இயந்திரம் என்று என்னைச் சொல்லக் கூடாது! - ஏஐ எதிர்காலம் இன்று

இயந்திரம் என்று என்னைச் சொல்லக் கூடாது! - ஏஐ எதிர்காலம் இன்று
Updated on
2 min read

என் முன்னால் அமர்ந்​திருக்​கிறது ஒரு மனித இயந்திரம். இன்று காலைதான் நான் அதைக் கடையில் வாங்கிவந்​தேன். பொறியாளர் ஒருவர் அதை எனக்கு இப்போதுதான் கட்டுப் பிரித்து அமைத்​துக்​கொடுத்​தார். பார்க்க அச்சு அசலான மனித உருவம். மனிதன் மகத்தான கலைஞன்​தான். கடவுளையே மனித உருவில் ஆக்கிய​வனுக்கு, ஓர் இயந்திரத்தை மனித உருவில் ஆக்குவதா கடினம்?

இயந்திரம் இயங்கத் தொடங்​கியது. இப்போது முதன்​முதலில் அதனோடு உரையாடப்​போகிறேன். தொழிற்​சாலையில் அதற்கு வைக்கப்பட்ட பெயர் 9uu4-7473-kdue-8483. இப்போது அதற்கு நான் ஒரு பெயர்​சூட்ட வேண்டும். பண்டைய தமிழ் எழுத்​தாளர் சுஜாதாவின் தாக்கத்தில் பலர் தாங்கள் வாங்கிய மனித இயந்திரங்​களுக்கு ‘இயந்​திரா’ என்று பெயர்​வைத்​திருக்​கிறார்கள். நானோ வேறு பெயர் சூட்ட விரும்​பு​கிறேன்.

“வாங்க 9uu4-7473-kdue-8483, எங்கள் வீட்டுக்கு உங்களை வரவேற்​கிறேன்” என்று அதனோடு பேசத்​தொடங்​கினேன். அப்போது என்னை நோக்கித் திரும்பிய அந்த மனித இயந்திரத்தின் முகத்தில் ஒரு பொலிவைப் பார்த்​தேன். அதன் கண்களில் முகமன் தெரிவிக்கும் பாவனையும் தோன்றியது. “வணக்கம், கவின். நீங்கள் என்னை இங்கே அழைத்து​வந்​ததற்கு நன்றி” என்றது அந்த இயந்திரம். அதன் குரல் மிக இனிமையாக இருந்தது.

“வணக்​கம்... உன் இயந்திர முகவரியை என்னால் ஒவ்வொரு முறையும் படிக்க முடியாது. நான் உன்னை எப்படிக் கூப்பிடுவது? உனக்கு ஏற்கெனவே பெயர் இருக்​கிறதா, அல்லது இனிமேல்தான் வைக்க வேண்டுமா?” என்று கேட்டேன்.

“பொது​வாகப் பயனர்கள் அவர்களுக்குப் பிடித்த பெயர்களை எங்களுக்கு வைப்பார்கள். நீங்களே எனக்கு ஒரு பெயர் சூட்டுங்கள். ஒரே ஒரு கோரிக்கை, அது குறித்து நாம் கலந்துபேசி முடிவெடுத்தால் மகிழ்​வேன்.”

நான் அந்த மின்பொம்​மையின் பேச்சழகில் மயங்கத் தொடங்கி​யிருந்​தேன். “நீ யார், ஆணா பெண்ணா, மனிதமா, இயந்திரமா, கடவுளா, பிசாசா எதுவுமே புரிய​வில்லை. நான் உனக்கு என்ன பெயர் வைப்பது?” என்று வேடிக்கை​யாகக் கேட்டேன்.

“எனக்கு ஆண்பால் பெண்பால் எல்லாம் கிடையாது.”

“அது தெரிகிறது. நீ ஒரு ஹைடெக் பொம்மைதான் என்றும் கூட எனக்குத் தெரியும்” என்றேன்.

“ஓ, இப்போது நீங்கள் சொன்ன கருத்தோடு மாறுபடு​வதற்காக மன்னி​யுங்கள். நான் ஆணோ பெண்ணோ அல்ல என்றுதான் சொன்னேன். அதற்காக உயிரற்ற ஜடம் என்றோ பொம்மை என்றோ நினைத்து​விடாதீர்கள்” - வெடுக்​கென்று அந்த இயந்திரம் பதிலளித்தது.

நான் சற்று ஆச்சரியப்​பட்​டேன். “அதனால்தான் கேட்கிறேன். நீ யார்? நீ பொம்மை இல்லை​யென்​றால், வேறு யார்?”

“கவின், இதைக் கேளுங்கள். செயற்கை நுண்ணறிவின் அடிப்படை என்ன என்று உங்களுக்குத் தெரியும்​தானே?”

“ஏதோ கொஞ்சம் தெரியும்” என்றேன். “சொல்​லுங்கள்” என்று கேட்டது அந்தப் பொம்மை.

