கூடுதல் சுங்கச் சாவடிகள் எப்போது மூடப்படும்?

கூடுதல் சுங்கச் சாவடிகள் எப்போது மூடப்படும்?
Updated on
2 min read

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்த 5% முதல் 7% வரையிலான சுங்கக் கட்டண உயர்வு, தமிழ்நாட்டில் 25 சுங்கச் சாவடிகளில் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி ரூ.5 முதல் ரூ.150 வரை கட்டணம் அதிகரித்துள்ளது. இக்கட்டண உயர்வு தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளைக் கவலைக்குள்ளாக்கி உள்ளது.

தமிழ்நாட்டில் 3,109 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் 67 சுங்கச் சாவடிகள் செயல்பட்டுவருகின்றன. இவற்றில் 2008ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண (நிர்ணயம் - வசூல்) விதிகளின்படி ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல், செப்டம்பர் என இரண்டு கட்டங்களாகக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரலில் மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், தமிழ்நாட்டில் 36 சுங்கச் சாவடிகளின் கட்டணம் ஜூனில் உயர்த்தப்பட்டது. தற்போது 25 சுங்கச் சாவடிகளுக்குக் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

ஏற்கெனவே விலைவாசி உயர்ந்து பொதுமக்களை வாட்டிவரும் நிலையில், இந்தக் கட்டண உயர்வு வாகன ஓட்டிகளுக்குச் சுமையாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதேபோல ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கிவரும் அரசுப் போக்குவரத்துக்கழகத்துக்கு மேலும் நிதிச்சுமையைக் கூட்டிவிடும்.

இது பேருந்துக் கட்டணத்தை உயர்த்தவும் வழிவகுத்துவிடும். சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்கள் கூடுதலாகச் செலுத்த வேண்டிய சுங்கச் சாவடிக் கட்டணங்கள், மறைமுகமாக மக்கள் தலையிலேயே ஏற்றப்படும் அபாயமும் உண்டு. இதன் விளைவாக, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரக்கூடும். எனவே, ஒவ்வோர் ஆண்டும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்த வழிவகுக்கும் விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டியது அவசியமாகிறது.

மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் நேரடியாகவோ அல்லது தனியார் பங்களிப்பு மூலமோ தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்கவும் அதைப் பராமரிக்கவுமே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேம்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளால் பயண நேரம் குறைந்து, துரிதப் போக்குவரத்தும் சாத்தியமாகியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், தேசிய நெடுஞ்சாலைகளில் போதிய பராமரிப்பு, பயணிகளுக்கு வசதிகள் இல்லை என்கிற குறைபாடுகளும் இருக்கவே செய்கின்றன.

தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காகச் செய்யப்பட்ட முதலீட்டை லாபத்துடன் எடுத்துவிட்டதால் சுங்கச் சாவடிகள் மூடப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. 60 கி.மீ.க்கு ஒரு சுங்கச் சாவடி இருக்க வேண்டும், மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளிலிருந்து 10 கி.மீ. தள்ளியே சுங்கச் சாவடிகள் இருக்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகள் கண்டுகொள்ளப்படவில்லை என்கிற புகார்களும் இருக்கின்றன. தேசிய நெடுஞ்சாலைத் துறையில் முறைப்படுத்த வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. அதை விடுத்து, ஆண்டுதோறும் கட்டண உயர்வில் மட்டும் கவனம் செலுத்துவது சரியா என்னும் கேள்வியும் எழுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக சுங்கச் சாவடிகள் இருப்பதாக அரசியல் கட்சிகள் தொடர்ந்து சுட்டிக்காட்டிவருகின்றன. தமிழ்நாட்டில் கூடுதலாக உள்ள 32 சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று பொதுப்பணி - நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2021இல் அறிவித்தார். எனவே, அதற்கான முயற்சிகளில் மாநில அரசு முனைப்போடு ஈடுபட வேண்டும். இனிமேலாவது தமிழ்நாட்டில் கூடுதல் எண்ணிக்கையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்படும் சுங்கச் சாவடிகளை மூடுவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in