

அக்டோபர் 22 அன்று வெளியான ‘இணையகளம்’ பகுதியில் இடம்பெற்ற ‘பாடநூல் சொற்களும் தெரிந்த சொற்களும்’ என்கிற பதிவை வாசித்தேன். எல்லோரும் பயன்படுத்துவதற்காகத்தான் பள்ளிப் பருவத்திலேயே நல்ல தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்துகிறது தமிழ்நாடு அரசு.
பல சொற்கள் ஆங்கிலத்திலிருந்தும் வடமொழியிலிருந்தும் தமிழ்மொழியில் பல்லாண்டுகளாகப் புழக்கத்தில் இருந்தன. அவை கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ்ச்சூழலில் கலந்தமையை நாமெல்லாம் அறிவோம். சான்றோர் பலர் முயற்சியால், ‘பஸ்’ என்பதைப் பேருந்து என்றும், ‘பஸ் ஸ்டாண்டு’ / ‘பஸ் ஸ்டாப்’ ஆகியவை பேருந்து நிலையம்/நிறுத்தம் என்றும் மாற்றப்பட்டன. இவை போன்று பல சொற்களும் மாறியிருக்கின்றன. டிவியைத் தொலைக்காட்சியாக, பிரசங்கத்தைப் பரப்புரையாக, அதிர்ஷ்டத்தை நல்வாய்ப்பாக மாற்றி நாம் இக்காலத்தில் பயன்படுத்திவருகிறோம்.
இப்படியான ஒரு சூழலில், நல்ல தமிழ்ச் சொற்களைத் தமிழர்களே நிராகரிப்பது என்பது துயரே. நற்றமிழ்ச் சொற்கள் தமிழ்க் குழந்தைகளின் நாவில் நிலைத்திருக்கவே தமிழ்ப் பாடங்கள் உருவாகியிருக்கின்றன. பனிக்கூழ் வேண்டாம், ஐஸ்க்ரீமே இருக்கட்டும் என்பது, தமிழன் ஆள வேண்டாம், வெள்ளைக்காரனே ஆளட்டும் என்பதைப் போன்றது. மகாகவி பாரதிகூட, பாப்பா பருவத்திலேயே தமிழை அவர்களுக்குக் கொண்டுசெல்வதற்காக, ‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, அதைத் தொழுது படித்திடடி பாப்பா!’ என்று பாடியுள்ளார். ஆங்கில வழியில் ஒரு குழந்தை படித்தாலும், தாய்மொழி தமிழ் எனில், அந்தத் தாயின் கடமை, தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்.
ஆங்கிலச் சொற்களின் கலப்புடன் தமிழ் பேசப்படும் இன்றைய சூழலில், செந்தமிழ்ச் சொற்களைப் புத்தகங்களின் வாயிலாகப் புகட்டும் முயற்சியைப் பாராட்ட வேண்டும். தமிழ் தனியாகவும் இயங்கும் என்பதைச் சுட்டவே இந்த எதிர்வினை!
- அரிகுமார் நாராயணன், சென்னை - 41.