எழுத்துகளே உயிர்; எழுத்தாளர்களே தெய்வங்கள்

எழுத்துகளே உயிர்; எழுத்தாளர்களே தெய்வங்கள்
Updated on
2 min read

காலாண்டு விடுமுறைகளில், மைசூரு மண்டலக் கல்வி நிறுவனத்தில் (RIE) நடைபெற்ற பள்ளி நூலகச் சான்றிதழ் வகுப்பில் தமிழ்நாட்டில் இருந்து கலந்துகொண்ட பத்துப் பேரில் நானும் ஒருவன். ஆறு நாள்கள் நடந்த பயிற்சி, முக்கியத்துவம் வாய்ந்தது. பள்ளியின் நூலகம் என்கிற பாடத்தை விட, செயல்பாட்டு அனுபவம்தான் எங்களுக்கு முக்கியமாகக் கற்பிக்கப்பட்டது. பள்ளியின் நூலகத்தை மேம்படுத்துவது என்பது, மாணவர்களை மேம்படுத்துவதுதான் என்பதைப் புரிய வைத்தார்கள். ஒரு மாணவனை ஒரு வாசகனாக மாற்றும் வித்தையை அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள். நூலகம் அதைத்தான் செய்ய வேண்டும் என்று பாடம் எடுத்த பேராசிரியர்கள், திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்கள்.

மாலை வேளைகளில், இரவு பத்து மணி வரை, மைசூரு பல்கலைக்கழகத்தில், திறந்தவெளியில் தினமும் நடைபெறும் நடன நிகழ்வுகளுக்குச் சென்று வருமாறு பேராசிரியர்கள் கேட்டுக் கொண்டனர். திறந்தவெளி முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அமர்ந்து நிகழ்வை ரசித்துக்கொண்டிருந்தனர். தமிழ்நாட்டில் இருந்து வருகிறோம்; ஆசிரியர்கள் என்ற அடையாளத்துடன், முக்கிய விருந்தினர் பகுதியில், மேடைக்கு அருகே அமர்ந்தோம். அவர்களின் பாடல்களில் தொன்மக் கதைகளும் பாடல்களும் ஒலித்தன. நடனங்களில் கிராம தெய்வங்களும் நடனம் ஆடின. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடந்த நிகழ்வில், எங்கும் திரைப்படப் பாடல்கள் இல்லை. எப்படி இது அங்கே சாத்தியம் ஆகிறது என்பதும் புரியவில்லை?

ஆனால், கடைசி நேரத்தில் நடந்த நிகழ்வு, தமிழ்நாட்டில் இருந்து சென்ற எனக்குள் ஒருவிதமான அசெளகரியத்தை உருவாக்கிவிட்டது. இது கடைசி நிகழ்வு என்று அறிவிக்கிறார்கள். கன்னட உயிர் எழுத்துகளைத் தாங்கிய பலகைகளைக் கொண்டு வந்து வரிசையாக நிற்கிறார்கள். அவர்கள் பின்புறம், சிலுவை போன்ற ஒரு பெரிய நீண்ட கம்பத்தின் மேல், பதாகை பாய்போலச் சுருட்டப்பட்டிருந்தது. ஒருவர் எல்லோரையும் எழுந்து நிற்குமாறு அறிவிக்கிறார். பல்லாயிரக்கணக்கான மக்கள் எழுந்து நிற்கிறார்கள். உயிர் எழுத்துகளைக் காட்டி, “இது நம் உயிர்; நம் எழுத்து” என்கிறார்கள். ஒவ்வொரு எழுத்தாக மேடையில் இருப்பவர் சொல்லிக்கொண்டு வருகிறார். பல்லாயிரக்கணக்கான மக்களும் ஒரே தொனியில் உயிரெழுத்துகளை ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். இது ஒரு கனவைப் போல் இருந்தது. இது “நம் உயிர்” என்கிறார்கள். திடீரென்று பின்புறத்தில் நின்றவர்கள், பதாகையைப் பிரிக்கிறார்கள். மேலிருந்து பதாகைகள் பிரிந்து விரிந்து கீழே தாழ்கின்றன. கன்னடத்தின் சொத்து என்று சொல்லப்படும் மாஸ்தி வெங்கடேச அய்யங்கார், குவெம்பு, யூ.ஆர்.அனந்த மூர்த்தி, பைரப்பா, கிரிஷ் கர்னாட் முகங்கள் அந்தப் பதாகைகளில் சிரித்துக்கொண்டிருக்கின்றன. “இவர்கள் நம் எழுத்தாளர்கள்; இவர்கள் நம் மண்ணின் தெய்வங்கள்” என்று மேடையில் இருப்பவர்கள் ஆரவாரம் செய்கிறார்கள். பல்லாயிரக் கணக்கான மக்களும் அதையே ஒலிக்கிறார்கள். நான் ஒரு எழுத்தாளன்/ஒரு வாசகன் என்ற அடிப்படையில், நானும் என்னை அறியாமலேயே ஆரவாரம் இடுகிறேன். கன்னட எழுத்தாளர்கள் மறைந்த பிறகும் ஆரவாரம் குறையவில்லை. நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்தபடியே விடுதி திரும்பினோம்.

அடுத்த நாள் காலையில், ஒவ்வொரு பள்ளி நூலகத்தையும் ‘e-granthalaya’ மென்பொருள் மூலம் கணினி ஆக்குவது எப்படி என்று சொல்லிக் கொடுத்தார்கள். அவர்கள் கல்வித் தொழில்நுட்பம் சார்ந்து கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும், அதிக பதில் சொன்னது தமிழ்நாடு மட்டுமே. மற்ற மாநிலங்களை விடத் தமிழ்நாடு ஆசிரியர்கள் ஒரு படி மேல்தான். நாம் பரந்துபட்ட அறிவு உடையவர்கள் என்பது அங்கே போன பிறகுதான் தெரிந்தது. நூலகத்தை ஒழுங்குபடுத்துவது, மாணவர்களுக்குப் புத்தகங்களைத் தருவது, மாணவர்களை வாசிக்க வைப்பது, கலந்துரையாட வைப்பது, அவர்களைப் படைப்பாளி ஆக்குவது, முகநூல், வலைப்பூக்களை உருவாக்கி மாணவர்களின் படைப்புகளைப் பதிவேற்றுவது, பழைய நூல்களை எண்ம வடிவில் தயாரித்து, வலைப்பூவில் பதிவேற்றுவது, முக்கியமாக நூலகம் செல்லும் ஒரு மாணவன் வெளியே வரும்போது, ஒரு படைப்பாளியாக மாற வேண்டும் என்று செயல்படுவது எனப் பல விஷயங்களை அவர்கள் கற்றுத் தந்தார்கள். மற்ற மாநிலங்களைவிட நம் மாநிலத்தில்தான், இளம்வாசகர் வட்டம், சிறார், கனவு ஆசிரியர் இதழ்கள், வாசிப்பு இயக்கப் புத்தகங்கள் நடைபெறுகின்றன. பயிற்சிக்கு வந்திருந்த தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, லட்சதீவு, பாண்டிச்சேரி நபர்கள் இப்போதுதான் அந்தப் பணிகளை, இப்பயிற்சியிலிருந்து தொடங்குகிறார்கள். கடைசி நாளில், தமிழ்நாட்டைப் போல் செயல்படுங்கள் என்று ஒருங்கிணைப்பாளர் அரங்கில் சொன்னபோது, சொல்ல முடியாத பெருமிதத்தை அடைந்தோம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in