சங்கக் கவிதை, மலையாளிகளுக்குமானதுதான் - நேர்காணல்: பி.ராமன்

சங்கக் கவிதை, மலையாளிகளுக்குமானதுதான் - நேர்காணல்: பி.ராமன்
Updated on
4 min read

பி.ராமன்​, மலை​யாளக்​ க​விஞர்​. கேரளத்​தில்​ பழங்​குடி மொழியில்​ க​விதைகள்​ உருவாகக்​ ​காரண​மாக இருந்​தவர்​. கேரள சாகித்​தி​ய அ​காட​மி ​விருதை இரு​முறை பெற்​றவர்​. தமிழ்க்​ க​விதைகளை மலை​யாளத்​தில்​ மொழிபெயர்த்து​வருபவர்.​ ஆகு​தி நிகழ்ச்​சிக்​காக சென்னை வந்​திருந்​த அவரைச்​ சந்​தித்​து உரை​யாடியதன்​ சுருக்​கம்​ இது.

தமிழ்க்​ க​விதைகளை ஒப்​பிடும்​போது மலை​யாளக்​ க​விதைகள்​ எப்​படி இருக்​கின்​றன?

மலை​யாளக் கவிதைகள் உச்சஸ்​தா​யியி​லானவை; கருத்தை அடிப்​படை​யாகக் கொண்டவை. இதனால், மலையாளக் கவிதைகள் ஒரு காலக்​கட்டம் வரை போதனையாக இருந்தன. 17, 18ஆம் நூற்றாண்டு வரை இந்து மத இலக்கி​யத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மலையாளக் கவிதையின் வேர் இந்த ஆழத்தில்தான் கிடக்​கின்றது. தமிழுக்குச் சங்கக் கவிதைகளின் பாரம்​பரியம் இருக்​கிறது. தமிழிலும் இடைக்​காலத்​தில் மத போதனைகள் இருந்தன. ஆனால், தமிழ்க் கவிதையின் வேர் சங்கக் கவிதை​யில்தான் இருக்​கிறது. அதனால்தான் தமிழ்க் கவிதைகள் அனுபவமாக இருக்​கின்றன. இந்தச் சங்கக் கவிதைகள் மலையாளிக்குமானதுதான். மொத்த திராவிடர்களுக்குமானது.

ஒரு நவீன மாற்றத்​துக்குப் பிறகு, தமிழ்க் கவிதையில் ஒரு மேற்கத்​தி​யமய​மாக்கல் நடந்து​வரு​கிறது. சங்கப் பாரம்​பரி​யத்தைத் திரும்​பப்​பெறவும் முயற்சி நடக்கிறது. நம்முடைய கவிதை என்பது ஓசைகள் நிறைந்​தது​தான். அது நம் பண்பாடாகும். இதைப் ‘பாட்டு’ எனச் சொல்லி நிராகரிப்பது சரியா? நவீனத் தமிழ்க் கவிதை இதைத்தான் செய்தது.

சந்தம் அவ்வளவு முக்கி​யத்துவம் மிக்கதா?

சந்தம் ஒரு கருவி. தேவைப்​படும் இடங்களில் அதை எடுத்துப் பயன்படுத்த முடியும். உதாரணமாக, 1960களில் க.நா.சுப்​ரமண்யம், சுந்தர ராமசாமி, பிரமிள் போன்று 10, 20 பேர்தான் கவிதை எழுதி வந்தார்கள். அவர்கள் ஒவ்வொரு​வருக்கும் வித்தி​யாசமான ஒரு நடை இருந்தது. இன்றைக்குத் தமிழில் லட்சக்​கணக்கான கவிஞர்கள். ஆனால், லட்சக்​கணக்கான நடையை அவர்களால் உருவாக்க முடிந்ததா, எல்லாரும் எழுதுவது ஒரே மாதிரி​யாகத்தானே இருக்​கிறது?

மலைச்சாமி மாதிரி தமிழிலேயே கவனம் பெறாத கவிஞரையும் வாசித்திருக்​கிறீர்​களே...

