அன்னா

அன்னா
Updated on
3 min read

இன்றைய காலக்கட்ட ஈழ எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர் வாசு முருகவேல். இலங்கையின் வட பகுதியிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட நிகழ்வைப் பின்னணியாகக் கொண்ட ‘ஜெப்னா பேக்கரி’ இவரது முக்கியமான நாவல். ஈழப் பின்னணியிலும் சென்னைப் பின்னணியிலும் எழுதிவருகிறார். இவரது வெளிவராத புதிய நாவலான ‘அன்னா’ இலங்கையின் இறுதிப் போர்ச் சூழலைப் பின்னணியாகக் கொண்டது; எதிர் பதிப்பக வெளியீடாக வரவுள்ளது. அதன் ஒரு பகுதி இது.

வேலி அருகே குவித்​திருந்த பூவரசம் இலைச் சருகு​களைக் காற்று கலைத்துப் போட்டிருந்தது. தென்னை​களில் மறைந்து வீசிக்​கொண்​டிருந்த காற்று தன்னை அடையாளம் காட்டிக்​கொள்ள விரும்ப​வில்லை. காய்ந்த சருகுகள் மேல் சுருக்​கம்​விழுந்த உள்ளங்கையை விரித்துப் பார்த்து​விட்டுப் படலையைத் திறந்​து​கொண்டு உள்ளே போனாள். மக்களை வீரியம்​கொண்டு அடித்து ஒழுங்​காக்கிய கையும் இதுதான் என்று நெஞ்சுச்​சதைகளின் உள்ளே நினைவுகள் விம்மின.
மூத்தவன் சுடப்​பட்டு இறந்தான் என்று சொல்லிக்​கொண்​டாலும், காயப்​பட்​ட​வனின் தலையை அடித்து உடைத்தது துவக்கின் இரும்​பு​தான். உடலைக் கைப்பற்றிக் கொண்டு​வரு​வதற்கு எடுத்​துக்​கொண்ட முயற்​சியில் நகுலன் என்ற தளபதியை இழந்திருந்தது படையணி. உடல்களைக் கொண்டு​வந்து சேர்த்தது மட்டுமே வெற்றி​யாகிப்போன நாளில் அழுகைகள் அதிகம் கேட்டன.
அன்னாவின் வீட்டின் சடங்குகளை மட்டும் ஊரே பார்த்​துக்​கொண்​டிருந்​ததற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஊரில் எத்தனை பெடிபெட்​டைகளைச் சேர்த்து​விட்டவள் என்று வாயடித்​தவர்கள் காத்திருந்த நாளும் அதுதான். சொந்த மகன் போனால் மட்டும்தான் இவளுக்​கெல்லாம் விளங்கும் என்றவர்களை விம்மி அழவைத்து​விட்டது மரண வீடு.

எட்டாம் நாள் அசைவ உணவுகளை எல்லாம் தயார்​செய்திருந்​தாள். மீனும் நண்டும் மட்டும் இல்லை. கணவாயும் றாலும் மட்டி​யும்​கூடத் தலைவாழை இலையில் நிரம்​பி​யிருந்தது. சோற்றுக்குப் பதில் சிவப்​பரிசிமா புட்டு மட்டும் அவித்​திருந்​தாள். அது சுற்றி நின்ற சனத்துக்கு வித்தி​யாசமாக இருந்​தாலும் அங்கிருந்த சக போராளி​களுக்கு மட்டும் வித்தி​யாச​மாகப்​பட​வில்லை. அது அவர்களுக்குப் பழகிப்​போனது​தான்.

களத்தில் இருந்து விடுமுறைக்கு எப்போது வந்தாலும் புட்டுதான் அவன் விருப்ப உணவு. பட்டப்பகல் வெயிலில் வந்தாலும் புட்டுதான் கேட்பான். மகனுக்கு அப்படியே செய்து பழகியதில் சக போராளிகள் யார் வந்தாலும் கேட்காமல் புட்டு அவித்துக் கொட்டி​விடு​வாள். சம்பலோ சொதியோ அது நேரங் காலத்தைப் பொறுத்தது. ஆனால், புட்டு மட்டும் நேரங் காலத்​திற்கு அப்பாற்​பட்டதாக இருந்த வீடு அது.

அன்றைக்குத் தளபதிகள் மூலம் செய்திகளை அனுப்​பி​யும்​கூடச் சின்னவன் வரவில்லை. முதலில் போன செய்தி​களைத் தவிர்க்​கும்​போதே, புரிந்​து​கொண்​டிருக்க வேண்டும் என்ற எண்ணம் அன்னா​வுக்கு நேரம் கடந்தே புத்தியில் ஏறியது.

