கலைவெளிப் பயணம் -6 | விஜய் பிச்சுமணி: நினைவில் காடுள்ள கலைஞன்

கலைவெளிப் பயணம் -6 | விஜய் பிச்சுமணி: நினைவில் காடுள்ள கலைஞன்
Updated on
3 min read

இயற்​கையின் விழுமி​யங்​களில் ஒளிரும் கலைஞன் விஜய் பிச்சுமணி. இயற்கையோடு இசைந்​தி​யங்கும் வாழ்வின் மகத்து​வத்​தையும் மதிப்பு​களையும் கொண்டாடுபவை இவருடைய படைப்புகள். இவருடைய கலை மனமும் கலைத் திறன்​களும் அயரா உழைப்பும் ஒன்றோடொன்று முயங்கித் திளைத்து உருக்​கொண்​டிருக்கும் இவருடைய படைப்புலகம் பிரமிப்பும் திகைப்பும் அளிப்பது. கிராமம், காடு, மலை, அதன் மக்கள், மரங்கள், விலங்​குகள், பறவைகள் என இயற்கையோடு உணர்வு​பூர்வமாக உறவாடும் படைப்பு மனம் கொண்ட​வர்​.

நம் தொன்மையான வாழ்வின் மீதான ஏக்கங்​களும் ஆதங்கங்​களும் அதன் அழிவு குறித்த கவலைகளும் வேதனை​களும் உள்ளுறைந்​திருக்கும் படைப்புலகம் இவருடையது. இவை ஒருவகை​யில், விஜய் பிச்சுமணியின் கலைரீ​தியான பிரத்​தி​யேகக் கதையாடல்கள். இவருடைய படைப்பு​வெளி, தோற்றத்தில் பிரம்​மாண்​ட​மானது; வெளிப்​பாட்டில் கலை நுட்பங்கள் கூடியது. இவருடைய இந்தத் தனித்துவமான அம்சம்தான் பார்ப்பவர் எவரையும் ஒரே சமயத்தில் பிர​மிப்​புக்கும் திகைப்​புக்கும் ஆளாக்கு​கின்றன.

தமிழகத்தின் நவீனக் கலைவெளி​யில், தங்களின் தொடர்ந்த கலைப் பயணத்​தினூடாகவும் அறிதல்​களினூடாகவும் கலை மேதமையை அடைந்த பல கலைஞர்கள் நம்மிடையே இருந்​திருக்​கிறார்கள்; இருக்​கிறார்கள். கே.சி.எஸ்​.பணிக்கர், எஸ்.தனபால், எல்.முனுசாமி, சந்தான​ராஜ், பி.வி.ஜானகிராம், ஆதிமூலம், ஆர்.பி.பாஸ்​கரன், தட்சிணா​மூர்த்தி, அச்சுதன் கூடலூர், சி.டக்ளஸ் எனப் பல கலை ஆளுமைகள். எனினும், நான் அறிந்தவரை இளம் வயதிலேயே, ஆற்றல்​மிக்க படைப்​பாளு​மை​களாக, இளம் மேதைகளாக வெளிப்​பட்​ட​வர்கள் என கே.ரா​மானுஜம், சூரியமூர்த்தி (மாணவப் பருவத்​திலேயே தேசிய விருது பெற்றவர். அன்று கல்லூரி முதல்வராக இருந்த கே.சி.எஸ்​.பணிக்​கரும், அச்சமயம் கல்லூரியில் மாணவராகப் பயின்ற சூரியமூர்த்தியும் ஒரே ஆண்டில் தேசிய விருது பெற்றது ஓர் அரிய நிகழ்வு), மரிய அந்தோணிராஜ் ஆகியோரைக் குறிப்​பிடலாம். இன்று, ஓர் இளம் படைப்புச் சக்தியாக விஜய் பிச்சுமணி வெளிப்​படுவதை அவதானிக்க முடிகிறது.

