

மூடநம்பிக்கைகளுக்கு எதிராக எழுதப்பட்ட, அயர்லாந்து எழுத்தாளர் சாமுவேல் பெக்கெட்டின் ‘Waiting for Godot’ நாடகம் தமிழில் எஸ்.எம்.ஏ.ராம் எழுத்தில், பி.வசந்த் இயக்கத்தில் ‘எப்போ வருவாரோ’ என்ற பெயரில் கூத்துப்பட்டறையிலும், நுங்கம்பாக்கம் அலியான்ஸ் பிரான்செஸிலும் நிகழ்த்தப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற மிக்ஸ்துரா கலை நிகழ்ச்சியில் பலரின் கவனத்தையும் பெற்றது.
கால்களில் கட்டையைக் கட்டிக்கொண்டு “அய்யா வரப்போறார்! அய்யா வரப்போறார்!” என்ற குடுகுடுப்பைக்காரர்களின் அறிவிப்புடன், யார்தான் வரப்போகிறார்களோ என்ற ஆர்வத்துடன் பார்க்கும் மக்கள், நேரம் போகப்போக ‘கடவுள் பூலோகம் வந்து நமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்வார்’ என்ற மூடநம்பிக்கையில், தங்கள் பணிகளையெல்லாம் விட்டுவிட்டுக் கடவுளுக்காகக் காத்திருக்கத் தொடங்குகிறார்கள். இதன் யதார்த்தத்தை விளக்குகிறது ‘எப்போ வருவாரோ’ எனும் நாடகம்.
விசுவையா, அய்யாசாமி என்ற இரண்டு கதாபாத்திரங்களுடன் தொடங்குகிறது இந்த நாடகம். சோம்பேறித்தனம் எனும் கொடிய நோய் ஒருவனுக்குப் பரவுகிறது என்றால், அது கரோனாவைவிட வேகமாக அவர்களைச் சுற்றியிருக்கும் ஒவ்வொருவருடைய சுயசார்புச் சிந்தனையை சிறிதுசிறிதாக எப்படியெல்லாம் அரித்துவிடும் என்பதை அய்யாசாமியை விசுவையா மூளைச்சலவை செய்வதன் மூலமும், போகப்போக தீபிகா, காயத்ரி, விஜயசாந்தி, விக்னேஷ், ரவி ராகுல், அபிநயா, நந்தகுமார் எனக் கூடுகின்ற ஒவ்வொருவரின் கதாபாத்திரங்களும் காத்திருக்கத் தொடங்குவதன் வழியே வெளிப்படுகிறது.
அதைவிட விறுவிறுப்பாக, இதுவரை நடந்ததைத் திரைப்படங்களில் காண்பிக்கப் பயன்படுத்தப்படும் ‘ஃபிளாஷ்பேக்’ உத்தியைத் திரைப்படத்தைப் போல நாடகத்திலும் மிக அழகியலுடன், கடகடவென நடந்ததை ஒரு குட்டி இசையுடன் கோத்துக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். சரியாக இசை முடியும்போது, அந்த நேரத்தில் வர வேண்டியவர் சட்டென்று குதித்து நிற்பதுவரை மிக அழகாகத் திட்டமிடப்பட்டிருந்தது, பி.வசந்த்தின் சிறந்த இயக்கத்திற்குச் சான்று.
‘சாமி கண்ணைக் குத்தும்’ என்று சொல்லி வளர்க்கப்பட்ட நம் சமூகத்தில், திடீரெனக் கடவுள் மீதிருக்கும் மூடப் பழக்கவழக்கங்களை விமர்சிப்பதில் பெரும் சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. தவறு செய்பவர்களைக் கடவுள் தண்டிப்பதாகச் சொல்பவர்களிடம், கடவுளின் பெயரால் பெருங்குற்றங்களைச் செய்யும் ஒரு பெருங்கூட்டத்தை மட்டும் கடவுள் ஏன் தண்டிப்பதே இல்லை? அவர்களுக்கு மட்டும் கடவுள் எப்படிப் பாரபட்சம் காட்டுகிறார்?’ என்கிற கேள்வியையும் எழுப்புகிறது.
இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் என எந்தவிதப் பாகுபாடுமின்றி, மூன்று மதங்களிலும் இது போன்ற ஆதாயம் தேடும் பெருங்கூட்டம் மக்களை எப்படி ஆட்டிப்படைக்கிறது என்பதைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அதேவேளை, கடவுளை விட்டொழியச் சொல்லும் ‘சார்வாகன்’ கதாபாத்திரத்தின் மூலம் இது போன்ற ஒடுக்குமுறையின் வேர்களைப் பிடுங்கி எறிவதற்கான சாத்தியக்கூறுகளை, எந்த விவரமும் அறியாத மக்களிடம் அறிமுகப்படுத்துகிறார். “உங்களிடம் ஜாதி, மத சண்டைகளைத் தூண்டிவிட்ட யாரும் தற்போது உங்களுக்கு அடிப்படைத் தேவை என்ன என்பதைக்கூடப் புரிந்துகொள்ளவில்லை. உங்களுக்கு உண்ண உணவிருக்கிறதா? சரியான உடைகள்? ஒதுங்க இடம்கூட அளிக்கவில்லையா?” என அவர்களைச் சிந்திக்க வைக்கிறார். மக்களின் மனதில் படிந்திருக்கும் ஒரு தொழுநோயைக் குணப்படுத்த இந்த நாடகத்தில் இருக்கும் சார்வாகன் போன்ற, ஒரு சமூக மருத்துவர் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தேவைப்படத்தான் செய்கிறார்.
- திரைப்படத் தொகுப்பாளர்
தொடர்புக்கு: goodbadeditor@gmail.com