

ரா
ணுவக் குடியிருப்பு கள் அமைந்திருக் கும் கன்டோன்மென்ட் பகுதிகளின் சாலைகள் வழியே பொதுமக்கள் தங்குதடையின்றி சென்றுவருவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டிருக்கிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமன். இந்நடவடிக்கை ராணுவத்தினரின் குடும்பத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும், பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதன்படி, 62 கன்டோன்மென்ட் பகுதிகளில் உள்ள சாலைகள் திறக்கப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள், கன்டோன்மென்ட் வாரிய நியமன அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு இம் முடிவை அறிவித்தது பாதுகாப்புத் துறை அமைச்சகம்.
இந்தியாவில், மொத்தம் 62 கன்டோன்மென்ட்டுகள் உள்ளன. 19 மாநிலங்களில் மொத்தம் 1.86 லட்சம் ஏக்கர் நிலங்களில் இந்த கன்டோன்மென்ட்டுகள் அமைந்திருக்கின்றன. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இப்பகுதிகளில் 20 லட்சம் பேர் வசிக் கிறார்கள். ராணுவக் குடியிருப்புகள் இருப்பதால், பாதுகாப்பு காரணம் என்று சொல்லி இந்தப் பகுதிகளில் வெளியாட்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், கன்டோன்மென்ட்டுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், ராணுவத்தினர் பிரத்யேகமாகப் பயன்படுத்தும் சாலைகளைத் தவிர்த்து, வேறு பாதைகளில் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியிருக் கிறது. தேசிய நெடுஞ்சாலைகள்கூட கன்டோன்மென்ட் பயன்பாட்டுக்காக மூடப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், இப்படி சாலைகள் மூடப்பட்டிருப்பதால் தங்கள் பகுதியைச் சேர்ந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேர்கிறது என்று பல மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியிருந்தனர். இதைத் தொடர்ந்தே இம்முடிவை எடுத் திருக்கிறது பாதுகாப்புத் துறை. அதன்படி, அந்தச் சாலைகளில் உள்ள ‘செக் -போஸ்ட்’கள், சாலைத் தடுப்புகள் உள்ளிட்டவை அகற்றப்படும். வாகன சோதனை நடத்தப்படாது. ராணுவத் தலைமைத் தளபதி விபின் ராவத்துடன் ஆலோசித்த பிறகே, இம்முடிவை எடுத்திருப்பதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருக்கிறார்.
நிர்மலா சீதாராமனின் இந்த நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்துவருகின்றன. “அவசர சிகிச்சைக்காகச் செல்ல வேண்டிய சமயங்களில் கன்டோன்மென்ட் பகுதி சாலைகளைச் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியிருந்தது. இனி அந்தக் கவலை இல்லை” என்கிறார்கள் எம்.பி.க்கள். இந்தியாவில் ராணுவம் - மக்களுக்கு இடையிலான உறவில் இடைவெளி நிறைய இருக்கிறது. அதைக் குறைப்பதற்கு இது நல்ல திறப்பு!