ஓவியத்தில் ஒரு பையன்

கடந்த ஜூலை முதல் வாரத்தில் சென்னை லலித் கலா அகாடமியின் விஸ்தாரமான கலைக்​கூடத்தில் விஜய் பிச்சுமணியின் தனிநபர் கண்காட்சி நடைபெற்றது. அந்த மிகப் பெரிய கலைக்​கூடத்தின் சகல பகுதி​களிலும் அவருடைய கலைப் படைப்புகள் நேர்த்தியாக நிறைந்​திருந்தன. அவருடைய முந்தைய படைப்பு​களில் சிலவும் சமீபத்திய படைப்பு​களும் அடங்கி ஒன்றாகப் பிரமிக்​க​வைத்த கண்காட்சி அது. தாள், கேன்வாஸ், மரம், உலோகம், கல், களிமண் எனப் பல்வேறு சாதனங்​களினூடாக அவருடைய கிராமமும் காடும் மலையும் சார்ந்த இளம் பிராயத்து வாழ்க்கை விரிந்து பரந்திருந்தது. கலை ஆற்றலிலும் அதன் நேர்மை​யிலும் அவை வளமும் பலமும் பெற்றிருந்தன.

நான் யார் என்கிற அடிப்​படைக் கேள்விக்கான தேடலில் அவர் கண்டடையும் அடையாளங்​களாகவே அவருடைய படைப்புகள் அமைந்​திருக்​கின்றன. கிராமத்து அப்பா சைக்கிளில் தன்னுடைய குடும்பத்தை- முன்னால் ஒரு பையன், பின்னால் கேரியரில் மனைவியும் இரு பையன்​களும் என - அழைத்துச் செல்லும் இரவுப் பொழுதில் சைக்கிளின் டைனமோ வெளிச்​சத்தில் விரியும் காடு, அவருடைய பால்யத்தின் இயற்கை வாழ்வைப் பிரத்​தி​யட்சமாக உணர்த்து​கிறது; நம் வேர்களி​லிருந்து துண்டிக்​கப்பட்ட நகர மனிதர்​களின் வாழ்க்கை மதிப்புகள் இன்று அவரைக் கலக்கமடைய வைக்கின்றன என்பதையும் அறிய முடிகிறது.

பேரக் குழந்​தையைத் தன்னோடு இறுக அணைத்​துக்​கொண்​டிருக்கும் ‘பாட்​டி​யம்மா’ ஓவியத்தில் இன்றைய குழந்தைகள் இழந்திருக்கும் ஒரு வாழ்வின் வேதனை உள்ளுறைந்​திருக்​கிறது. தன் வாழ்விடமான மலைக்​காட்டில் தன்னியல்பாக நடந்துசெல்லும் யானையின் கம்பீர அழகில், இன்று நகரத் தெருக்​களிலும் கோயில் வாசல்​களிலும் ஆசிர்​வாதம் வழங்கிப் பிச்சையெடுக்க வைக்கப்​படும் அவலம் உள்ளுறைந்​திருக்​கிறது. ஓர் அழகிய கலைச் சொல்லாடலின் மூலம் சொல்லப்படாத அவலமும் உள்ளுறையாக இவருடைய படைப்பு​களில் அமைந்​திருக்​கின்றன. இவருடைய கலை ஆற்றலின் மகத்துவம் இது.

வாழ்க்கைக் கோலம்

இவருடைய ஆற்றல்​மிக்க அதிர்​வூட்டும் கோடுகள் இயற்கையின் அலாதியான இசைப் பிரவாகத்தின் அற்புத லயத்துடன் இயங்கு​கின்றன. இக்கோடு​களில் வெளிப்​படும் இயற்கையின் ரகசியங்கள், புது வாழ்வுக்கான நறுமணத்தோடு பரவுகின்றன. நம் பூமி வாழ்வுக்கு உரமளிப்​பவர்​களாகவும் பாதுகாவலர்​களாகவும் வாழும் விவசா​யிகளின் வாழ்க்கைத் தடங்கள் நம்பிக்கை​யுடன் ஒளிர்​கின்றன.

