Published : 12 Jun 2018 10:17 AM
Last Updated : 12 Jun 2018 10:17 AM

‘சக்தி’ வை.கோவிந்தன்: பதிப்புத் துறையில் ஒரு கலங்கரை விளக்கம்

 

மிழ்ப் பதிப்புத் துறையின் முன்னோடி ‘சக்தி’ வை.கோவிந்தன். அன்று அவர் வெளியிட்ட பல நூல்களின் பதிப்பு நுட்பம் இன்றும் மெய்சிலிர்க்க வைக்கக் கூடியவை. ‘பாரதியார் கவிதைகள்’ தொகுப்பை ஒன்றரை ரூபாய்க்கு மலிவு விலையில் கோவிந்தன் வெளியிட்ட பிறகே தமிழ்நாட்டின் சாமானியர் வீடுகளுக்குள் பாரதி நுழைய முடிந்தது. பேராசிரியரும் ஆய்வாளரும், நூல் சேகரிப்பு - ஆவணமாக்கலுக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவருமான புதுக்கோட்டை ‘ஞானாலயா’ கிருஷ்ணமூர்த்தி, தன்னுடைய ஆய்வு நூலகத்தில் கோவிந்தன் பதிப்பித்த நூல்களை இன்றும் பாதுகாத்துவருபவர். கோவிந்தனின் உலகத்தை அறிந்தவரும்கூட.

இன்றைய தலைமுறைக்கு ‘சக்தி’ வை.கோவிந்தனை எப்படி அறிமுகப்படுத்துவீர்கள்?

புதுக்கோட்டை மாவட்டம் ராயவரத்தில் 12.6.1912-ல் பிறந்த வை.கோவிந்தன் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். பர்மாவில் தேக்குமர ஆலையிலும், செட்டிநாட்டு வங்கியிலும் பணியாற்றினார். 1934-ல் தமிழகம் வந்து ரூ. 1 லட்சம் முதலீட் டில் சக்தி இதழையும், சக்தி வெளியீட்டகத்தையும் தொடங்கினார். பதிப்புத் துறையில் தொழில்நுட்பம் பெரிய அளவில் இல்லாத அந்தக் காலத்தில் நூல்களைச் சர்வதேசத் தரத்தில் பதிப்பித்தவர் வை.கோவிந்தன். தமிழ்ப் பத்திரிகைத் துறை, தமிழ்நூல் வெளியீட்டுத் துறை ஆகிய இரண்டிலும் முன்னோடியாகத் திகழ்ந்த அவரை அந்தத் துறையில் ஒரு கலங்கரை விளக்கம் என்று சொல்வேன்.

பதிப்புத் துறையில் அவருடைய ஆரம்பகாலச் செயல்பாடுகள் எப்படி இருந்தன?

சுத்தானந்த பாரதியார் மொழிபெயர்த்த விக்டர் ஹ்யூகோவின் ‘ஏழை படும்பாடு’ நாவலை 1938-ல் முதன்முதலாக வெளியிட்டார். ‘டைம்’ இதழ் போன்ற வடிவமைப்பில், தமிழில் சுத்தானந்த பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு 1939-ல் ‘சக்தி’ மாத இதழைத் தொடங்கினார். சக்தி மலர் என்ற பெயரில் டால்ஸ்டாயின் ‘இனி நாம் செய்ய வேண்டுவது யாது?’ என்ற நூலை பென்குவின் வெளியீடுகளைப் போல வெளியிட்டார். வை. கோவிந்தன் வெளியிட்ட ‘சக்தி மலர்’கள் நாற்பதை யும் எனது ‘ஞானாலயா’ நூலகத்தில் வரிசையாக அடுக்கி வைத்திருக்கிறேன். 1992-ல் ஞானாலயாவுக்கு வருகைதந்த சிகாகோ பல்கலைக்கழக நூலகக் காப்பாளர் ஜேம்ஸ் நே, 50 ஆண்டுகளுக்கு முன்பு காலால் இயங்கும் அச்சு இயந்திரத்தில் அச்சிடப்பட்ட சக்தி மலர்களின் தரத்தைக் கண்டு வியந்துபோனார்.

அவருடைய சாதனையாகக் கருதப்படும் மலிவுப் பதிப்புகள் குறித்துச் சொல்லுங்கள்..

நோபல் பரிசுபெற்ற பெர்ல் எஸ்.பக்கின் ‘நல்ல பூமி’ நாவலை ‘பெர்ல்ஸ் பப்ளிகேஷன்’ என்ற அமெரிக்க நிறுவனம் வெளியிட்டிருந்தது. 350 பக்கங்கள் கொண்ட அந்த நூலின் விலை 50 காசுகள். இதுபோல ராஜாஜி எழுதிய ‘வியாசர் விருந்து’, கோவிந்தனின் முயற்சியால் மலிவு விலை பதிப்பாக ஒன்பதே மாதங்களில் 80 ஆயிரம் பிரதி கள் வரை விற்றுத் தீர்ந்தன. இந்நிலையில், பாரதியாரின் புதல்விகள் தங்கம்மாள் பாரதியும், சகுந்தலா பாரதியும் பாரதியார் கவிதைகளை இதுபோல் வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். ஏப்ரல் 13, 1957-ல் பாரதியார் கவிதைகள் முழுவதையும் 510 பக்கங்களில் ஒன்றரை ரூபாய் விலையில் காமராஜரைக் கொண்டு ராஜா அண்ணாமலை மன்றத்தில் வெளியிட்டார் வை.கோவிந்தன். இதன் மூலம் தமிழ்நூல் வெளியீட்டில் ஒரு சாதனை படைத்து, பதிப்புத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தினார். முதல் பதிப்பின் 10,000 பிரதிகளும் 15 நாட்களிலேயே விற்றுத் தீர்ந்திருந்தன. திருக்குறளைப் பரிமேலழகர் உரையோடு 3.7.1957-ல் மலிவுப் பதிப்பாக 15,000 பிரதிகளும், 9.9.1957-ல் 10,000 பிரதிகளும் வை.கோவிந்தனால் வெளியிடப்பட்டன. அதாவது, 66 நாட்களில் 25,000 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. பிழையில்லாத பதிப்பு, தரமான தாள் ஆகியவை மலிவுப் பதிப்புக்களின் பெருமையைப் பறைசாற்றின.

