

து
யரமானதும் அதிர்ச்சியூட்டக்கூடியதுமான ஷுஜாத் புகாரி படுகொலை சம்பவம், மோதல்கள் எந்த அளவுக்கு மூர்க்கத்தன்மையை அடைந்திருக்கின்றன என்பதற்கான மற்றுமொரு உதாரணம். வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை அவசியம் என்று வலியுறுத்திவந்ததால் தாக்குதலுக்குள்ளான தியாகிகளின் வரிசையில் ஷுஜாத் புகாரியும் சேர்ந்திருக்கிறார். எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்கள் முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்திய அப்துல் கனி லோன் சுட்டுக்கொல்லப்பட்டார். காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவந்த ஃபஸல் ஹக் குரேஷி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அவர் உயிர் பிழைத்தார். ஆனால், ஷுஜாத் விஷயத்தில் அப்படி நடக்கவில்லை. காஷ்மீரில் இளைஞர்கள் தீவிரவாதத்தை நோக்கி நகர்வது உச்சத்தை அடைந்திருக்கும் சூழலில், அங்கு நிலைமை மோசமாகிவருவதைச் சுட்டிக்காட்டுவதில் அவரது கடைசி நாட்கள் கழிந்தன. ரம்ஜானை ஒட்டி கொண்டுவரப்பட்ட போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் அரசின் முடிவு துரதிர்ஷ்டவசமானது. ஷுஜாத் உயிருடன் இருந்திருந்தால் இதுகுறித்து எச்சரித்திருப்பார்.
காஷ்மீர் இளைஞர்களை அமைதிப் பாதைக்குத் திருப்பும் ஒரு கொள்கைக்காக ஷுஜாத் தொடர்ந்து போராடிவந்தார். ஜம்மு, லடாக் பகுதிகளிடையே மட்டுமல்லாமல், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு வெளியில் உள்ள பகுதிகளையும் உள்ளடக்கியே இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையில் உறவுப் பாலத்தை அமைக்க அவர் விரும்பினார். இந்திய, பாகிஸ்தான் அரசுகளாலும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளாலும் காஷ்மீர் மக்கள் பெருந்துயரை எதிர்கொள்ள நேர்ந்த சூழலிலும், வசைபாடும் விதத்திலோ, கொந்தளிப்பை வெளிப்படுத் தும் விதத்திலோ அவர் ஒருபோதும் செயல்பட்டதில்லை. ஒழுக்கத்துக்குப் பேர்போன அவர், காஷ்மீர் மக்களின் நலன் தொடர்பாகத் தெளிவான பார்வை கொண்டிருந்தார்.
‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் நிருபராக ஷுஜாத், பணியாற்றிவந்தபோதுதான் அவரை முதன்முதலாகச் சந்தித்தேன். ஆனால், 2010-ல் இந்திய அரசு அமைத்த பேச்சுவார்த்தைக் குழு உறுப்பினராக நான் நியமிக்கப்பட்ட போதுதான் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமைந்தது. பேச்சுவார்த்தைப் பிரதிநிதிகளாகப் பலர் வந்துசென்றபோதும், ஒரு அரசியல் தீர்வை நோக்கி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், இவ் விஷயத்தில் பிற காஷ்மீரிகளைப் போலவே ஷுஜாத்தும் நம்பிக்கையில்லாமல்தான் இருந்தார். எனினும், அவர் எங்களுக்கு உதவவே செய்தார்.
தொடக்கத்தில் காஷ்மீரின் பிற ஊடகங்களைப் போலவே, எதிர்மறையான எண்ணத்துடன்தான் அவரது ‘ரைசிங் காஷ்மீர்’ நாளிதழும் எங்கள் பணிகளை அணுகியது. எனினும், நாங்கள் அவ்விஷயத்தில் நேர்மையாகப் பணியாற்றுவதைப் பார்த்த பின்னர் (அரசில் அங்கம் வகித்த எங்களது மேலதிகாரிகள் அப்படி இல்லை என்பது வேறு விஷயம்!) எங்கள் நோக்கத்துக்கு ஆதர வாக அவரது நாளிதழ் செயல்பட்டது. ஸ்ரீநகர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போராளிகளை நாங்கள் சந்தித்துப் பேசியபோது, பாஜகவினரும், தேசிய அளவிலான ஊடகங்களும் எங்களைக் கிண்டல்செய்தன. அதற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் என்னிடம் ஷுஜாத் பேசினார். அதன் பிறகுதான், எங்கள் பணிகள் தொடர்பாகச் செய்தி சேகரிக்க, தனது நாளிதழின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரை நியமித்தார் ஷுஜாத். ‘ரைசிங் காஷ்மீர்’ நாளிதழிலும், அதைத் தொடர்ந்து ‘கிரேட்டர் காஷ்மீர்’ நாளிதழிலும் எங்கள் பணி தொடர்பான செய்தி கள் வெளியான பிறகுதான், காஷ்மீர் மக்கள் மத்தியில் எங்களுக்கு ஆதரவான கருத்து உருவானது.
