

அன்றாடம் என்பதே இயற்கையின் காலப்பரிமாணம் ஆகும். நினைவுச் சேகரம், அறிவுச் சேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை மானுடம் உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
அன்றாடம் என்றால் என்ன? அது பூமியின் சுழற்சிதான். அதனால் பூமியின் பெரும்பாலான பகுதிகளில் இரவும் பகலும் மாறிமாறி வருகின்றன. சூரியன் ஒரு முறை உதிப்பதிலிருந்து மறுமுறை உதிப்பதுவரை ஒரு நாளாகப் புரிந்துகொள்ளப்படும். பூமி ஒருமுறை சுழன்று முடித்துவிட்டதை அது குறிக்கிறது. கணிசமான உயிரினங்கள் இருளில் உறங்கும். சூரிய வெளிச்சத்தில் இயங்கும். மனிதர்கள் குறிப்பாக அவ்விதம் பழக்கப்பட்டவர்கள். அதற்கு முக்கியக் காரணம், பகலில் வெளிச்சம் இருப்பதால் இயங்குவது எளிது; இருளில் இயங்குவது கடினம் என்பதாகப் புரிந்துகொள்ளலாம். ஒரு சில உயிரினங்கள் இரவில் அதிகம் இயங்கலாம்; வேறு சில இரவு, பகல் இரண்டிலும் இயங்கலாம் அல்லது இரவுக்கும் பகலுக்குமான மாறுபாட்டை அறியாமல்கூட இயங்கலாம். நுண்ணுயிரிகளுக்கு இந்த வேறுபாடு புலப்படாமல் இருக்கச் சாத்தியம் உண்டு.
இயற்கையோடு இயைந்த நியதிகள்: மானுடச் சமூகங்களில் விவசாயமும் வர்த்தகமும் பெருகி பொருள் சேகரிப்பு என்பது தோன்றிய பிறகு, இருளின் பாதுகாப்பில் பொருள்களைத் திருடுபவர்களும், திருடுவதைத் தவிர்க்க இரவில் காவல் காப்பவர்களும் தோன்றினார்கள். அதேபோல உடலுறவு தொடர்பான அந்தரங்கத்துக்கும் இருளும், பிறரின் உறக்கமும் அனுசரணை என்று கருதப்பட்டன.
‘நவராத்திரி’ திரைப்படத்தில் சிவாஜி குடித்துவிட்டு, ‘இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம், இதுதான் எங்கள் உலகம்’ என்று பாடுவார். இப்படியாக இரவினையும் பகலினையும் பகுப்பதில்தான் மானுடத்தின் அன்றாட வாழ்க்கை அடங்கியுள்ளது. ‘காலை எழுந்தவுடன் படிப்பு, பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுவதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா’ என்று பாரதி கூறும்போது, எப்படி அன்றாட வழக்கங்களால் வாழ்க்கை கட்டமைக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது. அன்றாட வாழ்க்கை நியதிகள் இயற்கையுடன் இணைந்தவை.
மின்சாரம் புழக்கத்துக்கு வந்த பிறகு இரவைப் பகலாக்குவது எளிதாகிவிட்டது. பல அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் இரவும் பகலும் தொடர்ந்து மின்விளக்கு ஒளியில்தான் வேலை நடைபெறுகிறது என்பதால், அதில் வேறுபாடு எதுவும் இருக்காது. நைட் ஷிஃப்ட் என்று இரவு நேரப் பணிக்கும் ஆட்களை வரவைத்து உற்பத்தி, வேலை தொடர்வதை உறுதிசெய்வது நிகழ்கிறது. ஆனாலும்கூட இவ்வாறான இரவுப் பணிகளும் அன்றாட வாழ்வின் கட்டுமானங்களுக்குள்தான் நிகழ்கின்றன. உதாரணமாக, இரவில் உள்ளூர்ப் போக்குவரத்து என்பது மிகவும் குறைவாகத்தான் இருக்கும் அல்லது முற்றிலும் இருக்காது.
