Published : 10 Jun 2018 09:35 AM
Last Updated : 10 Jun 2018 09:35 AM

பிளாஸ்டிக் தடை சாத்தியமா?

பி

ளாஸ்டிக்கைத் தடைசெய்து அறிவித்திருக்கிறது தமிழக அரசு. அணு உலை, நியூட்ரினோ, மீத்தேன் என எப்போதுமே கொதிநிலையில் இருக்கும் தமிழகத்தில் நீண்டகாலத்துக்குப் பிறகு சுற்றுச்சூழலுக்குத் தோழமையான குரல் கேட்பது வரவேற்புக்குரியது.

தமிழக அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு அறிவிப்பின் மூலம், பூமியை விழுங்கிக்கொண்டிருக்கும் பூதத்தின் ஒற்றை ரோமத்தில் லட்சத்தில் ஒரு சிறு புள்ளியைத் தொட முனைந்திருக்கிறோம்; அவ்வளவுதான்! ஏனெனில், பிளாஸ்டிக் எனப்படுவது பிளாஸ்டிக் மட்டுமல்ல, அது உலக நாடுகள் முழுவதையும் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கும் பெட்ரோலியத்தின் இன்னொரு வடிவமும்கூட!

பிறந்த குழந்தைக்கு தாயின் முலைக் காம்புக்கு பின்பாக முதலில் சுவைக்க பால் ரப்பரை கொடுப்பதிலிருந்தே தொடங்குகிறது பிளாஸ்டிக்கின் நெடும் பயணம். அதிகாலையில் நாம் கரம் பிடிக்கும் பல் விளக்கும் பிரஷில் தொடங்கி பேஸ்ட் குப்பி, சோப்புக் கவர், ஷாம்பு கவர், சவரம் செய்யும் ரேஷர், சவர லோஷன் குப்பி, தேங்காய் எண்ணெய் டப்பா, குடிநீர் பாட்டில், பால் பாக்கெட், பிஸ்கெட் பாக்கெட், சாம்பார் மசாலா கவர், கோதுமை மாவு பாக்கெட், தோசை மாவு கவர், பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் வாழைஇலை, சிகரெட் பாக்கெட், லைட்டர் சாதனம், டீக்கடை தொடங்கி டாஸ்மாக் வரையில் புழங்கும் பிளாஸ்டிக் டம்ளர்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், சோடா, குளிர்பான புட்டிகள், கடைசியாக ‘காண்டம்’ வரை அத்தனையும் பிளாஸ்டிக்தானே. மேற்கண்ட எதுவுமே நீண்டகாலம் வைத்துப் பராமரிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் அல்ல. அத்தனையும் உபயோகித்த பின்பு தூக்கி எறியும் நாசகாரப் பொருட்களே. பிளாஸ்டிக் தயாரிப்பு மூலம் கிடைக்கும் லாபத்தை இழக்க பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சம்மதிக்காது. மேலும், பிளாஸ்டிக் உற்பத்தி என்பது நாட்டின் முதுகெலும்பான பொருளாதாரத்துடன் மிக நேரடியான தொடர்பில் இருக்கிறது. சோப்பு, ஷாம்பு தொடங்கி உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள் வரை விற்பனை செய்ய பெருமளவிலான பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் அனைத்துமே பன்னாட்டு நிறுவனங்களே.

பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பசுமைத் திருமணங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் என இதுதொடர்பில் நீண்ட காலமாக செயல்பாட்டிலிருப்பவர் ரமேஷ் கருப்பையா. “பிளாஸ்டிக் ‘கேரி’ பைகளுக்கு மாற்றாக மக்கும் இழைகளாலான துணிப்பைகளை பயன்படுத்தலாம். இதற்கு பருத்தியை மட்டுமே நம்பியிருக்க வேண்டியதில்லை. பனை நார், ஈச்சம் நார், கற்றாழை நார், புளிச்ச கீரை நார், வைக்கோல் உறி, மனித தலைமுடி உட்பட பல்வேறு பொருட்களிலிருந்து மக்கும் துணிகளைத் தயாரிக்க முடியும். தேங்காய், பனை ஓடுகள், மட்டைகள், தாவரங்கள், மரங்களின் இலைகளை ஒருமுறை பயன்படுத்தும் குவளைகளுக்காகப் பயன்படுத்தலாம். வட மாநிலங்களில் தேநீர், குளிர்பானக் கடைகளில் ஓரிரு முறை மட்டுமே பயன்படுத்தும் வகையில் சுடாத மண் குவளைகளை பயன்படுத்துகிறார்கள். அதனைப் பின்பற்றலாம். உலகம் முழுவதும் ஓர் ஆண்டில் 30 ஆயிரம் கோடி லிட்டர் பாட்டில் குடிநீர் புழங்கப்படுகிறது. ஆனால், நாம் குடிக்கும் ஒரு லிட்டர் பாட்டில் குடிநீரில் சராசரியாக 0.1 மில்லி மீட்டர் அளவு கொண்ட பிளாஸ்டிக் துகள் கலந்திருக்கின்றன. இதை பொதுக் குடிநீர் திட்டங்கள் மூலம் கட்டுப்படுத்தலாம். இவை மட்டுமின்றி, பயோ பிளாஸ்டிக் எனப்படும் ‘ஆக்ஸி - பயோ டிகிரேடபுள் பிளாஸ்டிக்’, ‘ஹைட்ரோ - பயோ டிகிரேடபுள் பிளாஸ்டி’ உற்பத்தி, பயன்பாட்டை அரசுகள் ஊக்குவிக்க வேண்டும். பிளாஸ்டிக்கை உட்கொள்ளும் நுண்ணுயிரிகள் தொடர்பான ஆராய்ச்சிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும். இவை எல்லாம் நடந்தால் பிளாஸ்டிக்கை ஓரளவு கட்டுப்படுத்தலாம்” என்கிறார் ரமேஷ் கருப்பையா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x