அவரது தொடர் தூண்டுதலின் காரணமாகத்தான், அவரது நாளிதழிலும் பிற நாளிதழ்களிலும், அரசு விளம்பரங்கள் செய்ய விதித்திருந்த தடையை மத்திய உள்துறை அமைச்சகம் விலக்கிக்கொண்டது (அதுவும் கொஞ்ச காலத்துக்குத்தான்!). கல்லெறிதல் சம்பவங்களில் ஈடுபட்டதால் கைதுசெய்யப்பட்ட நூற்றுக்கணக்கானோர் விடுவிக்கப்பட்டதும் அவரது முயற்சியின் காரணமாகத்தான். எல்லாவற்றுக்கும் மேலாக, ஜம்முவிலும் லடாக்கிலும் எங்கள் குழு ஆற்றிய பணிகள் தொடர்பாக, அதிகமாகச் செய்திகள் வெளியிட்ட மிகச் சில காஷ்மீர் நாளிதழ்களில் அவரது ‘ரைசிங் காஷ்மீ’ரும் ஒன்று. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைத் தவிர்த்துவிட்டு, ஜம்மு - காஷ்மீர் தொடர்பாக மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று எங்கள் குழுவின் பிற உறுப்பினர்கள் விரும்பியபோது, குழுவின் இறுதி அறிக்கையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளையும் இடம்பெறச் செய்வதில் உறுதி யாக நிற்குமாறு என்னை ஊக்குவித்தவர் அவர்தான்!
மனித உரிமைப் பிரச்சினைகள், ராணுவமயத்தைக் குறைப்பது, ‘சுதந்திர காஷ்மீர்’ குழுக்களுடனான (அவர்களின் பேச்சுவார்த்தைகள் ஆயுதப் பிரிவினர் உட்பட!) பேச்சுவார்த்தை என்று பல்வேறு விஷயங்களை உள்ளடக்கும் வகையில் பேச்சுவார்த்தைக் குழுவின் பணிகளை விஸ்தரித்தது, எங்களுக்கு ஷுஜாத்தின் ஆதரவைப் பெற்றுத்தந்தது.
ஆனால், இதே முயற்சிகளின் காரணமாக மத்திய அரசின் ஆதரவை நாங்கள் இழந்தோம் என்பதுடன், எங்கள் குழு பலவீனமான நிலைக்கும் தள்ளப்பட்டது. எனினும், பிற காஷ்மீரிகளைப் போலவே, தனிநபர்கள் என்ற முறையில் எங்களை வரவேற்றவர் ஷுஜாத். காஷ்மீர் விஷயத்தில் அரசு, அரசியல்ரீதியாகச் செயல்படும் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை. ஆனால், எந்த அளவுக்கு அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் செயல்படுகிறோமோ அந்த அளவுக்கு அனைவருக்கும் நன்மை கிடைக்கும் என்று நம்பினார். தற்காலிகத் தீர்வுடன், நிரந்தரத் தீர்வையும் அவர் விரும்பினார்.
அவர் எதிர்பார்த்ததுபோலவே, அரசு அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபடாமலேயே, எங்கள் பணி முடிவுக்கு வந்தது. அதன் பிறகு, அவருடன் சேர்ந்து பணிபுரிய வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், காஷ்மீர் தொடர்பாகத் தொடர்ந்து அவருடன் விவாதித்துவந்தேன். எனது அடுத்த புத்தகம் பற்றித்தான் அவருடனான எனது கடைசி உரையாடல் இருந்தது. தானும் ஒரு புத்தகத்தை எழுதிவந்ததாக என்னிடம் சொன்னார். “புத்தகப் பணிகளைத் துரிதப்படுத்துங்கள். அப்போதுதான் உங்கள் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்ட முடியும்” என்றேன். ‘‘நாளிதழ் பணிதான் முதன்மையானது. புத்தகத்துக்கு இன்னும் நேரம் இருக்கிறது’’ என்றார் ஷுஜாத். அது நிறைவேறாமலேயே போய்விட்டது. அவர் எழுதிய அத்தியாயங் கள் விரைவில் பதிப்பிக்கப்பட வேண்டும்.
இந்த அஞ்சலிக் கட்டுரையை ஒரே ஒரு நம்பிக்கையுடன் நிறைவுசெய்கிறேன். ஷுஜாத் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் இந்திய அரசு, பாகிஸ்தான் அரசு, சுதந்திர காஷ்மீர் குழுக்கள் என்று அனைத்துத் தரப்பினரும், போர் நிறுத்தத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும். மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர, அரசியல்ரீதியான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும். தனது வாழ்நாள் முழுவதும் ஷுஜாத் பணியாற்றியது அதற்காகத்தான்!
- ராதா குமார், எழுத்தாளர், அரசியல் ஆய்வாளர்.
‘தி இந்து’ ஆங்கிலம்
தமிழில்: வெ.சந்திரமோகன்