Published : 03 Aug 2014 12:00 AM
Last Updated : 03 Aug 2014 12:00 AM

சண்டியர் ஞாபகங்கள்…

சரியாக 10 ஆண்டுகளுக்கு முன் கமல்ஹாசன் எடுத்த ‘சண்டியர்’ படம் அப்போது தமிழக அரசியலில் பெரும் அமளியைக் கிளப்பியது. முக்கியமாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ‘சண்டியர்’ படத்தின் பெயரை மாற்றச் சொல்லிப் புயலைக் கிளப்பினார். ஒருகட்டத்தில் கமல் படத்தின் பெயரை ‘விருமாண்டி’ என்று மாற்றி வெளியிட வேண்டிய சூழல் உருவானது. இப்போது அதே ‘சண்டியர்’ என்ற பெயரில் ஒரு படம் வந்து ஓடிக்கொண்டிருக்கும் சூழலில், அன்றைக்கு கமல் அளித்த பேட்டி ஞாபகத்துக்கு வருகிறது. அந்தப் பேட்டியிலிருந்து...

இந்தப் படத்துக்கு ‘சண்டியர்’ன்னெல்லாம் பேர் வைக்கக் கூடாது. அண்ணன் கிருஷ்ணசாமி கோவிச்சிக்குவாரு. ‘கிட்டிவாசல்’னு வைக்கலாம்னு இருந்தோம். ஆனா, அப்படி பேரு வச்சம்னாலும் கிருஷ்ணசாமி கோவிச்சிக்குவாரு. ஏன்னா, அவர் செல்லப்பேரு கிட்டி. சரி, ‘அரங்கேற்றம்’னு வைக்கலாம்னா அது எங்க வாத்தியர் படத்தோட பேரு. எங்க வாத்தியார் கோவிச்சிக்குவாரு. ‘அவ்வையார்’னு வைக்கலாமான்னு பாத்தோம்… ஆனா, அவ்வையாருக்கும் இந்தப் படத்துக்கும் சம்பந்தமே இல்ல. என்னடா பண்றது! ‘காளமாடு’, ‘முரட்டுக்காளை’ன்னு வச்சா ரஜினிகாந்த் கோவிச்சிக்குவாரு. என்ன பண்றது… ‘பராசக்தி’ன்னு வைக்கலாமான்னு பாத்தோம். கலைஞர் கோவிச்சுக்குவாரு. என்ன பண்றதுன்னே தெரியல.

‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அடிமைப் பெண்’… என்னென்னவோ யோசிச்சி பாத்தோம். அப்புறம், ‘சும்மா’ அப்பிடின்னு வைக்கலாம்னு பாத்தோம். அப்புறம், பேரில்லாம வைக்கலாம்னு பாத்தோம். என்ன பண்றதுன்னே தெரியல. தமிழ்க் கலாச்சாரம்ங்குறது ரொம்ப முக்கியமான விஷயம். ஏன்னா, அஞ்சி வருசத்துக்கு ஒரு தடவ மாறிக்கிட்டே வரும், இந்த அரசியல்வாதி மாதிரி! அதைக் காப்பாத்துறது ரொம்ப முக்கியம். நீங்க பாத்திங்கன்னா, ஒரு அம்பது வருசத்துக்கு முன்னாடி ஒரு விதவைப் பெண் திருமணம் பண்ணிக்கிட்டா அது தப்பு. நூறு வருசத்துக்கு முன்னாடின்னா கொன்னுடுவாங்க. அதான் கலாச்சாரம். எப்டி மாறிக்கினே வருது பாருங்க! அதைக் காப்பாத்துறதுதான் நம்ம வேலை.

அதுக்கு முன்னாடி சமணர்களை எல்லாம் கழுவில் ஏத்துனாங்க. அது நம்ம கலாச்சாரம். சிவன் பேரால் கழுவேத்தினது கலாச்சாரம். களப்பிரர்கள் வந்தாங்க இங்க. அவங்க கத்துக்கொடுத்த தமிழ்தான் இப்ப மிச்சம் இருக்கு இங்க. அதான் கலாச்சாரம். அப்புறம் வெள்ளக்காரன் வந்து சட்ட போட கத்துக்கொடுத்தான். அதுக்கு முன்னால நம்ம பொம்பளைங்கள்லாம் ஜாக்கெட்டே போட மாட்டாங்க. சும்மாதான் இருந்தாங்க. அப்ப எது கலாச்சாரம்? பழைய தமிழ்க் கலாச்சாரத்துக்கும் போக முடியாது. எனக்கு ஒரே கொழப்பம். பேசாம சினிமா எடுக்குறத நிறுத்திட்டு, நானும் கலாச்சாரத்தைக் காப்பாத்தப் போயிடலாமான்னு இருக்கேன். அரிவாள் கலாச்சாரம்னு சொல்றாங்க, பாத்தா எல்லா சாமி கையிலயும் அரிவாள் இருக்கு. இப்ப அரிவாள் இல்லாம எளநிய எப்படி வெட்டுறது? இந்த மாதிரி கொஸ்டின்ஸெல்லாம் எனக்கு வருது.

இவரு குடுத்த டென்ஷன்ல எனக்கு டைரக்‌ஷனில கான்சன்ட்ரேட்டே பண்ண முடியல. படம் ஒரு மாதிரியா வந்திருக்குதுங்க. ஓடும், ஓடாதுன்னெல்லாம் நீங்க சொல்லிக்குங்க. அப்புறம் பாத்துக்கலாம். ஓடலைன்னா பேரே வைக்க வேண்டியதில்ல. ஓடுச்சின்னா, சண்டியர்ன்னே வச்சிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x