அப்பாவின் எருமை மாடு

அப்பாவின் எருமை மாடு
Updated on
1 min read

ஊர் நிறைந்திருக்கும் எருமை மாடுகளில்

தன் சிகரெட்டைத் திருடிய

மாடு எதுவென்று

அப்பா அறிவார்

அப்பாவின் அந்த ஒரு மாட்டிற்குத்தான்

அப்பாவிற்கு இரு முறை

இதயம் நின்று மீண்டதும் தெரியும்

அப்பா புகைக்கக்கூடாதென்றும் தெரியும்

ஒடுங்கிய மார்புக்கூடோடு

பரபரக்கும் கைகளோடு

அப்பா சிகரெட்டைத் தேடும்போது

மாடு சிலசமயம்

திருடிய சிகரெட்டை நீட்டும்

பற்ற வைத்தும் கொடுக்கும்

அப்பாவின் சிரிக்கும் கண்களை

பேதமையோடு பார்த்து நிற்கும்

ஏன் என் சிகரெட்டைத் திருடினாயென

அப்பாவும் கேட்டதில்லை

எருமை மாடும் சொன்னதில்லை

எருமை மாடு சிகரெட் பிடிக்காதென்று

எல்லோருக்கும் தெரியும்தானே

ஆனாலும் அப்பா ஊரறியச் சொல்வார்

என் எருமை புகைக்காதென

உண்மையிலேயே எருமை புகைத்த தினத்தன்று

அப்பா எழுந்திருக்கவேயில்லை

அந்த சிகரெட் திருடியதில்லைதானே

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in