

‘விடுதலை இறையியலின் தந்தை’ எனப் போற்றப்படும் லத்தீன் - அமெரிக்க இறையியல் / மெய்யியல் அறிஞர் குஸ்டாவோ குட்டியரஸ், அக்டோபர் 22ஆம் தேதி பெரு நாட்டின் லிமா நகரில் காலமானார். கிறித்துவர்களின் சமூகப் படிப்பினைகளை வடிவமைத்தவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவரான குட்டியரஸ், கத்தோலிக்கத் திருச்சபை சமூக நீதியை முதன்மைப்படுத்தி, ஏழைகள், விளிம்புநிலையினர் சார்பாக நிலைப்பாடு எடுக்கப் பெரிதும் வலியுறுத்தியவர். கிறித்துவ இறையியல் சிந்தனைப் போக்குகளில் ஏறத்தாழ அரை நூற்றாண்டாகச் செல்வாக்கு செலுத்திவருவது விடுதலை இறையியல். பல முற்போக்கான கிறித்துவர்களை இந்திய அளவிலும், பல மனித உரிமைப் போராளிகளைத் தமிழக அளவிலும் உருவாக்கியது குட்டியரஸின் விடுதலை இறையியல் என்னும் கருத்தியலே!
குட்டியரஸ் தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் லிமா நகரில் 1928 ஜூன் 8இல் பிறந்தார். இவர் டொமினிகன் சபை குரு. பெல்ஜியம், ஃபிரான்ஸ் நாடுகளில் இறையியல் கற்றுத்தேர்ந்தார். நோத்ர தாம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உலகின் பெரும் கல்வி நிறுவனங்களில் பேராசிரியராகப் பணியாற்றினார். ‘ஏழையருக்கான விருப்பத் தேர்வு’, ‘ஏழையர் சார்பாக’ என்ற சொற்றொடர்களைப் பிரபலப்படுத்தியவர். இவர் எழுதிய, ‘விடுதலை இறையியல்’ (A Theology of Liberation -1971), ‘நாங்கள் எங்கள் சொந்தக் கிணறுகளிலிருந்து குடிக்கிறோம்’ (We Drink from Our Own Wells -1983) போன்ற புத்தகங்கள் புகழ்பெற்றவை. எனவே, ‘ஏழைகளின் இறை வாக்கினர்’ எனப் போற்றப்படும் குஸ்டாவோ குட்டியரஸின் சிந்தனைகளை ஆராய்வது விடுதலை இறையியலின் ஆணிவேருக்கே சென்று அறிந்துகொள்வதற்குச் சமம்.
விடுதலை இறையியல்: குட்டியரஸைப் பொறுத்தவரையில் ‘விடுதலை இறையியல்’ என்பது வெறுமனே இறையியல் சிந்தனைகளில் ஒரு புதிய கருத்து அல்ல; மாறாக, இது ஒரு புதிய இறையியலாக்கச் செயல்முறை. விடுதலை என்பது இறையியலாளர்களின் பட்டியலில் ஓர் உருப்படி அல்ல; அனைத்தையும் ஒளிரச்செய்கின்ற தொடுவானம்; அனைத்துக்கும் ஒரு புதிய அர்த்தம் தருவது. எனவேதான் குட்டியரஸ் மரபுவழி என்பதைவிட மக்கள் வழி என்பதை வலியுறுத்துகிறார்.
வறுமையை ஒழிப்பது குறித்துச் சமூகவியல் அறிஞர்கள் பல்வேறு கோட்பாடுகளைப் பரிந்துரைக்கின்றனர். அவற்றுள் வளர்ச்சிக் கோட்பாடு, பொதுவுடைமைக் கோட்பாடு இரண்டும் மிகவும் முக்கியமானவை. வளர்ச்சிக் கோட்பாட்டிலிருந்து குட்டியரஸின் விடுதலை பற்றிய கருத்தியல் வேறுபடுகிறது. வளர்ச்சி மாதிரிகளை அவர் ‘உதவிகள்’ என்று அழைக்கிறார்.
70% உணவு 30% பணக்காரர்களால் மட்டுமே உண்ணப்படுகிறது. இந்தச் சூழலில், பிரச்சினையை எப்படித் தீர்ப்பது? மக்களுக்கான உணவு போதுமான அளவு இல்லை என்றும், சமையலறையை நவீனப்படுத்த வேண்டும் என்றும், உற்பத்தியை அதிகரித்து ஏழை மக்களுக்குக் கொடுக்குமாறும் வளர்ச்சியியல் கோட்பாட்டாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஆனால், நம்மிடம் போதுமான அளவு உணவு இருக்கிறது என்றும், அவற்றைச் சரிசமமாகப் பங்கிடுவதே தீர்வு என்றும் மார்க்சியச் சிந்தனையாளர்கள் பரிந்துரைக்கின்றனர். மார்க்சியர்களின் கருத்தில் உடன்பட்டு சமுதாய வளங்களை ஏழைகளுக்குச் சமமாக வழங்குதல், அடிப்படை அமைப்பு மாற்றம் முதலியவற்றைக் குட்டியரஸ் முன்வைக்கிறார்.
