

த
னது படைப்புகளால் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்ற இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். நீண்ட உரையாடலிலிருந்து...
உலகத்தில் இருக்கிற ஒவ்வொரு பெரிய அரசாங்கத்திடமும் இதுபோன்ற ஒரு அணி இருக்கு என்பது பலருக்கும் தெரியும். அமெரிக்காவில் சிஐஏ, இந்தியாவில் ‘ரா’ உளவு ஏஜென்ட்கள் இருக்கிறார்கள். பாதுகாப்பு வளையத்துக்குள் அரசாங்கத்தைக் கொண்டுவருவதுதான் அவர்களது முக்கிய பணி. அரசாங்கத்தின் பாதுகாப்புப் பணிகள் போன்றவற்றைத் தாண்டி அதிகாரபூர்வமற்ற ஒரு அணி, அரசாங்கத்துக்காக எப்போதுமே பணிபுரியும். சில முக்கியமான பணிகளுக்கு மட்டுமே அரசாங்கம் இவர்களைப் பயன்படுத்தும். அந்த மாதிரியான ஒரு டீமைப் பற்றிய படம்தான் ‘துருவ நட்சத்திரம்’. இது ஒரு அணியைப் பற்றிய படம்தான் என்றாலும் எனது முந்தைய படத்தைப் போலவே, விக்ரம் சாருடைய ‘துருவ்’ கேரக்டரை மட்டும் பெருசுபடுத்தியிருக்கிறேன். யார் இவர், இந்த அணிக்குள் ஏன் வந்தார், இப்போ என்ன பிரச்சினை என்பதுதான் திரைக்கதை.
‘துருவ நட்சத்திரம்’ கதையைத்தான் ரஜினி சாரிடம் சொன்னேன். தாணு சார்தான் கூட்டிட்டுப்போனார். காலையில் கதையைக் கேட்டவுடன், ‘சூப்பரா இருக்கு. யாரெல்லாம் தொழில்நுட்பக் கலைஞர்கள், எவ்வளவு நாள் தேவைப்படும்’ என்று கேட்டார். ‘படம் பண்ணலாம். நீ யாரிடமும் சொல்லாதே. இச்செய்தி தீயா பத்திக்கும். வீட்டில் மட்டும் சொல்லிடு’ என்று சந்தோஷமாக என்னை அனுப்பிவைத்தார் தாணு. நானும் டீமுடன் உட்கார்ந்து, எப்படிப் பண்ணலாம் என்று உடனே ப்ளான் பண்ணிட்டு இருந்தேன்.
மாலையில் தாணு சார் போனில், ‘இல்லடா... ஏதோ பிரச்சினை என்று நினைக்கிறேன். ரஜினிகிட்ட யாரோ ஏதோ சொல்லிட்டாங்க. இப்போது நடக்காது. நான் இரஞ்சித்தை வச்சுப் பண்ணப்போறேன்’ என்று சொன்னார். இதுதான் நடந்தது. யார் என்ன சொன்னாங்கன்னு எதுவுமே தெரியாது. நல்லவங்க யாரோ, ஏதோ சொல்லியிருக்காங்கனு மட்டும் தெரியும்!
‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ உடனடியாக முடியும் என்று நினைத்து தொடங்கினோம். ஆனால், வெற்றிமாறன் படத்துக்கு தனுஷ் போவதால், 4 மாசத்துக்கு ஷூட்டிங் இருக்காது என்று தெரிந்துவிட்டது. சும்மா உட்கார்ந்திருப்பதற்கு, வேறொரு படம் பண்ணலாம் என்று அதே ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ நிறுவனத்துடன்தான் ‘துருவ நட்சத்திரம்’ படமும் தொடங்கினேன். வேறொரு தயாரிப்பாளருக்குப் படம் பண்ணினால்தானே தப்பு?