அஞ்சலி: மு. நடேஷ் | புதிய கடவுளைத் தேடிய கலைஞன்

ஓவியர் மு.நடேஷ்
ஓவியர் மு.நடேஷ்
Updated on
3 min read

கலை, தத்துவம் ஆகியவற்றின் சிந்தனை வளங்களில் செழுமை பெற்ற படைப்பு மனம் கொண்டவர் ஓவியர் மு.நடேஷ் (14.01.1960 - 20.09.2024). உத்வேகத்தின் உருவகம்; இவர் ஓர் ஓவியக் கலைஞர் மட்டுமல்ல; நவீன நாடகக் கலையிலும் - இயக்கம், அரங்கமைப்பு, ஒளி ஆகிய தளங்களில் - தன் அடையாளத்தைப் பதித்​தவர். எல்லா​வற்றுக்கும் மேலாக, தமிழகக் கலைவெளியில் நிர்மாணக் கலையில் (installation art) படைப்​பாக்கம் மேற்கொண்ட முன்னோடி. வெளியீடு பற்றிய அக்கறை​யின்றி, கதை, நாவல், கவிதை, நாடகம், கட்டுரை என ஆங்கிலத்தில் நிறைய எழுதி​வைத்​திருக்​கிறார்.

1960 ஜனவரி 14ஆம் தேதி சென்னையில் பிறந்​தவர். தமிழ்ச் சிறுகதை, நவீன நாடகவெளியில் தனித்து​வ​மிக்க ஆளுமையான ந.முத்​துசாமியின் மூத்த மகன் இவர். இவருடைய ஆளுமை உருவாக்​கத்​தில், தந்தைக்கும் தந்தையின் சகாக்களான கலை இலக்கிய ஆளுமை​களுக்கும் பங்குண்டு.

ஓவியக் கல்லூரியில் படித்த காலத்​திலும் அதனைத் தொடர்ந்தும் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் (1980-90) ‘கூத்துப் பட்டறை’ முயற்சி​களோடு தன்னைப் பிணைத்​துக்​கொண்​டவர். அரங்க அமைப்​பிலும் ஒளி அமைப்​பிலும் மேதைமை பெற்றவர். 1990இல் பண்டிட் ரவிஷங்​கரின் இசை நாடகமொன்று இந்தியா​வெங்கும் நிகழ்த்​தப்​பட்​ட​போது, அதற்கு அரங்க நிர்மாணமும் ஒளியமைப்பும் செய்திருக்​கிறார். முத்துசாமியின் மறைவுக்குப் பின்பு, கூத்துப் பட்டறையின் நிர்வாக அறங்காவலராகத் தன் பணிகளைத் தொடர்ந்​தார்.

நாடகத்​துக்கான அரங்க அமைப்பு உருவாக்​கத்​திலிருந்தே, இங்கிருந்த கலை அரசியல் நிலைமை காரணமாக, நிர்மாணக் கலையாக்​கத்​துக்கு இவர் வருகிறார். 1998இலிருந்து இவர் நிர்மாணக் கலையாக்​கத்தில் ஈடுபட்​டார். நிர்மாணக் கலை என்பது, டாடாயிஸம்போல, கலைக்கு எதிரான ஒரு கலை. நிர்மாணக் கலையும் கலை அரசியல் குறித்த பிரக்​ஞையி​லிருந்து உருவானது​தான். ‘படைப்​பாக்கம் என்பதுகூட முன்கூட்டித் தீர்மானிக்​கப்பட்ட ஒரு செயலாகி​விட்டது; விற்பனையை முன்னிறுத்தி, போலச்​செய்து கலை வணிகமய​மாகிக் கொண்டிருக்​கிறது; இதன்மூலம் நாம் மலடுகளாகிக் கொண்டிருக்​கிறோம்; நாம் படைப்​பூக்​கமற்றுப் போனது துரதிர்​ஷ்ட​வச​மானது’ என்பது போன்ற புரிதல்​களி​லிருந்து உருவானதுதான் நிர்மாணக் கலை. அது ஓரிடத்தில் சில நாள்கள் வைக்கப்​பட்டுப் பின் அகற்றப்​பட்டு விடுவது. அது வணிகத்​துக்​கானது அல்ல; நிரந்தர மதிப்​புக்​கானதும் அல்ல.

நடேஷ், நவீன உலகப் பிரச்சினை ஒன்றைக் குறித்த விமர்சனக் கருத்​தாக்​கத்தை வெளிப்​படுத்த, அக்கருத்தின் சாரத்தைப் பிரம்​மாண்டப் படிமமாக்கு​கிறார். அக்காட்சிப் படிமமே அவருடைய நிர்மாணக் கலை. அதன் கருத்​தாக்கம் குறித்த துண்டறிக்கை ஒன்றையும் வாசிப்​புக்கு முன்வைக்​கிறார். நிர்மாணக் கலையில் வெளிப்​படுத்த முடிகிற பிரம்​மாண்டம் அவருடைய சுபாவத்​துக்கு உவப்பானதாக இருக்​கிறது. நிர்மாணக் கலை, அதன் பணிவற்ற எதேச்சை குணம் காரணமாக ஒரு புதிய கடவுளைத் தோற்று​விக்க முடியும் என்று நம்பு​கிறார் நடேஷ்.