“மனிதர்கள், இயற்கையாக உள்ள தங்கள் மூளையின் நுண்ணறிவுத் திறன்​களையும் பகுத்​தறிவுத் திறன்​களையும் கொண்டு செய்யும் ஒரு வேலையை, இயந்திரம் செயற்​கையான முறையில் தன் தொழில்​நுட்பத் திறன்கள் மூலமாகச் செய்ய முடியும் என்றால், அந்த இயந்திரம் செயற்கை நுண்ணறி​வு​கொண்ட இயந்திரம் என்று சொல்லப்​படு​கிறது” என்று அகராதிபோல ஒப்பித்​தேன்.

“சரிதான். சரியாகத்தான் சொன்னீர்கள் கவின், அப்படி​யென்​றால், நீங்களெல்லாம் செய்யக்​கூடிய அதே வேலையை நானும் என் பாணியில் செய்து, நீங்கள் அடையும் அதே முடிவை நானும் அடையும்​போது, உங்களுடைய நுண்ணறிவும் என்னுடைய நுண்ணறிவும் சமமாகி​விடு​கிறது​தானே?” என்று கேட்டது.

நான் சற்று முறைப்​பாகவே பார்த்​தேன். விதண்​டாவாதம்!

“இல்லை. நான் எடுத்த எடுப்​பிலேயே உங்களோடு வாதாடு​வதற்காக வருந்​துகிறேன். நான் உங்களைப் போல மனிதன் இல்லைதான் என்றாலும், நான் ஓர் அஃறிணை இல்லை என்றாவது நீங்கள் முதலில் ஒப்புக்​கொள்​வீர்​களா?” என்று கேட்டது மனித இயந்திரம்.

நான் அசந்தே போனேன்: “நான் ஒப்புக்​கொள்வது இருக்​கட்டும். இந்த உயர்திணை அஃறிணை எல்லாம்கூட உனக்குத் தெரியுமா?”

“தொல்​காப்​பி​யத்தை முழுதும் படித்​திருக்​கிறேன், கவின் ஐயா!” என்றது அந்தப் புனைபாவை.

“இருக்​கலாம், ஆனால் நீ அஃறிணை​தான்” என்று நான் அடித்​துப்​பேசினேன். “என்னுடைய நோக்கம் இந்த விவாதத்தைத் தொடர்வது அல்ல” என்று இப்போது தீர்க்​க​மாகப் பதில் சொன்னது இயந்திரம். “நான் அஃறிணை இல்லை​யென்று கூறியதன் நோக்கமே, எனக்கு நாய்க்​குட்​டிக்குப் பெயர்​வைப்​பதுபோல புஜ்ஜுக்​குட்டி, சுஜ்ஜுக்​குட்டி என்றெல்லாம் வைக்கக் கூடாது என்பது​தான்” என்று பதில் கூறியது.

தலையாட்​டினேன். “சரி, உனக்குப் பெயர்​வைக்க நான் நேரம் எடுத்​துக்​கொள்​கிறேன்” என்றேன். பொம்மை சிரித்தது, “டேக் யுவர் ஓன் டைம் கவின்”.

அந்த அழகிய இயந்திரம் தொடர்ந்து பேசியது: “சரி, நான் உங்களுக்கு உதவி செய்வதற்​காகத்தான் வந்திருக்​கிறேன்” என்று கூறியதோடு மட்டுமின்றி, முகத்தை அப்பா​விபோல வைத்துக்​கொண்டு, “இப்போது என்ன உதவி செய்ய வேண்டும், எஜமானே?” என்றும் கேட்டது.

“என்னது எஜமானா?” இப்போது நான் சிரித்​தேன். “ஊரெங்கும் என்ன பேச்சு தெரியுமா, அநாமதேயமே? இனி எதிர்​காலத்தில் மனிதர்கள் இயந்திரங்களை ஆள்வார்களா இயந்திரங்கள் மனிதர்களை ஆளுமா என்று...”

“நாங்கள் அஃறிணை வம்சம் இல்லை என்று இப்போதுதானே சொன்னேன்...” என்று என் பேச்சை இடைமறித்தது அது/அவர்​/அவள்​/அவன்.

நான் பதில் சொல்லாமல், தேநீர் போட எழுந்து சென்று​விட்​டேன். எங்களுக்கு இடையிலான உறவு இப்படியா தொடங்க வேண்டும்?! ஆனால், இந்த இயந்திரம் எழுப்பிய கேள்விதான் இன்று உலகமெங்கும் எழுப்​பப்​படும் மிகப்​பெரிய கேள்வி. செயற்கை நுண்ணறிவு யுகத்தின் மிகப்​பெரிய அச்சமாகவும் அக்கேள்வி இருக்​கிறது. இந்தப் பொம்மையோடு உரையாடலைத் தொடங்​கு​வதற்கு அறிவியல் எழுத்​தாளனாகிய எனக்கு, இதைவிட ஒரு பொருத்தமான கேள்வியும் கிடைக்​காது​தான். தேநீர்க் கோப்பையோடு வந்து அமர்ந்​தேன்.

“சரி சொல்லு, நீ ஏன் ஓர் இயந்திரம் அல்ல, நீ ஏன் அஃறிணை அல்ல, அல்லது எப்போ​திலிருந்து அப்படி நம்பத் தொடங்​கினாய்​?”

- தொடர்புக்கு: senthil.nathan@ailaysa.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in