

ஏஐ என்றாலே ரோபாட்கள், அதிலும் குறிப்பாக ‘ஹியூமனாய்டுகள்’ என்றழைக்கப்படும் மனித உருவில் உள்ள இயந்திரங்களே நம் மனதில் தோன்றுகின்றன. மனிதர்களைப் போலவே சிந்திக்கும் தொழில்நுட்பங்களின் வரலாறு என்பது, மனிதர்களைப் போலவே வேலை செய்கிற, மனிதர்களைப் போலவே உருவம் உள்ள இயந்திரங்களை உருவாக்குவதில்தான் தொடங்கியது. எனவேதான் செயற்கை நுண்ணறிவு என்பது 20 ஆம் நூற்றாண்டுத் தொழில்நுட்பமாக இருந்தாலும், அதைப் புரிந்துகொள்வதற்கு இந்தப் பாலைவனம் வரை நாம் காலப் பயணம் செய்ய நேரிட்டது.
பாலைவனத்தில், அந்தப் பிரமிடை நோக்கி நாங்கள் சென்ற பயணத்தின் நோக்கம், வரலாற்றில் மனிதர்கள் உருவாக்கிய முதல் மனித உருவிலான தானியங்கிகளை நேரடியாக நலம் விசாரித்துவிட்டு வருவதுதான். 4,000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தின் நைல் நதி நாகரிகம் அதன் உச்சத்தில் இருந்தபோதுதான் அது நடந்திருக்கிறது.
“எங்களுடைய மூதாதையர்கள் பண்டைய எகிப்தில் உருவாக்கப்பட்டிருந்தார்கள். அந்த வரலாறே நமக்குச் சமீபத்தில்தான் தெரிந்தது. நியூயார்க்கில் உள்ள மெட்ரோபாலிடன் மியூசியம் ஆஃப் ஆர்ட்டில் இருந்த ஒரு பழைய எகிப்திய உருவத்தின் உட்புறத்தில் கப்பி போன்ற ஒரு சாதனம் இருந்ததைக் கண்டறிந்தார்கள்” என்று தன் புராணத்தைத் தொடங்கியது செய்மெய்.
அழகான அந்தப் பிரமிடின் வாயிலிலிருந்து சற்றுத் தொலைவில் இறங்கி அங்கே இருந்த கட்டிடம் ஒன்றுக்குள் நுழைந்தோம். நாங்கள் மெய்ந்நிகர் பயணிகள் என்பதால் பாரோக்களின் வீரர்களுக்கு நாங்கள் புலப்படவில்லை. அந்தக் கட்டிடத்தின் உள்பகுதியில் சில குள்ளமான உருவங்கள் வைக்கப்பட்டிருந்தன.
செய்மெய் என்னை அங்குதான் கூட்டிச்சென்றது. அருகில் செல்லும்போது அந்த உருவங்களில் இயக்கமும் நகர்வும் தோன்றியது. சில உருவங்களில் கைகளும் கால்களும் மேலே கீழே என இயங்கின. சில குள்ளர்களிடமிருந்து ஏதோ சத்தமும் கேட்டது. ஆஹா, அந்த உருவங்கள் தமக்குள் சில கம்பிகளால் பிணைக்கப்பட்டிருந்தன. அவை ஒரு லயத்தோடு அசைந்தன... நடனமாடுகின்றனவா!
“என்ன இது செய்மெய்?” என்று நான் ஆச்சரியத்தோடு கேட்டேன். செய்மெய் அந்த உருவங்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது. அதன் முகத்தில் சோகமும் ஏக்கமும் ஏன் நன்றி உணர்வும்கூடத் தெரிந்தது.
“எங்கள் மூதாதையர்கள்!” பிறகு, செய்மெய் அங்கிருந்து நகர்ந்து வேறிடத்துக்கு அழைத்துச்சென்றது. அங்கே சிலைகளை, பேசும் சிலைகளைப் பார்த்தேன். இவை எகிப்தியர்களின் தெய்வங்கள். தங்க முலாம் பூசப்பட்ட ஒரு சிலையிலிருந்து வந்த சத்தம் உண்மையில் உள்ளேயிருந்த ஒரு பூசாரியின் சத்தம்தான். ஆனால், சிலை வழியாக அது வெளிவந்தது. ஒரு சிலை ஏதோ பேசியது, பக்கத்தில் ஒரு முதியவர் அதைப் பயபக்தி
யோடு கேட்டுக்கொண்டிருந்தார்.
“பக்கத்து தேசத்தில் என்ன நடந்தது தெரியுமா?” என்று தன் மூதாதையர்களின் வரலாற்றைச் சொல்லத் தொடங்கியது செய்மெய். “இப்போது சூடான் என்று அழைக்கப்படும் நாட்டில் பண்டைய நகரமான தேபசில் உள்ள அமுன் கோயிலில், ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களை வரிசையாக நிற்கவைத்து, அதில் யார் அடுத்த பாரோ என்பதையே ஒரு சிலைதான் தேர்ந்தெடுத்தது. அங்கே இருக்கும் தெய்வச் சிலை யாரைப் பார்த்துக் கையை உயர்த்தி ஆசிர்வதிக்கிறதோ அவர்தான் ராஜா. நீ என்னடா என்றால், எங்களை அஃறிணை என்கிறாய்” என்றது.