தமிழ்க் கவிதைகள் எழுத்​தாளர் ஜெயமோகன் வழிதான் அறிமுக​மாயின. ஜெயமோகன் ஒருங்​கிணைத்த கவிஞர் கலாப்​ரி​யாவின் குற்றால முகாமில்தான் தமிழ் - மலையாளக் கவிஞர்கள் சந்திப்பில் கலந்து​கொண்​டேன். அங்குதான் தமிழ்க் கவிதைகள் அறிமுகம் கிடைத்தன. அதிலிருந்​துதான் தமிழ்க் கவிதைகளில் என்ன நடந்து​கொண்​டிருக்​கிறது என்பதைத் தெளிவாக அறிந்​து​கொள்ள முடிந்தது. மலையாளக் கவிதைகளில் இல்லாத தமிழ்க் கவிதையின் தன்மை என்னை வசீகரித்தது. ஜெயமோக​ன் மு.சுயம்​புலிங்​கம் கவிதைகள் பற்றிச் சொன்னார். தமிழில் அறியப்படாத கவிஞர்கள் பலர் இருக்கிறார்கள் என்பது புரிந்தது.

மலையாள நவீனக் கவிதைகள் எப்படி இருக்​கின்றன?

மலையாளத்தில் நவீனக் கவிஞர்​கள்கூட நம் பாரம்​பரியக் கவிதையின் சந்தத்தைப் பூரணமாகக் கைவிட​வில்லை. ஐயப்பப் பணிக்கர் இதற்குச் சிறந்த உதாரணம். அவர் கவிதையில் உரைநடையையும் பயன்படுத்து​வார். சந்தத்​தையும் பயன்படுத்து​வார். தமிழில் இதுபோல ஞானக்​கூத்தனை மட்டுமே சொல்ல முடியும். ஞானக்​கூத்தன் சந்தங்​களின் சாத்தி​யங்களை அடையாளம் கண்டு​கொண்ட ஒரு கவிஞர். தமிழ் நவீனக் கவிதை பூரணமாக இந்தச் சந்தங்​களைக் கைவிட்டு​விட்டது. ஆனால், இந்தத் தமிழ் நவீனக் கவிதையின் சந்தமற்ற தன்மை ஓர் இடத்தில் போய் முடிவடைய வாய்ப்​பிருக்​கிறது. அந்த இடத்தில் தமிழ் நவீனக் கவிதை சந்தங்​களோடு புதிய பயணத்தைத் தொடரும்.

உங்களது கவிதைகள் சில உரைநடை விவரிப்பு மொழியிலும் சில சந்த மொழியிலும் இருக்கின்​றன...

என் தொடக்கக் கால கவிதைகள் முழுவதும் ஒரு படிம முறையில் அமைந்தவை. இந்த விவரிப்பு மொழியை வைத்துத் தொடர்ந்து பயணிக்க முடியாது என்று ஒரு நிலை வந்தது.

அக்கா​மாதே​வியின் ஒரு கவிதை இருக்​கிறது. ஒரு பட்டுப் பூச்சி, தன் சொந்தப் பட்டு நூலில் சிக்கி உயிரிழக்​கும். அதுபோல் கவிஞன் தன் சொந்த விவரிப்பு மொழியில் சிக்கிக்​கொள்​கிறான். இந்தச் சவாலை நாம் எதிர்​கொள்ள வேண்டும். இந்த விதத்தில் ஐயப்பப் பணிக்கர், ரவீந்​திரநாத் தாகூர், பெர்னாண்டோ பெசவோ ஆகிய மூவரும் என்னைப் பாதித்​தவர்கள். ஐயப்பப் பணிக்கர் எப்படி வேண்டு​மானாலும் எழுது​வார். உதாரணமாக, ரயிலில் ஒரு பயணி டிக்கெட் இல்லாமல் பயணிக்​கிறார். டிடிஆரிடம் சிக்கி, லஞ்சம் கொடுப்பதாக அந்தக் கவிதை செல்கிறது. இதை ‘சச்சச் சச்சச் சகா...’ என ரயிலின் ரிதத்தில் அமைத்​திருப்​பார். உரைநடை​யிலும் எளிமை​யாகவும் மிக இருண்​மை​யாகவும் எழுதி இருக்​கிறார். மொழியை எப்படி வேண்டு​மானாலும் பயன்படுத்​தலாம் என்ற ஓர் அறிவை அவர் வழி பெற்றேன். அதுபோல்தான் தாகூரும். பெசவோ, 70க்கும் மேற்பட்ட பெயர்​களில் ஆள் மாறாட்டக் கவிதைகள் எழுதி​யுள்​ளார். ஒவ்வொரு பெயருக்கும் தனிச் சுயசரிதையும் எழுதி​யிருக்​கிறார். ஒவ்வொரு ஆள்மாறாட்டப் பெயர்​களுக்கும் தனித்தனி நடை. உதாரணமாக, ரெக்காடோ ரெய்ஸ் ஒரு பழைய ரீதியில் எழுதுபவர். ஆல்பர்ட் கெய்ரோ புதிய பார்வையில் புறம் மட்டும்தான் உண்மை என எழுதுபவர். அல்பாரோ டி காம்பஸ் இளமைத் துடிப்புள்ள ஒரு கவிஞர். இதையெல்லாம் எழுதியவர் ஒருவர்​தான். அது பெசாவோ.

