், சினிமா, ஓவியம்... - வேறு எது இல்லாமல் உங்களால் வாழ முடியாது?

கிடைக்கும் ஒவ்வொரு நிமிட அவகாசத்திலும் ஏதாவது எழுதத் தோன்றும். அல்லது வாசிக்க வேண்டும். ஆகவே, தொலைக்காட்சி பார்ப்பதோ, இசை கேட்பதோ அபூர்வமாகவே நடக்கிறது. வெங்கட் சாமிநாதன் கர்னாடக இசைக் குறுந்தகடு ஒன்று தந்தார். அதை அடிக்கடி கேட்பேன். துக்கமான சமயத்திலும் மகிழ்வான சமயத்திலும் அதே இசை மனதை சமநிலைப்படுத்துகிறது.

இதை இன்னும் வாசிக்காமல் இருக்கிறோமே என நீங்கள் நினைக்கும் புத்தகம் எது?

சங்க இலக்கியம்தான். எட்டுத்தொகை, பத்துப் பாட்டு ஆகியவற்றை அவ்வப்போது படித்ததுண்டு. ஆனால், முறையாகப் பாடம் கேட்டதில்லை. நேற்று ‘மலைபடுகடாம்’ நூலை எடுத்துப் பார்த்தேன். எந்தப் பக்கத்தைத் திறந்தாலும் ஒரு புதிய தகவல் அங்கே கிடைக்கும். படிக்க வேண்டும்.

இலக்கியம் ஒருவரைப் பண்படுத்துமா?

உயர்ந்த இலக்கியம் அதைச் செய்கிறது. தன் முதிய வயதில் டோல்ஸ்டோய் எழுதிய நீண்ட கதை The Death of Ivan Ilyich அறம் பற்றிப் பேசுவது. இவான் நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றவர். ஒருவருக்கும் தீங்கிழைக்காத சாதாரண வாழ்க்கை அவருடையது. அவர் விபத்தில் சிக்கிக் கீழே விழுந்து காயம்பட்டு தீர்க்க முடியாத நோயாளியாகப் படுக்கையில் படுத்துவிட்டார். மருத்துவர் அவரிடம் உண்மை பேசுவதில்லை. மனைவி வேண்டாவெறுப்பாக நடந்துகொள்கிறார். ஒருவரும் அவருக்கு உண்மையாக இல்லை, ஒரேயொரு வேலைக்காரனைத் தவிர. அவர் கடவுளைப் பற்றியும், வாழ்க்கையின் அர்த்தத் தைப் பற்றியும் அறத்தைப் பற்றியும் தன் இறுதிக் காலத்தில் சிந்திக்கிறார். வாசக மனங்களையும் உண்மையை நோக்கி நகர்த்துகிறார்.

- த.ராஜன்,

தொடர்புக்கு: rajan.t@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x