Published : 17 Aug 2014 12:00 AM
Last Updated : 17 Aug 2014 12:00 AM

கிராமஃபோன்: காற்றில் பறந்த துண்டு

அந்நாளில் மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் துண்டு ஒரு தவிர்க்க முடியாத ஆடையாக இருந்தது. அப்போதெல்லாம் 50 வயதைக் கடந்த ஆண்கள் சட்டை போடுகிறார்களோ இல்லையோ, துண்டு போட்டுக்கொள்ளாமல் வெளியே செல்ல மாட்டார்கள். துண்டை மடித்து வலது தோளில் போட்டுக்கொண்டோ அல்லது அதை நன்றாக மடித்தோ, விரித்தோ கழுத்தைச் சுற்றிப் போட்டுக்கொண்டோதான் வெளியில் செல் வார்கள். மறதி காரணமாக துண்டு போடாமல் வெளியே சென்றவர்கள், உடலில் ஏதோ ஒன்று குறைந்ததுபோல் உணர்வார்கள். எல்லா சமுதாயத் தினரும், ஏதோ ஒரு விதத்தில் துண்டைப் பயன் படுத்திவந்தனர்.

ஆறு, குளங்களில் இடுப்பில் கட்டிக்கொண்டு குளிக்கவும், குளித்தபின் தலையைத் துவட்டிக் கொள்ளவும் துண்டு பயன்பட்டது. நீர்நிலைகளில் இடுப்பளவுக்கு மேலுள்ள ஆழத்தில் நின்று குளிப் பவர்கள், குளித்து முடிந்ததும் இடுப்பில் கட்டியிருந்த துண்டை உருவி, அதைப் பிழிந்து தலையைத் துவட்டிவிட்டு பின்னர் ஆழம் குறைந்த பகுதிக்கு வந்ததும் மீண்டும் இடுப்பில் கட்டிக்கொண்டு லாவகமாக மேலே ஏறி வருவார்கள். குளித்துவிட்டுத் துண்டை மட்டும் இடுப்பிலே கட்டிக்கொண்டு தெருவழியே வரும் தைரிய புருஷர்களும் உண்டு.

கைத்தறி ஆடை தயாரிக்கும் பகுதிகளில் பாவு ஆற்றும்போது பா(வு)க்களத்தில் துண்டின் பயன்பாடு மிக அதிகம். பெரும்பாலும் பெரியவர்கள் துண்டைத் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு பாக்களத்தில் நின்று பாவாற்றுவார்கள். திடீரென்று சாரல் மழை வந்துவிட்டால், தலை நனையாமல் அந்தத் தலைப்பாகை பாதுகாக்கும்.

சில ஆலிம்ஷாக்கள் தொப்பி அணிவதற்குப் பதிலாகப் பெரிய துண்டைத் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு வெளியே வருவார்கள். துண்டால் தலைப்பாகை கட்டிக்கொண்டு இரண்டாம் ஆட்டம் தியேட்டருக்கு வரும் உள்ளூர் பிரமுகர்கள் உண்டு.

வெளியூர் சென்றுவிட்டு ஊர் திரும்ப இயலாத வர்கள் பள்ளிவாசல்களிலோ தர்ஹாக்களிலோ தங்க நேரிடும்போது, துண்டை விரித்துப் படுத்துக் கொள்வார்கள். தர்ஹாக்களில் மவுலூது ஓதி பலாச் சோறோ பொரியோ வழங்கும்போது துண்டை விரித்து அதில் வாங்கிக்கொள்வார்கள். சண்டைச் சச்சரவு வரும்போது கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்கியவர்களும் உண்டு. கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கிக் கடனை வசூலித்தவர்களும் உண்டு.

மாப்பிள்ளைமார் துண்டு

அப்போதெல்லாம், கல்யாணத்தின்போது மாப்பிள்ளைமார்கள் இடுப்பில் துண்டைக் கட்டி யிருப்பார்கள். அது பெரும்பாலும் ஜரிகைக் கரை போட்ட துண்டாக இருக்கும் (பட்டு கலந்த மெல்லிய துணி). மாப்பிள்ளை ஜோடனையின்போது மச்சான் - மாமா உறவுமுறை கொண்டவர்கள் மாப்பிள்ளைக்குத் துண்டு அணிவிப்பார்கள்; செல்வாக்கான மாப்பிள்ளைகள் சிலருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட துண்டுகள் விழும். திருமணம் முடிந்த மறுநாள், துண்டுகளை எண்ணிப்பார்த்து வாப்பாமார்கள், அண்ணன் தம்பிமார்கள், மச்சான் மார்கள் என அனைவருக்கும் அவற்றைக் கொடுப் பார்கள். அவர்களின் ஓராண்டுக்குரிய துண்டு தேவையை இது துண்டுவிழாமல் பூர்த்திசெய்யும். சுன்னத் என்னும் விருத்தசேதனம் செய்யப்படும் சிறுவர்களுக்கு இடுப்பில் சிறிய துண்டு கட்டுவது அப்போதைய வழக்கம்.

ஒருவர் பொய் சொல்வதாகத் தெரிந்தால், “நீ சொல்வது உண்மையானால், இந்தத் துண்டைப் போட்டுத் தாண்டு” என்று சொல்வார்கள். பொய்யுரைப்பவர் அதனைச் செய்யத் தயங்குவார். துண்டுக்கு அத்தனை புனிதம் இருந்தது.

வீட்டுக்குள் சிறைப்பட்ட துண்டு

துண்டுகளில் பல ரகங்கள் உண்டு. வண்ணக் கைத்தறித் துண்டு, வெள்ளைக் கைத்தறித் துண்டு, ஜரிகைக் கரை போட்ட துண்டு என பல ரகங்கள் இருந்தன. சில ‘மைனர் புள்ளிகள்' ஜரிகைக் கரை போட்ட துண்டுடனோ பட்டுத் துண்டுடனோ தெருக் களில் வலம் வருவார்கள். ஆனால், இன்றைக்குத் துண்டின் பயன்பாடு முன்னைப் போல் இல்லை. மிகச் சிலரே துண்டு போட்டுக்கொண்டு வெளியில் செல்கின்றனர். இப்போது பெரும்பாலோர் வீட்டிலேயே குளிப்பதால், இடுப்பில் கட்டிக்கொண்டு குளிக்க, குளித்தபின் தலை துவட்ட என அதன் பயன் பாடு சுருங்கிவிட்டது. ஒரு காலத்தில் மனிதர்களின் தோள்களிலும் கழுத்துகளிலும் இடுப்புகளிலும் கம்பீரமாக வலம்வந்த துண்டு, இப்போது வீட்டுச் சிறைக்குள் அடைபட்டுக் கிடக்கிறது.

ஒரு சமூகத்தின் பொருள் உற்பத்தி முறையில் மாற்றம் ஏற்படும்போது, அது சமூகத்தின் பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் என அனைத்து அம்சங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார் கார்ல் மார்க்ஸ். நமது சமூகத்தைப் பொறுத்த அளவில் கடந்த 40 ஆண்டுகளில் பொருள் உற்பத்தி முறை முற்றிலும் மாறிவிட்டது. அந்த மாற்றம்தான் துண்டின் பயன்பாட்டையும் சுருக்கி விட்டதோ?

- சேயன் இப்ராஹிம்,ஓய்வுபெற்ற அஞ்சல்துறை உதவிக் கண்காணிப்பாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x