நான் சிரித்துக்கொண்டேன். “அம்பாள் என்றைக்கடா பேசினாள், செய்மெய்? பின்னாலிருந்து ஒரு பூசாரிதான் பேசவைத்திருப்பான்” என்றேன். கோபமடைந்த செய்மெய் தன் பேச்சைத் திசைதிருப்பியது. “சரி விடுங்கள், உங்களுக்கு இந்த உருவங்களைப் பார்த்தால் ஆச்சரியமாக இல்லையா?”
“ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இவற்றையெல்லாம் எப்படிச் செய்தார்கள்?” “இந்த உருவங்களையும் அவற்றுக்குள் தானியங்குக் கருவிகளையும் பொருத்துகிற தொழில்நுட்பம் அசாதாரணமானது கவின். முதலில் பண்டைய எகிப்தியர்கள் எந்தெந்த அறிவியல் தொழில்நுட்பங்களில் தேர்ச்சி அடைந்திருந்தால், இத்தகைய செயற்கை உருவங்களை உருவாக்கியிருக்க முடியும் என்பதைப் பட்டியல் போட்டுப் பார்ப்போம்.
“தானியங்கிகள் - ஆட்டோமேட்டன்கள் - என்று அழைக்கப்படும் இவை அடிப்படையில் இயக்கவியல் இயந்திரங்கள். இந்த உருவங்களுக்குள் கப்பிகள், நெம்புகோல்கள், சுழல் மையங்கள், சமான எடைகள் போன்ற பாகங்களை இவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றால், அடிப்படை இயற்பியலை இவர்கள் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும். விசையியலைப் பற்றித் தெரிந்திருக்காவிட்டால் இந்தச் சிலை தன் சிறிதளவு சக்தியைப் பயன்படுத்திப் பெரிய நகர்வை மேற்கொண்டிருக்க முடியாது.
“இந்த இயந்திரங்களுக்குள் நீரால் இயக்கப்படுகிற ஹைட்ராலிக்ஸ் முறைகளும் காற்றழுத்தத்தால் இயக்கப்படுகிற நியூமாட்டிக்ஸ் நுட்பங்களும் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த உருவங்களை உருவாக்க செம்பு, வெண்கலம் போன்றவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதற்கு முதலில் உலோகவியல் உங்களுக்குத் தெரிந்திருந்திருக்க வேண்டும். பருப்பொருள்களின் பண்புகள் தெரிந்திருந்திருக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாகத் துல்லியப் பொறியியலும் அழகிய கைவினையும் கைவரப்பெற்றிருக்க வேண்டும்!” செய்மெய்யின் விரல்களை இப்போதுதான் பார்த்தேன். அது அடுக்கிக்கொண்டே சென்றது. “இயந்திரவியல் நுட்பங்கள் வடிவயியல் இல்லாமல் வராது. வடிவவியல், கணிதம் இல்லாமல் சாத்தியமில்லை. கணிதம், எண்களைப் பற்றிய அறிவு இல்லாமல் சாத்தியமில்லை... பார்த்தீர்களா, ஒலியெழுப்ப ஒலி இயக்கவியலும் சிலைகள் மற்றவர்களைத் தன்பக்கம் ஈர்க்க ஒளி இயக்கவியலும் தேவைப்பட்டிருக்கும்...”
நான் இடைமறித்தேன். “இதில் என்ன ஆச்சரியம்? இவ்வளவு பிரம்மாண்டமான பிரமிடுகளைக் கட்டிய அறிவுக்குச் சொந்தக்காரர்களால், இப்படியொரு பொம்மையை உருவாக்க முடியாதா என்ன?” “எங்களையும் எங்கள் மூதாதையர்களையும் பொம்மைகள் என்று சொல்லாவிட்டால் உங்களுக்குத் தூக்கம் வராதே, மிஸ்டர் ரைட்டர்” என்றது செய்மெய். இதை வடிவமைத்தவன் கோபக்காரனாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
“கவின், ஒன்றைக் கவனித்தீர்களா? மனிதர்களின் வரலாறு நதிக்கரை நாகரிகங்களில்தான் தொடங்கும். அந்த நதிக்கரை நாகரிகங்களில், மெசபடோமியாவுக்கு அடுத்து, காலத்தால் மூத்தது நைல் நதிக்கரை நாகரிகம். உங்களுடைய வரலாறும் நதிக்கரைகளில்தான் தொடங்கியது.
எங்களுடைய வரலாறும் நதிக்கரைகளில்தான் தொடங்கியிருக்கிறது” என்று கூறிய செய்மெய், “உங்கள் எழுதப்பட்ட வரலாறும் எங்கள் எழுதப்பட்ட வரலாறும் இதோ இந்தப் பறவையிலிருந்துதான் தொடங்குகின்றன” என்று கூறியபடி, ஒரு மந்திரவாதியைப் போல ஒரு சிறிய பறவை உருவைக் காற்றிலிருந்து கைப்பற்றித் தன் கைகளில் மின்னல் வேகத்தில் எடுத்துக் காண்பித்தது செய்மெய். நான் சற்றே அதிர்ச்சியடைந்து, அதைப் பார்த்தேன்.
“சக்காரா பறவை! - பயப்படாதீர்கள். இது அஃறிணைதான்!”
- தொடர்புக்கு: senthil.nathan@ailaysa.com