அநீதியான சமூக அமைப்புகளிலிருந்து விடுதலை: மூன்று நிலைகளைக் கொண்ட விடுதலை குறித்து குட்டியரஸ் பேசுகிறார். முதல்நிலை என்பது மக்களை அழித்துவரும் அநீதியான சமூக அமைப்புகளிலிருந்து விடுதலை பெறுவது. இங்கிருந்துதான் எல்லாமே தொடங்குகின்றன. இந்த அமைப்புகள் அரசியல், பொருளாதாரம், பண்பாடு சார்ந்தவையாக இருக்கலாம்; அவை இனம், வர்க்கம், நாடு, பாலினம் போன்றவற்றின் அடிப்படையில் அமைந்த திசைதிருப்பப்பட்ட மனோபாவங்களால் உருவானவையாக இருக்கலாம்.
குட்டியரஸ் இந்த முதல் நிலைக்கு இயல்பாகவே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அவர் வாழ்ந்த சூழலில், முழு மனிதநிலை அடைவதற்கு உடனடித் தடையாக இது இருந்ததும், அவ்விஷயத்தில் கடந்த காலத்தில் திருச்சபை சிறிதளவும் கவனம் செலுத்தாமல் இருந்ததுமே இதற்குக் காரணமாகும். முதல் நிலையை அவர் பொருளாதார-அரசியல், சமூக-பண்பாட்டு விடுதலை என்று இரு வகைப்படுத்துகிறார்.
பொருளாதார-அரசியல் விடுதலை - முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு முறையில், வசதிபடைத்த ஒரு சிலர் உற்பத்திசெய்யும் உரிமையைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இது போன்ற முதலாளித்துவ அமைப்பு முறையே அநீதியானதாகும். எனவே, அநீதியாகச் சம்பாதித்த பணம் அல்லது சேர்க்கப்பட்ட செல்வம் இந்த அமைப்பு முறையில் ‘நல்ல’ வழியில் சேர்க்கப்பட்டாலும்கூட, அது அநீதியானதுதான். இதை, ‘நேர்மையற்ற செல்வம்’ (லூக்கா 16:9) என்று இயேசு சாடுகிறார்.
மேலும் “நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது” (லூக்கா 16:13) என்று தெளிவாகக் கூறுகிறார். தொழிலாளர்களின் உழைப்பு எஜமானர்களின் மூலதனத்தைக் கூட்டவே உதவுகிறது. ஏழைகளின் உழைப்பு சுரண்டப்படுகிறது. இதனால்தான் முதலாளித்துவ அமைப்பால் உருவாக்கப்பட்ட பொருளாதார முறையை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை குட்டியரஸ் முன்மொழிந்தார்.
சமூக-பண்பாட்டு விடுதலை: சமூக-கலாச்சார விடுதலை தொடர்பான கருத்துகளை ஃபிராங்க்பர்ட் மார்க்சியம் அல்லது விமர்சனக் கோட்பாடு எனும் தத்துவப் பள்ளியிலிருந்து குட்டியரஸ் பெற்றுள்ளார். விமர்சனக் கோட்பாடு, மார்க்சியக் கருத்தியலின் பரிணாம வளர்ச்சியாகும். விமர்சனக் கோட்பாடுகள் செய்ததைப் போலவே, குட்டியரஸும் பண்பாட்டு அம்சங்களைச் சமூகப் பகுப்பாய்வுக்காகப் பயன்படுத்தியுள்ளார்.
தூய்மையான வர்க்க அணுகுமுறை மட்டும் போதாது. ஏழைகள் என்று அந்தக் கருத்தியலை அவர் விரிவாக்குகிறார். மக்களது ஆழ்மன ஆசைகளை ஆய்வுசெய்யும் அவர், பொருளாதாரத்தையும் தாண்டிய விடுதலைக்காக அவர்கள் ஏங்குகிறார்கள் என்பதை உணர்ந்தவர். பொருளாதாரத் தளத்தைத் தவிர, மற்ற ஒடுக்குமுறைகளும் மக்களிடையே இருப்பதையும் அவர் கண்டறிந்துள்ளார்.
விதியின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை: குட்டியரஸின் கருத்துப்படி இரண்டாம் நிலை விடுதலை என்பது சற்று நுட்பமானதாகும். விதியின் ஆதிக்கத்திலிருந்து பெறுகிற விடுதலைதான் அது. ஒரு மனிதனுடைய வாழ்க்கை என்பது முன்தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்பதும், அதைக் குறித்து எதுவும் செய்ய முடியாது என்ற நிலைதான் விதியின் ஆதிக்கம். தற்போதைய சமூக நிலையை நியாயப்படுத்த விரும்புகிறவர்கள் இவ்விதிக் கோட்பாட்டை வலியுறுத்துகிறார்கள்.