ஆந்தையின் விநோத அழகு

மாடுகளின் சிற்ப வரிசை - ஒரு வாழ்க்கையின் கோலாகலம். மாடுகளின் சுபாவமான நடையில் மிளிரும் அழகு வியப்​பூட்டும் அதேசமயம், அவற்றின் உடல்களில் மாடுகள் சார்ந்த நம் விவசா​யிகளின் வாழ்க்கைச் சித்திரங்களை அவர் தீட்டி​யிருப்பது அவற்றுக்கு உயிர்ப்​பூட்டும் பரிமாணங்களை அளிக்​கின்றன. இவருடைய மரச் சிற்பங்கள் மிகவும் பெறும​தி​யானவை. உணர்வு​களின் நுட்பங்கள் கூடியவை. நம் காலத்தின் மகத்தான கலைஞனான சி.டக்ளஸ், ஒரு கலைஞனுக்கு அத்தி​யா​வசியமான நேர்மையை விஜய் பிச்சுமணி கொண்டிருப்​ப​தாகச் சிலாகிக்​கிறார்.

மேலும், விஜய் பிச்சுமணியின் ஒரு மரச் சிற்பம் பற்றி டக்ளஸ் இவ்வாறு குறிப்​பிடு​கிறார்: “அவருடைய ஒரு தொங்கும் மரச் சிற்பத்தை நாம் பார்க்​கலாம். அது மேல், மையம், கீழ் என மூன்று துண்டு​களைக் கொண்டிருக்​கிறது. மேல் பகுதி, வளமான, உணர்வு​பூர்வமான வளைவு​களோடு அமைந்​திருக்​கிறது. கீழ்ப் பகுதி, ‘V’ வடிவிலான சில கூறுகளைக் கொண்டிருக்​கிறது. அவை, ஒழுங்​கற்றும் உடைந்த கண்ணாடித் துண்டு​களைப் போன்ற கூர்முனை​களோடும் காணப்​படு​கின்றன. மையப் பகுதியில் அமைந்​திருக்கும் எரிந்த கரித்​துண்டம் போன்ற புதிரான பகுதி தனி ஈர்ப்பைக் கொண்டிருக்​கிறது. அது, நம் காலத்தின் இருண்ட கதைகளைக் கூறுகிறது. படைப்பு அதன் முழுமை​யில், வளத்தையும் அதன் அழிவையும் கலை நுட்பத்தோடு சொல்கிறது”.

ஆந்தையின் விநோத அழகு, பரபரத்துத் திரியும் காகங்​களின் கூட்டம் என எந்த ஒரு படைப்பின் உருவாக்​கத்​திலும் இவர் மேற்கொள்ளும் நேர்மையான கடும் பிரயாசை​தான், படைப்பு அதிகபட்சச் சாத்தி​யங்களை அடைய உதவியிருக்​கிறது. இனி வரும் காலம், படைப்பு​வெளியில் இவரைப் பல புதிய திசைகளுக்கும் அறிதல்​களுக்கும் அழைத்துச் செல்லும்​போது, இவரின் மேதமை அதன் உச்சங்​களில் ஒளிரும் என்பதில் சந்தேகமில்லை.

விஜய் பிச்சுமணியின் படைப்புகள், அவற்றை அணுகும் எந்தவொரு பார்வை​யாளனிடமும் நேசத்தோடு பிணைப்பு​கொள்ளும் அலாதியான குணம் கொண்டவை. இவருடைய படைப்பு​களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் சென்னை நுங்கம்​பாக்​கத்தில் உள்ள ஆர்ட் ஹவுஸ் கேலரியில் இவருடைய பல படைப்புகள் இருக்​கின்றன. அறிதலுக்கான வேட்கையும் ஆர்வமும் உள்ளவர்கள் அங்கு சென்று அவற்றைப் பார்வை​யிடலாம். ஒரு புதிய கலை உலகம் உங்களை நேசத்தோடு அரவணைத்​துக்​கொள்வதை உணர்வீர்​கள்​.

- கவிஞர், கலை விமர்சகர்
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in