நடேஷின் கோட்டோ​வி​யங்​களோடு எனக்கு 35 ஆண்டு​களாகப் பரிச்​சயம். கண் பார்வை வெகுவாகக் குன்றிய கடைசிக் காலத்​திலும் அலாதியான ஈடுபாட்டுடன் நடேஷ் தன் கலைப் பயணத்தைத் தொடர்ந்தது கோட்டோ​வி​யங்​களில்​தான். லயமும் இசைமையும் கூடிய இவருடைய கோட்டின் சரளமான பயணம் வளைந்தும் நெளிந்தும் சுழித்தும் தன் இலக்கைக் கச்சித​மாகவும் துல்லிய​மாகவும் சென்றடைந்து பரிபூரண அழகை எட்டு​கிறது. ஆயிரக்​கணக்கான கோட்டுச் சித்திரங்களை இவர் தொடர்ந்து உருவாக்கி வந்திருக்​கிறார். இக்கோட்டுச் சித்திரங்கள் மூன்று விதமான தன்மை​களில் உருப்​பெறுகின்றன.

முதலாவது, அழகிய கோலங்கள். இவை, கோட்டின் சரளமான பயணத்தில் வடிவ லயத்துடன் ஓர் உருவத்தை வெகு லகுவாக வசப்படுத்​துபவை. தூய அழகின் பூரணத்து​வத்தை அடைவதில் அலாதியான நிறைவை எட்டுபவை. இத்தன்​மையான கோட்டுச் சித்திரங்கள் சிந்தனையின் பாரமற்றவை. எளிமையும் வெகுளித்​தனமும் குழந்​தைமையும் பேணுபவை. இவருடைய குதிரை சித்திர வரிசை இத்தகையது.

குதிரைகள், குருவிகள், பறவைகள், பூனைகள், மாடுகள், கோழிகள், முட்டை​யிடும் சேவல்கள், குஞ்சுகள், முட்டைகள், புலி, சிங்கம், காண்டா​மிருகம், நெருப்பு, மழை என விலங்​கு​களும் பறவைகளும் இயற்கையும் இவரிடம் இத்தகைய மகத்து​வத்தைக் கொண்டிருக்​கின்றன. மனித ஆண் பெண் உடல்களும் ஆடைகளின் ஒப்பனை​களின்றி உடல் மொழியில் சகஜமாய் இயங்கு​கின்றன. இவ்வரிசைச் சித்திரங்​களில் உருக்​கொள்ளும் ஓர் உருவம் மெல்லமெல்ல உருமாற்றம் பெற்று, வெவ்வேறு ரூபம் கொள்ளும் நுட்பங்களை அவதானிப்பது ஒரு விந்தையான கலை அனுபவம்.

கோல வடிவங்கள் அதன் தொடர்ச்​சியான உருமாற்றப் பயணத்​தில், சிந்தனையின் வெளிப்​பாடுகளாக விகாசம் பெறுகின்றன. இவையே இவருடைய இரண்டாம் வகையான சித்திரங்கள். சிந்தனையின் சிறகு​களோடு இயங்கும் கோட்டுச் சித்திரங்கள். இவை புனிதங்​களுக்கு எதிரான கலகத்​தன்மை கொண்டவை. இச்சித்திர வரிசைகள் குறுங்​கதைத் தன்மை கொண்ட நாடகார்த்தப் புனைவுகள். இவை, நடேஷின் பிரத்​தி​யேகக் குறுங்​கதை​யாடல்கள். இவ்வகையான கோட்டுச் சித்திரங்​கள்தான் ‘புதிய கடவுளைத் தேடும் கலைஞன்’ என இவர் பற்றிய பிம்பத்தை என்னுள் ஏற்படுத்​தி​யிருப்பவை. புனிதங்​களுக்கு எதிரான கலகக் கோடுகள் மூலம் புதிய கடவுளைத் தேடுபவராக நடேஷ் இருக்​கிறார். ஒரு கொந்தளிப்பான படைப்பு மனநிலையில் இயங்கும் கலகச் சித்திரங்கள் இவை.

ஒரு பிரத்​யேகக் குறுங்கதை அம்சத்தின் நாடகார்த்தத் தன்மையோடு, ஒரு கோட்டோவிய வரிசையை மேற்கொள்​ளும்போது அவற்றை வெவ்வேறு கோலங்​களில் அடுக்​கடுக்காய் வரைகிறார். அவற்றின் விசைக்​கேற்ப அவற்றினூடாகப் பயணம் கொள்கிறார். வெகு லகுவாகவும் லயத்தோடும் சுதந்​திர​மாகவும் சரளமாகவும் இவருடைய கோடுகள் பயணிக்​கின்றன. அதே வேளை, வீரியமும் அதிர்வும் கொண்டு ஒரு மந்திரச் சுழற்​சியில் அபாரமாய் சலனிக்​கின்றன. இந்தப் பயணத்​தில், அவை மெல்லமெல்ல உருவங்களை இழந்து, அவற்றின் சாரத்தை மட்டும் ஏற்று அரூபம் கொள்கின்றன. இவையே இவருடைய மூன்றாம் வகைச் சித்திரங்கள். இவருடைய மூன்று வகைச் சித்திரங்​களும் வெளிப்​பாட்டில் ஓர் அற்புதத்தை அடைவதன் மூலம், அழகிய கோலம் கொள்கின்றன.

அரூப வகைச் சித்திரங்களே இவருடைய வண்ண ஓவியங்​களாகவும் வெளிப்பாடு கொள்கின்றன. சாரங்​களின் அரூப உருவாக்​க​மாகவே இவருடைய ஓவியங்கள் அமைகின்றன. அழுத்தமான வண்ணங்களை ஒப்பனை​களின்றித் தீர்க்கமாக வைப்பதில் ஆர்வம் கொண்டவர் இவர். இவருடைய கலை நம்பிக்​கையும் ஆற்றலும் மகத்துவ​மானவை.

- எழுத்தாளர், கலை விமர்சகர்.

தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in