ஒரு கவிஞர் எப்படி வேண்டு​மானாலும் கவிதை எழுதலாம். கவிதை மொழி ஒரு கருவி. நம்முடைய பண்பாட்டின் ஒரு பகுதியான பழங்குடிக் கவிதை, பெண்ணியக் கவிதை, தலித் கவிதை, ஹைக்கூ கவிதை என எதிலிருந்தும் நம் கவிதைக்கு ஒரு கருவியை நாம் எடுத்​துக்​கொள்​ளலாம்.

சந்தத்​தையும் எடுத்துப் பயன்படுத்த வேண்டும் எனச் சொல்கிறீர்களா?

வேல்ஸ் மொழியை ஆங்கிலம் விழுங்கிக் கொண்டிருக்​கிறது. அதை எதிர்க்க அவர்கள் பயன்படுத்துவது வேல்ஸ் மொழிக்கு உரிய சந்தங்​களைத்​தான். அது அவர்களின் அரசியலும்கூட. பெரிய மொழி நம்முடைய மொழியை விழுங்க வரும்​போது, அதற்கு எதிராக நாம் சில கருவிகளை உயர்த்த வேண்டும். அந்தக் கருவிதான் நம் கவிதையின் சந்தம்.

தமிழ்க் கவிதைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறீர்கள்...

மலையாளத்தில் புதிய அனுபவத்தைத் தரக்கூடிய கவிதைகளை மொழிபெயர்க்கத் தேர்ந்​தெடுக்​கிறேன். இசையின் கவிதைகள் லேசானவை. அந்தக் கவிதைகள் மலையாளத்​திற்குப் புதியவை. ஞானக்​கூத்தனின் கவிதைகளில் நமது பண்பாட்டின் ஆழத்தை உணர்ந்​திருக்​கிறேன். அவரது ‘மேசை நடராசர்’ போல ஒரு கவிதை மலையாளத்தில் இல்லை. கல்யாண்​ஜியின் கவிதைகள், லட்சக்​கணக்கான பூக்கள் விரிந்து நம் கண் முன்னே உதிர்ந்து போகும் ஓர் அனுபவத்தைத் தரக்கூடியவை. தேவதச்​சனின் கவிதைகளை நம்முடைய நினைவின் மின்னல் எனலாம். சுகுமாரன், தேவதேவன், மனுஷ்யபுத்​திரன், யுவன் சந்திரசேகர், முகுந்த் நாகராஜன், சந்திரா தங்கராஜ் எனப் பலரது கவிதைகளிலும் அனுபவத்தின் ஆழம் இருக்​கிறது.

ஈழத் தமிழ்க் கவிதைகளை எப்படிப் பார்க்​கிறீர்கள்?