இயற்கைக் கட்டுமானம்: பெரும்பாலானோர் இல்லங்களில் உறங்கும், ஓய்வெடுக்கும் நேரமாக இரவு இருப்பதால், பொதுவெளியில் நடமாட்டம் குறைவாக இருப்பதால், இரவு நேரம் என்பது பெண்கள் பொதுவெளியில் நடமாடுவது இன்றைக்கும் பாதுகாப்பானதாக இல்லை. ராமராஜ்யம் என்ற லட்சிய சமூகத்துக்கு வரையறையாக, ‘எங்கே ஒரு பெண், ஆபரணங்கள் அணிந்து நடுநிசியில் அச்சமின்றிச் செல்ல முடிகிறதோ அதுதான் ராமராஜ்யம்’ என்று கூறப்பட்டது. இன்றைக்கும் அப்படி இல்லாததால் நகரங்களில் பெண்ணுரிமை இயக்கங்கள், ‘இரவைத் திரும்ப எடுத்துக்கொள்ளுதல்’ (Take Back the Night) என்பது போன்ற நிகழ்வுகளை ஒருங்கிணைக்கின்றன.
எதற்காக இரவு, பகலைப் பற்றி இவ்வளவு கூறுகிறேன் என்றால், எத்தனையோ மாற்றங்களுக்குப் பிறகும் பூமியின் அன்றாடச் சுழற்சி அமைக்கும் இயற்கைக் கட்டுமானத்தில்தான் நமது வாழ்க்கை நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதைக் கூறத்தான். நமது உடலின் இயக்கங்களும் சமூக இயக்கங்களும் பெருமளவு இதனை அனுசரித்துதான் அமைகின்றன.
மானுடம் இதற்கு வேறொரு பரிமாணத்தை வழங்குகிறது. அது என்னவென்றால் நாள்கள், கிழமைகள், மாதங்கள், ஆண்டுகள் என அன்றாடத்தைத் தினசரியாக்கிக் காலக்கோட்டில் தொகுக்கிறது. பூமியின் சுழற்சி தொடர்ந்து நடைபெறும். ஆனால் செப் 12, 2024 என்ற தேதியும், இதை நான் தட்டச்சு செய்யும் காலை 10 மணி 3 நிமிடமும் மீண்டும் வராது. இந்தக் கணக்கீட்டில் நாள், அடுத்த நாள், அதற்கடுத்த நாள் காலம் நேர்க்கோட்டில் ஓர் அம்புபோலப் பயணிக்கிறது. சுழற்சி மறுதலிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக, ஆண்டுகளுக்கும் எண்களைக் கொடுத்து, பொது ஆண்டு என்று ஒன்றைத் தேர்ந்தெடுத்து (ஏசு கிறிஸ்து பிறப்பு) பொது ஆண்டுக்கு முந்தைய ஆண்டு, பொது ஆண்டு என்று ஒரு மானுட வரலாற்றுக் காலத்தை உருவாக்கி, இதனைக் குழந்தைகளுக்கும் பயிற்றுவிக்கிறோம். பொது ஆண்டு 2024இல் வாழும் நாம் 5,000 ஆண்டுகளுக்கு முன்வரையிலான மானுட வாழ்க்கைத் தடயங்களைச் சேகரித்து வரலாற்றுக் காலமாகப் பயில்கிறோம்.
இந்த வரலாற்றுக் காலங்களை உருவாக்குவதில் ஒட்டுமொத்த மானுடமும் இணைந்து பயணிக்கவில்லை. ஆங்காங்கே விவசாயம், வர்த்தகம், தொழில், அரசர்கள் என்று உருவான மையங்கள் காலப்போக்கில் அச்சுத்தொழில், பெருகும் வர்த்தகப் பரிமாற்றம், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, இயந்திரங்களின் பெருக்கம் என மாற்றம் கொள்ள, உலகின் பல பகுதிகளில் காடுகள், மலைகள், பாலைவனங்கள் போன்றவற்றில் பல மனித இனக்குழுக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்விலேயே தொடர்ந்தன. 20ஆம் நூற்றாண்டில் நவீன சமூக மனிதர்கள், அவ்வாறு இயற்கையோடு இணைந்திருந்த ஆதிவாசி இனக்குழுக்களிடையே சென்று அவர்கள் வாழ்க்கை முறையை ஆராய்வது மானுடவியல் என்ற துறையாக அறியப்பட்டது. இரண்டு விதமான காலப் பரிமாணங்களின் சந்திப்பாகவும் அந்த ஆய்வுகளைப் பார்க்கலாம். ஒன்று வரலாற்றுக் காலம், மற்றொன்று அன்றாடம்.