மணிப்பூர் பிரச்சினை: இனியும் தொடரலாகாது!

மணிப்பூர் பிரச்சினை: இனியும் தொடரலாகாது!
Updated on
2 min read

கடந்த 16 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் நிலவிவரும் அமைதியின்மை மிகுந்த வருத்தமளிக்கிறது. மாநிலத்தின் அனைத்துத் தரப்பினரையும் முடக்கிப்போட்டிருக்கும் இந்த விவகாரத்தில், உரிய தீர்வு ஏற்படுத்தப்படாதது ஏன் என்னும் கேள்வியும் எழுந்திருக்கிறது.

மணிப்பூரின் பெரும்பான்மைச் சமூகமான மெய்தேய் சமூகத்தினரைப் பட்டியல் பழங்குடியினராக அறிவிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு, மணிப்பூர் மாநில அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் 2023 மார்ச் 27இல் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் பதற்றச் சூழல் உருவானது.

2023 மே 3இல் வெடித்த கலவரத்தைத் தொடர்ந்து இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 6,000க்கும் மேற்பட்டோர் வீட்டை இழந்திருக்கின்றனர். பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பின்னரும் இன்னமும் அங்கு பூரண அமைதி திரும்பிவிடவில்லை. இந்நிலையில், மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. 2024 செப்டம்பர் 1 முதல் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

சட்டம் - ஒழுங்கு சீர்குலைவைச் சரிசெய்யத் தவறிவிட்ட மணிப்பூர் டிஜிபி, பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் பதவிவிலக வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். மாணவர்களின் போராட்டங்களில் சமூக விரோதிகள் ஊடுருவி, இத்தகைய போராட்டங்களை வன்முறை வடிவமாக்கிவருவதாகக் காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கின்றன. அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக மணிப்பூர் பல்கலைக்கழகம் அறிவித்துவிட்டது. கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் தாங்கள் செல்லப்போவதில்லை என்று மாணவர் அமைப்புகளும் பிடிவாதம் காட்டுகின்றன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் பள்ளி மாணவர்களும் பங்கெடுத்திருக்கின்றனர்.

செப்டம்பர் 10 அன்று ஆளுநர் மாளிகையை நோக்கி மாணவர்கள் நடத்திய பேரணியின்போது வன்முறை வெடித்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற கலவரங்களின்போது போராட்டக்காரர்கள் எடுத்துச்சென்ற காவல் துறை ஆயுதங்கள் இன்னமும் முழுமையாக மீட்கப்படவில்லை.

அந்த ஆயுதங்கள் மட்டுமல்லாது, கூடுதலாக ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலமும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. ட்ரோன் தாக்குதலுக்கு மெய்தேய், குக்கி என இரண்டு தரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொள்கின்றன. சிஆர்பிஎஃப் முகாம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இந்தப் பிரச்சினைகளுக்கு இடையே, ஆளுநர் லக் ஷ்மண் ஆச்சாரியா அசாமுக்குச் சென்றுவிட்டார். அசாம் ஆளுநராகப் பதவிவகிக்கும் லக் ஷ்மண் ஆச்சாரியாவே மணிப்பூர் ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார்.

இவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் ஒரு மாநிலத்துக்குப் பிரத்யேகமாக ஓர் ஆளுநரை நியமிக்காததும் விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது. வன்முறைச் சம்பவங்கள், வதந்திகள் பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு, இணைய முடக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர முனைப்புக் காட்டும் பாஜக அரசு, மணிப்பூரில் நிலவும் அமைதியின்மைக்குத் தீர்வு காண்பதில் தீவிர முனைப்புக் காட்டாதது ஏன் என்று எழுந்திருக்கும் கேள்விகள் வலுவானவை. சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணிக்குள் நிலவும் பிரச்சினையைத் தீர்க்க அங்கு செல்லும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, மணிப்பூருக்குச் செல்லத் தயங்குவது ஏன் என்னும் கேள்வியும் எழுந்திருக்கிறது. இவ்வளவு பிரச்சினைகளுக்குப் பின்னரும் முதல்வர் பிரேன் சிங் அரசு மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வராததை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.

இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண, அனைத்துத் தரப்பினருக்கும் இடையிலான இணக்கமான சூழலை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும். பாரபட்சமற்ற, வெளிப்படையான அணுகுமுறை மூலமே இதைச் சாத்தியப்படுத்த முடியும். ‘இரட்டை இன்ஜின்’ என முன்வைக்கப்படும் பாஜக மாநில அரசும் - மத்திய அரசும் இதைப் பரிசீலிக்க வேண்டும்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in