எஸ்.சுவாமிநாதன்
எஸ்.சுவாமிநாதன்

அதிசயத்துக்கு ஓர் அரிய விருது!

Published on

கர்னாடக இசை மேடைகளில் வாய்பாட்டுக் கச்சேரிகளில் பாடகருக்குப் பின்னணியில் சுருதி சேர்க்கும் தம்புரா கலைஞரைப் போல், நாகஸ்வர மேடைகளில் தாளம் போடும் கலைஞரும் அங்கீகரிக்கப்படாத கலைஞராகவே இருப்பார். இப்படிப்பட்ட தாளம் போடும் கலைஞரையும் அங்கீகரித்து, அவரைப் பாராட்டும் முன்முயற்சியைப் பரிவாதினி அமைப்பு தொடங்கியிருக்கிறது.

கணிதம், அறிவியல் எனத் துறைசார்ந்து அனுபவமிக்க ஒருவரின் திறமையை உயர்வு நவிற்சியாக ‘அவர் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சரியாகச் சொல்லிவிடுவார்’ என்பார்கள். ஆனால், நல்ல தூக்கத்திலிருந்து எழுந்தாலும் நாகஸ்வரக் கச்சேரிகளில் சரியான காலப் பிரமாணத்தில் தாளம் போடுபவர் என்று கர்னாடக இசை உலகில் புகழப்பட்டவர், பொறையாறு (தட்சா) தட்சிணாமூர்த்தி. இந்தக் கலைஞருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ‘தட்சிணாமூர்த்தி விரு’தை இந்த ஆண்டு முதல் சிறந்த நிர்ணயத்துடன் தாளம் போடும் ஒரு கலைஞருக்கு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அரிய செயலுக்குக் காரணமானவர்கள் லலிதா ராம், சுவாமிமலை சரவணன் ஆகியோர்.

தாளக் கலைஞர் திருப்புங்கூர் எஸ்.சுவாமிநாதனுக்கு ‘தட்சிணாமூர்த்தி விருது’ அண்மையில் நடந்த நவராத்திரி விழாவில் வழங்கப்பட்டது. தனது எட்டாவது வயதில் தொடங்கி 45 ஆண்டுகளுக்கு மேல் தாளக் கலைஞராக இருப்பவர் சுவாமிநாதன். திருமெய்ச்சூர் சகோதரர்கள் குழுவில் மட்டும் 25 ஆண்டுகளுக்கு மேல் தாளக் கலைஞராக இருந்தவர். தவில் மேதை திருநாகேஸ்வரம் சுப்ரமணியத்தின் நுட்பமான கணக்குகளுக்குப் பிசகாமல், பல ஆண்டுகள் தாளம் போட்டு பாராட்டுகளைப் பெற்றவர் இவர். சில ஆண்டுகளுக்கு முன் நடந்த தாள வாத்தியக் கச்சேரியில், தவில் மேதை திருப்புங்கூர் முத்துக்குமாரசாமிக்கு சுவாமிநாதன் தாளம் போட நேர்ந்தது. அந்தக் கச்சேரியை நேரில் கண்டு களித்த ‘சங்கீதக் கலாநிதி’ உமையாள்புரம் சிவராமன், சுவாமிநாதனின் தாள நிர்ணயத்தைப் பிரத்யேகமாகக் குறிப்பிட்டுப் பாராட்டி, ‘அவர் ஓர் அதிசயம்’ என்றும் தெரிவித்தார். எஸ்.சுவாமிநாதனுக்கு தவில் மேதை டி.ஆர்.கோவிந்தராஜன் விருது வழங்கினார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in