“என்ன நடந்தாலும் நீ தலைவரோடதான் இருக்​கோணும்.”

மூத்தவன் தம்பிக்​காரனிடம் சொல்லி, “நானே செத்தா​லும்” என்று இழுத்த​போது, புலிச் சீருடைக்கு மேல் முதுகில் தொம்மென்று விழுந்தது அடி.

சின்னவன் எப்படி ஓடித் தப்பினான் என்று கண்டு​பிடிக்கும் கணத்தில், இரண்டாவது அடியும் முதுகில்தான் விழுந்தது. வாழை இலையில் குவிந்​திருந்த புட்டில் இருந்து அசைந்து கொடுக்​காமல் நெளிந்தான் மூத்தவன். எதற்கும் ஒருமுறை எட்டிப் பார்ப்போம் என்று படலையடி வரையில் வந்து பார்த்​தாள்.

“இயக்கம் நல்ல ரெயினிங்தான் குடுத்​திருக்​கு​போல.” நாலா பக்கமும் திரும்பிப் பார்த்து​விட்டு முணுமுணுத்​துக்​கொண்டு திரும்பி வந்து பார்த்த​போது, வாழையிலை வழித்துத் துடைக்​கப்​பட்டிருந்தது.

தளபதிகள், வந்தவர்கள், போனவர்கள் செலவழித்தது போகத் தன்னுடைய சிறுசேமிப்​பையும் கொட்டி, செத்த வீட்டை ஊரே பார்க்​கும்​விதமாக நடத்தி முடித்​தாள்.

ஊரில் எங்கு வித்துடல் வந்தாலும் சனம் கூடுவது மரபாகிப் போனாலும் அன்னாவின் வீட்டில் அந்தக் கூட்டம் கூடியது தளபதிகள் சிலருக்கே கொஞ்சம் புதின​மாகத்தான் பட்டது. போராட்​டத்​திற்குப் பெடிபெட்​டையைச் சேர்த்​தா​லும், வயது வரம்பில் தொடங்கிக் குடும்பச் சூழல் வரையில் கணக்கெடுத்து இயக்கத்தில் ஆள் சேர்த்​தவர்கள் குறைவு​தான். வயது வரம்பு மட்டுமே கணக்கில்​கொண்டு செயற்​பட்​ட​வர்களை விடவும் அன்னா​வுக்கு வந்த நல்ல பெயர் கொஞ்சம் அதிகம்​தான்.

ஒரு பொம்பளை... ஒரு தாய்... என்று தமிழ் மரபில் இருந்த அத்தனை பெண் ஸ்தானங்​களும் அன்னா​வுக்குப் பூட்டி கடிந்து கொண்ட​வர்கள், அந்த ஊரின் சனத்தொகையில் பார்த்தால் கொஞ்சம் அதிகம்​தான். அவர்கள் அழுது​கொண்டு வித்துடலைக் கொண்டு போனதுதான் அன்னா​வுக்குக் கிடைத்த ஒரேயொரு இறுதி மரியாதை.

பூவரசம் வேலியடியால் அசைந்​துபோன ஒளியின் நிழல் காக்காதான் என்று கண்டு​பிடித்து எழும்பிப் போவதற்கு அன்னா​வுக்கு ஒரு நொடி போதுமானதாக இருந்தது. காக்கா மகனைக் கண்டு​பிடித்து​விட்டார் என்று சொல்லித் தெரிய வேண்டியதாக இருக்க​வில்லை அன்னா​வுக்கு. காக்காவும் மகனை முதுகில் அடித்​துதான் வளர்த்திருப்​பார். ஒத்த பிள்ளை என்று சொன்ன ஞாபகம். அணைத்​தும்தான் வளர்த்திருப்பார் இல்லையா? ‘தொப்பி பிரட்​டியள்’ என்று சொல்லுகிற சனம் கிளிநொச்​சி​யிலும் இருக்​கத்தான் செய்தார்கள்.

“நடந்த எதையும் முழுசாத் தெரிஞ்ச சனமும் இப்ப குறைஞ்சு கொண்டுதான் போகுது. மிஞ்சுகிறவர்கள் தன்னையும் நாளைக்குப் பிரட்​டிப்போட யோசிக்க மாட்டினும்.”