இலக்கியம் தவிர்த்து வேறென்ன நூல்கள் வெளியிட்டிருக்கிறார்?

வை.கோவிந்தனுக்கு விவசாயத்தில் ஈடுபாடு இருந்தது. மு.அருணாசலம் எழுதிய ‘காய்கறித் தோட்டம்’ என்ற நூலை வெளியிட்டார். சக்தி மலராக ‘எருவும் எரு இடுதலும்’ என்ற நூலையும் வெளியிட்டார். ஆனந்தகுமாரசாமியின் கட்டுரை களையும் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் வை.கோவிந்தன். அவர் தொடாத பொருளில்லை.. தொட்டதை அழகுபடுத்தாமல் விட்டதில்லை என்று கூறினால் அது மிகையில்லை.

பதிப்புச் செயல்பாடுகளில் கோவிந்தன் எந்தளவுக்கு உறுதியாக இருந்தார்?

கோவிந்தனுக்கு ஒருமுறை விபத்து ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையிலேயே தங்க வேண்டிய சூழல். அப்போது வெளியாகிக்கொண்டிருந்த ‘அணில்’ குழந்தைகள் பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்த தமிழ்வாணனிடம் முழுப் பொறுப்பையும் கொடுத்திருந்தார். விற்பனையில் அதுவரை 5,000 பிரதிகள் சென்றுகொண்டிருந்த ‘அணில்’, திடீரென்று 25,000 பிரதிகளைத் தொட்டது. காரணம் கேட்டபோது, ‘நான் பயமாயிருக்கே’ என்ற தலைப்பில் ஒரு கதை எழுதுவதாக தமிழ்வாணன் சொன்னார். கதையைப் படித்த கோவிந்தன், “இதில் ஒரே துப்பாக்கி சத்தம், ரத்தம் என வன்முறையாக உள்ளது. அப்படி எழுதாதீர்கள். நமக்குக் கொள்கை பெரிது” என்று தொடரை நிறுத்தும்படி சொல்லிவிட்டார்.

பதிப்புச் செயல்பாடுகள் நின்றுபோனதற்கு என்ன காரணம்?

லட்சியத்தையே உயிரினும் மேலானதாக நினைத்து வாழ்ந்தவர் வை.கோவிந்தன். அதனாலேயே அவரது பத்திரிகை நெருக்கடிக்கு ஆளானது. மகாத்மா காந்தி, ஜே.சி.குமரப்பா ஆகியோ ரால் கண்டனத்துக்கு உள்ளான உணவுப் பொருட்களின் விளம்பரங்களைத் தம் பத்திரிகையில் வராமல் நிறுத்தினார். குறிப்பாக ஜே.சி.குமரப்பா எழுதிய ஒரு கட்டுரை ஒரு பெரிய நிறுவனத்தின் பொருளைக் கண்டனம் செய்வதாக நினைத்த அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அக்கட்டுரைக்கு மறுப்பு வெளியிடும்படி வை.கோவிந்தனை வலியுறுத்தினார்கள். மேலும், மறுப்பை வெளியிடும் பட்சத்தில் வை.கோவிந்தனின் துறை சார்ந்த நஷ்டங்களை ஈடுசெய்வதோடு, விளம்பரங்கள் தருவதாகவும் உறுதியளித்தார்கள். ஆனால், ‘பத்திரிகையை நிறுத்தினாலும் நிறுத்துவேனே ஒழிய மறுப்புப் போட மாட்டேன்’ என்றார் வை.கோவிந்தன்.

பதிப்புத் துறையில் என்னென்ன முன்னெடுக்க விரும்பினார்?

“தமிழ் நூல்கள் எல்லாவற்றையும் ஒருங்கே சேர்த்து ஒரு விற்பனை நிலையம் அமைக்க வேண்டும் என்றும் செயல்பட்டார். அவர் கண்ட கனவுகளில் பாதிதான் நிறைவேறின. ஆனால், அது ஓர் உன்னதமான, சுயலாபம் தேடாத கனவு” என்று க.நா.சு எழுதியது நினைவுக்கு வருகிறது. “மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை அளிப்பது என்பது பத்திரிகையின் நோக்கமாக இருக்கக் கூடாது. மக்களுக்கு எது தேவையோ அதைத்தான் அளிக்க வேண்டும்” என்பது கடைசி வரை அவருடைய கொள்கையாக இருந்தது. அதை அவர் கடைப்பிடிக்கவும் செய்தார்!

- சு.அருண் பிரசாத்,

தொடர்புக்கு: mails2arunprasath@gmail.com

(ஜூன் 12, ‘சக்தி’ வை.கோவிந்தனின்

106-வது பிறந்தநாள்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x