மலையாள மொழியின் இயல்புடன் நெருக்கமாக இருப்பவை ஈழக் கவிதைகள். மலையாளக் கவிதையின் உச்சஸ்​தா​யியும் இசையும் ஈழக் கவிதையில் உண்டு. சண்முகம் சிவலிங்கம், சேரன், வ.ஜ.ச.ஜெயபாலன், சோலைக்கிளி போன்றோரை வாசித்திருக்​கிறேன். புதிய கவிஞர்​களில் அகரமுதல்​வனின் கவிதைகள் என்னைக் கவர்ந்தவை. போருக்குப் பிறகான நிலை என்ன, அதற்கு நேற்றுடன் என்ன தொடர்பு என்பதைத் தெளிவாகச் சொல்கின்றன அகரமுதல்​வனின் கவிதைகள்.

தமிழ்ப் பெண் கவிதைகள் குறித்த உங்கள் அபிப்ராயம் என்ன?

சங்க காலத்தில் ஒளவையார் உள்ளிட்ட பெண் கவிஞர்கள் இருந்தார்கள். இடைக்காலத்தில் ஆண்டாள், காரைக்கால் அம்மையார் இருந்தார். அதற்குப் பிறகு பெண் கவிஞர்களே இல்லை. நூற்றாண்டுகளுக்குப் பிறகு இரா.மீனாட்சி என்றொரு கவிஞர் வருகிறார். அவர் கவிதை என்னைப் பெரிய அளவில் கவரவில்லை. ஆனால், அவர் வருகை முக்கியத்துவம் மிக்கது. 80களில் சுகந்தி சுப்பிரமணியம் எழுத வருகிறார். நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட பெண் சமூகத்தின் பாரம் இவரது கவிதைகளில் வெளிப்பட்டது.

மலையாளப் பெண் கவிதைகள் எப்படி இருக்கின்றன?

நவீனக் காலத்தில் மலையாளத்தில் பெண் கவிஞர்கள் இல்லை. சுகதகுமாரியும் நவீனக் காலத்துக்கு முன்பு உள்ளவர்தான். கமலாதாஸ், கதைகளை மலையாளத்தில் எழுதியவர்; கவிதைகளை ஆங்கிலத்தில்தான் எழுதினார். ஏன் அவர் கவிதைகள் எழுத மலையாளத்தைப் பயன்படுத்தவில்லை? நவீனத்துவ மலையாளக் கவிதை மொழி, பெண்மையை உள்வாங்க முடியாத நிலையில் இருந்தது. மலையாள நவீன காலத்தில் பெண் கவிஞர்கள் இல்லாதது இதனால்தான். ஒருவேளை தமிழ் நவீனக் காலத்திலும் இது நேர்ந்திருக்கலாம். 1960-1975 வரையிலான நவீன காலத்தில் பெண் கவிஞர்கள் மலையாளத்தில் இல்லை. பெண் கவிதைகள், அன்றாட அனுபவத்தில் தோய்ந்தவை. நவீன மலையாளக் கவிதைகளோ கருத்து அடிப்படையிலானவை. அதனால்கூட பெண்களால் அப்போது இயங்க முடியாமல் போயிருக்கலாம்.

90களுக்குப் பிறகான தமிழ்ப் பெண் கவிதைகள்...

சல்மா, சுகிர்தராணி கவிதைகளை வாசித்திருக்கிறேன். இவரது கவிதைகள் சமூக, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. கேட்கப்படாத குரலை அவர்கள் கேட்கவைத்தனர். இந்தக் கவிதைகள் பொதுவான அழகியலைச் சுவீகரிக்கவில்லை. ஆனால், அதுவும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய இயல்பு என்றே கருந்துகிறேன்.

நவீன மலையாளக் கவிதைகள் எப்படி இருக்​கின்றன?

இன்றைய கவிதைகளை வாசிக்​கும்​போது, அது நகர்ந்​திருப்பதை உணர முடிகிறது. கதைகளில் காரூர், உறுபு போன்ற எழுத்​தாளர்​களுக்கும் இன்றைக்​குள்ள எழுத்​தாளர்​களுக்கும் உள்ள வேறுபாட்டை உணர முடியாது. ஆனால், கவிதையில் பி.குஞ்​சிராமன் நாயரிலிருந்து கவிதை எவ்வளவோ நகர்ந்​திருக்​கிறது. அந்தக் கவிதைகள் நமக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால், அவை ஆரோக்​கிய​மானவை. தமிழில் இந்த நகர்வு குறைவாக இருக்​கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in