பல நூற்றாண்டுகளாகவே கிறித்துவம் இந்த விதிக் கோட்பாட்டை ஆதரித்தே வந்துள்ளது என்கிறார் குட்டியரஸ். விதி என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘இறைச் சித்தம்’, ‘இறை விருப்பம்’ போன்ற சொல்லாடல்களை அது பயன்படுத்துகிறது. ‘ஆண்டவர் உங்களுக்குக் கொடுப்பதைக் குறை கூறாமல் ஏற்றுக்கொள்ளுங்கள். மறு உலகில் உங்களுக்கு வெகுமானம் கிடைக்கும்’. இதுவே பெரும்பாலான மறையுரைகளின் சாரம்.
இப்போதுள்ளது போன்ற நிலைகள் அப்படியே தொடர்ந்து நீடிக்கக் கூடாது என்பதுதான் இந்த விதியின் ஆதிக்கத்திலிருந்து பெறுகிற விடுதலை. விவிலியக் கடவுள் நீதியைப் பெற்றுத்தர ஆற்றலோடு செயலாற்றுகிறார். ‘நம்பிக்கை’ என்னும் வார்த்தைதான் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
ஆன்மிக விடுதலை: விடுதலையின் மூன்றாம் நிலை என்பது தனிப்பட்ட பாவம், குற்ற உணர்விலிருந்து விடுதலை பெறுவதாகும். இறையியல் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது மனிதனின் விடுதலை என்பது பொருளாதார, அரசியல் விடுதலையைக் கடந்ததாக உள்ளது. விடுதலையின் முழுமையான நிலை என்பது ஆண்டவரோடும் மக்களோடும் இணைந்திருத்தல் ஆகும்.
குட்டியரஸ் சொல்வதுபோல் விடுதலை என்பது முதல் இரண்டு நிலைகளிலேயே முடிந்துவிடுவதல்ல. பாவத்திலிருந்து மீண்டால்தான் அது நிறைவுபெறும். பாவம் என்பது தனிமனித விருப்பங்களுக்காக வேண்டுமென்றே ஆண்டவரின் அன்பை ஏற்றுக்கொள்ள மறுப்பதாகும். ஆண்டவரின் இந்த அன்பை ஒதுக்கித்தள்ளும் தனிப்பட்ட மறுப்பு என்பது சமூகப் பின்விளைவுகளைக் கொண்டதாகும்.
ஒருங்கிணைந்த விடுதலை: ‘விடுதலை’ என்கிற கருத்தாக்கத்தை மூன்று நிலைகளாகப் பிரித்ததைப் போலவே, அவற்றை மீண்டும் சேர்த்துவைத்து நிறைவுசெய்வதும் அவசியமாகிறது. இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாகவும், ஒன்றையொன்று சார்ந்துள்ளவையாகவும் இருக்கின்றன.
இவை ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்தவையாக இருந்தபோதிலும், ஒன்று இல்லாமல் மற்றொன்று இருக்க முடியாது. இதை மனதில் இருத்துவது, வாழ்வில் மோசமான யதார்த்தங்களை மறுக்கும் ‘வறட்டு ஆன்மிகத்திலிருந்து’ நம்மைக் காப்பதோடு, வாழ்வின் உடனடித் தேவைகளை மட்டும் பூர்த்திசெய்யும் ஆழமற்ற ஆய்வுப் போக்கிலிருந்தும் நம்மைக் காக்கும்.
ஏழைகளின் கண்ணோட்டத்தில் இருந்தும் அவர்களது விடுதலைக்கான அக்கறையில் இருந்தும் யதார்த்தங்களைக் குறித்த ஒரு தெளிவான வாசிப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றுதான் விடுதலை இறையியல் எதிர்பார்க்கிறது. விடுதலை இறையியல் கோட்பாடுகள் தொடர்ந்து மற்ற இறையியல் கோட்பாடுகளுக்குச் சவாலாகவே இருந்துவருகின்றன.
குறிப்பாக, முதலாளித்துவத்துடன் கைகோக்கும் கோட்பாடுகள், இதர அநீதியான சமூக அமைப்பை நியாயப்படுத்தும் ஊக, வெற்று, வறட்டு ஆன்மிகக் கோட்பாடுகளுக்கும் சவாலாக இருந்து வருகிறது. எனவேதான் விடுதலை இறையியல், இறையியலையும் ‘விடுதலை’ செய்திருக்கிறது எனலாம். கறுப்பர் இறையியல், பெண்ணிய இறையியல், தலித் இறையியல், பழங்குடி இறையியல், தமிழ்த் தேசிய இறையியல், சூழலியல் இறையியல் போன்ற புதிய சிந்தனைப் போக்குகள் குட்டியரஸ் உருவாக்கிய விடுதலை இறையியலின் குழந்தைகளே!
_ தொடர்புக்கு: basilxavier@gmail.com