பாடநூல் சொற்களும் தெரிந்த சொற்களும் | இணையகளம்

பாடநூல் சொற்களும் தெரிந்த சொற்களும் | இணையகளம்
Updated on
1 min read

‘வழலைக்கட்டி’ என்ற சொல்லுக்கு எத்தனை பேருக்குப் பொருள் புரியும்? அவர் பள்ளி ஆசிரியராகவோ, இரண்டாம் வகுப்புக் குழந்தையின் பெற்றோராகவோ இருக்கக் கூடாது.

என் பேரன் இரண்டாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க, என் மகள் போராட வேண்டியிருக்கிறது. அவன் படித்து மனப்பாடமாக எழுத வேண்டிய சொற்களைப் பாருங்கள்:-

கரிக்கோல், பனிக்கூழ், கழுத்துப்பட்டி, நிலைப்பேழை, வழலைக்கட்டி...

பென்சில் என்பது சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் தினமும் புழங்கக்கூடிய சொல். கரிக்கோல் என்பதை யார் பயன்படுத்துகிறார்கள்? இந்தத் தூய தமிழ்ச் சொல்லை வாசிப்பின் நுழைவாயிலில் இருக்கும் இரண்டாம் வகுப்புக் குழந்தை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன?

ஐஸ்கிரீம் என்பதற்குப் பதில் கடைக்குச் சென்று, “எனக்கு சாக்லெட் பனிக்கூழ் கொடுங்க” என்று குழந்தை கேட்டால் எப்படியிருக்கும்?

நிலைப்பேழை தூய தமிழ்ச் சொல். இதனை எத்தனை பேர் நம் வீடுகளில் இன்று பயன்படுத்துகிறோம்? Almirah என்ற சொல், அலமாரி என்று தமிழில் புழங்குகிறது. புதுச்சேரி பகுதியில் பிரஞ்சிலிருந்து வந்த பீரோ என்ற சொல்லைப் புழங்குவோம். ஜன்னல் என்ற போர்த்துக்கீசியச் சொல்லைச் சன்னல் என்று தமிழாக்கி, நாம் புழங்கவில்லையா?

காபிக்குக் குளம்பி என்று பெயர் சூட்டியதைப் போலச் சோப்புக்கு ‘வழலைக்கட்டி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதைப் பார்த்தவுடன் எனக்கு முன்கழுத்துக் கழலைக்கட்டிதான் நினைவுக்கு வந்தது. நல்ல வேளை பக்கத்தில் படம் இருந்தது! இல்லையென்றால், நான் இது ஏதோ உடம்பில் வரும் வழவழக் கட்டி என்று நினைத்திருப்பேன். பேரன், பேத்தி எடுத்த என் வயதுக்கு, நானே இப்போதுதான் இந்த வார்த்தையை முதல் முறையாகக் கேள்விப்படுகிறேன்.

வாசிப்பு இயக்கத்தில் பேராசிரியர் ச.மாடசாமியிடம், நான் இரண்டு முக்கிய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். 1. குழந்தைகள் வாசிப்பு மொழி மிக எளிமையாக இருக்க வேண்டும்; 2. அன்றாடம் புழக்கத்தில் இருக்கக்கூடிய, அவர்களுக்கு நன்கு தெரிந்த சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.

வழலைக்கட்டி, பனிக்கூழ் போன்ற தூய தமிழ்ச் சொற்கள், தனித்தமிழ் அகராதியில் இடம்பெற வேண்டியவை. இவற்றை நம் தமிழை எழுத்துக் கூட்டி வாசிக்கும் நிலையில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்கள் எதற்காகக் கற்க வேண்டும்? புழக்கத்தில் இல்லாத, கேள்வியேபடாத வார்த்தைகளைக் கொண்டு ஏன் இப்படிக் குழந்தைகளைப் பயமுறுத்த வேண்டும்?

ஏற்கெனவே ஆங்கிலவழிக் கல்வி பயிலும் குழந்தைகளுக்குத் தமிழ் என்றாலே, வேப்பங்காயாகக் கசக்கிறது. இவை போன்ற புழக்கத்தில் இல்லாத சொற்களைக் கட்டாயப்படுத்திப் படிக்க வைத்து, தமிழ் மீதுள்ள அவர்கள் வெறுப்பை இன்னும் அதிகரிக்கப் போகிறோமா?

- கலையரசி பாண்டியன், ஃபேஸ்புக் பதிவு

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in