மனதில் விம்மி வந்த வார்த்​தைகளை மென்று விழுங்​கிக்​கொண்டு வெளி விறாந்​தையில் கால்களை நீட்டி அமர்ந்​தாள். காக்காவின் மகன் கடைசியாக வீட்டுக்கு வந்து போகும்​போதும், அதுதான் கடைசிச் சந்திப்பு என்பதைக் கண்டு​பிடிக்க காக்காவால் முடிய​வில்லை. அவன் அடிக்கடி வீட்டுக்கு வந்து போய்க்​கொண்டு இருந்​ததும், அதற்கு ஒரு காரணமாக இருக்​கலாம். அவன் இயக்கத்தில் இருந்தாலும் நடவடிக்கை​களில் எந்த ஒரு மாற்றமும் தென்பட்​ட​தில்லை.
புளொட் இயக்கத்தின் பிடியில் இருந்த போராளிகளை மீட்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்​டதற்குக் காரணம், புளொட்டின் முகாமை அடைவதற்கு இந்திய ராணுவத்தின் பாதுகாப்புச் சோதனைச் சாவடிகளைக் கடந்துபோக வேண்டி இருந்​தது​தான். புலிகளின் முகாமைத் தாக்கி நான்கு பேரைக் கொன்றதுடன் மூவரைப் பிடித்​துக்​கொண்டு போயிருந்தது புளொட்.
இந்திய ராணுவம் புலிகள் தாக்கப்​பட்டது குறித்துக் கண்டு​கொள்​ளாமல் இருந்​ததுடன் அவர்களின் ரகசியங் களை அறிவதற்கு உயிருடன் பிடிபட்ட போராளிகளை அடித்துச் சித்ரவதை செய்து​கொண்​டிருந்தது. எந்த வகையிலும் தங்கள் பெயர் வெளியே வந்து​விடாமல் இருக்​கத்தான் புளொட் இயக்கத்தைத் தங்கள் கட்டுப்​பாட்டில் வைத்திருந்​தார்கள். இந்திய ராணுவத்தின் பாதுகாவலை மீறி உள்ளே போகும் திறமை காக்காவின் மகனிடம்தான் இருந்தது. அவன் காக்காவின் மகனாகவே புளொட் அமைப்பில் சேர்வதற்கு அடிக்கடி அங்கு சென்று வந்து​கொண்​டிருந்​தான்.

ஒரு மாதத் தொடர் அலைச்​சலின் பின்னேதான் உயிருடன் பிடிக்​கப்பட்ட இயக்கப் போராளிகள் அங்கு எந்த இடத்தில் அடைத்து​வைக்​கப்​பட்​டிருக்​கிறார்கள் என்பதை அவன் கண்டு​பிடித்​தான். மிகுந்த போராட்​டத்தின் இடையே அவர்களைக் கண்டு​பிடித்​தாலும் அவர்களை மீட்பது என்பது ஐமிச்சம் என்பதை ஏற்றுக்​கொள்ள வேண்டி இருந்தது. இந்திய ராணுவ முகாமைத் தாக்காமல் புளொட் முகாமின் உள்ளே போவது சாத்தி​யமில்லை. இந்திய ராணுவத்​தையும் புளொட் இயக்கத்​தையும் ஒரே இடத்தில் எதிர்​கொள்வது பெரும் மோதலாக உருவெடுக்கும் என்பதால், அதைத் தவிர்ப்​ப​தில்தான் தலைமை கவனம் கொண்டிருந்தது.
அவர்களை மீட்கும் பொறுப்பு அவனிடம் மட்டுமே ஒப்படைக்​கப்​பட்டது. இந்திய ராணுவ முகாமைக் கடந்து கொண்டு​போகக்​கூடிய ஒரே ஆயுதம் உயிரா​யுதமான சயனைடு​தான். அவன் கேட்டுக்​கொண்ட சயனைட் குப்பிகள் அவனிடம் ஒப்படைக்​கப்​பட்​டன.

பெருமாள் முருகனின் ‘அரைஞாண்’ (காலச்சுவடு), கரன் கார்க்கியின் ‘கருந்துளை’ (சீர் வாசகர் வட்டம்), என்.ஸ்ரீராமின் ‘இரவோடி’ (பரிசல் புத்தக நிலையம்), சு.தமிழ்ச்செல்வியின் ‘பிள்ளைக்கனியமுதே’ (என்.சி.பி.எச்) ஆகிய புதிய நாவல்களின் பகுதிகளும் இந்து தமிழ் திசை தீபாவளி மலரில் இடம்பெற்றுள்ளன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in