

முதன் முதலாக அசையும் உருவங்களைத் திரையில் பார்த்துத் துணுக்குற்று, மனிதர்கள் எவ்வாறு ஆச்சரியத்தில் ஆழ்ந்தனரோ அது 100 ஆண்டுகள் கடந்தும் மாறாமல் இன்றும் தொடர்வது ஆச்சரியம்தான். மனிதனின் அனைத்துவித உணர்ச்சிகளையும் உள்வாங்கிக்கொண்டு தேவையானபோது மீண்டும் அதை நிகழ்த்திக்காட்டும் சினிமா ஓர் அற்புதக் கலை.
100 ஆண்டுகளைக் கடந்தும் மக்களைப் பிரமிக்கவைக்கும் சிறந்த 100 திரைப்படங்களை வரிசைப்படுத்த பி.பி.சி. ஒரு முயற்சி எடுத்தது. அதன் ஒரு பகுதியாக ஆங்கிலம் அல்லாத 100 உலக மொழித் திரைப்படங்களின் பட்டியலைத் தயாரித்தது. உலகம் முழுவதிலிருந்தும் 41 வெவ்வேறு மொழி பேசும் 43 நாடுகளைச் சேர்ந்த 209 கலை விமர்சகர்கள் சிறந்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்தனர். அகிரா குரோசோவா இயக்கிய ‘செவன் சாமுராய்’ கிட்டத்தட்ட 40 விழுக்காடு கலை விமர்சகர்களால் கொண்டாடப்பட்டு, அந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. அது இன்றளவும் தொடர்கிறது.
ஆனால் பி.பி.சி. தேர்வுக் குழுவில் இடம்பெற்ற ஆறு ஜப்பானியர்களில் ஒருவர்கூட ‘செவன் சாமுராய்’ திரைப்படத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பது ஒரு நகைமுரண். குரோசோவா ஒரு மேற்கத்திய பாணி இயக்குநராகவே ஜப்பானில் அறியப்பட்டார். யசுஜிரோ ஓசு, கென்ஜி மிசோகுச்சி போன்ற இயக்குநர்கள் நுட்பமான, ஜப்பானியப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் படைப்புகளைத் தந்தனர். அவை ஜப்பானியர்களின் விருப்பத்திற்குரிய படைப்புகளாக இருந்தன. மொழி புரியாமல் ‘செவன் சாமுராய்’ திரைப்படத்தைப் பார்த்து ரசித்த எளிய மனிதன் தொடங்கி உலகின் முன்னணி இயக்குநர்கள் வரை இன்றும் ஒரு தவம்போலக் கண்டு ரசிக்கின்றனர்.
ஏன் அது சிறந்த திரைப்படம்?
எளிய கதை. ஒரு ஜப்பானிய விவசாயக் கிராமம். கடும் பாடுபட்டு உழைத்துக் கிடைக்கும் தானியங்களே அவர்களின் உயிரைக் காப்பாற்றும் ஒரே சக்தி. அவர்களின் விளைச்சலைக் கொள்ளை அடிக்க வரும் கொள்ளைக்காரர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள வழியின்றி இருக்கும் விவசாயிகள். சாமுராய்கள் ஜப்பானியச் சமூகத்தின் விலக்கப்பட்ட கண்ணிகள். பெருமைக்காகவும் வீரத்திற்காகவும் பட்டினி கிடக்கும் சாமுராய்களைக் கண்டுபிடித்து, அவர்களைப் பயன்படுத்தி, தங்கள் விளைச்சலை விவசாயிகள் காப்பாற்றுவதுதான் கதை.
படம் வெளியான காலக்கட்டம் இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் அதிகப்படியான இழப்பையும் தோல்வியையும் சந்தித்திருந்தது. அமெரிக்க எசமானர்களின் கண்காணிப்பு வேறு. அந்தக் காலக்கட்டத்தில் சரிபாதி ஜப்பானியர்கள் விவசாயத்தையே நம்பியிருந்தனர்.
சாமுராய் கலாச்சாரத்தில் போர் என்பது ஒரு வகையில் தவிர்க்க முடியாத விதி. சாமுராய் மனநிலையில் போர் என்றும் முடிவுறுவதே இல்லை. போரை விரும்பும் சமூகத்திடம் அந்த ஆற்றலை அழிவிற்கு அல்லாமல் உற்பத்திக்குத் திருப்பிவிடும் கதைதான் ‘செவன் சாமுராய்’.
சாமுராய் அணிதிரட்டல் பாணி
‘செவன் சாமுராய்’ திரைப்படம் ஒரு புதிய வகையினத்தையே உருவாக்கியிருக்கிறது. ஓர் உயரிய நோக்கத்திற்காக உயிரையே பணயம் வைத்துச் சாகசம் நிகழ்த்தும் பாணி. அந்தக் குழுவிற்கான உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதில் நிகழும் மாயம் இன்றுவரை தொடர்கிறது. இதை அடியொற்றிய பிந்தைய படங்களில் ஆப்ரிக்க அமெரிக்கர், பெண், பூர்வகுடி வீரர் எனப் பல்வேறு தரப்பினருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டதைப் பார்க்கலாம். ‘தி மெக்னிபிசன்ட் செவன்’ தொடங்கி, ‘ஸ்டார் வார்’, ‘பக்ஸ் லைஃப்’ எனப் பல அவதாரங்களை எடுத்துள்ளது ‘செவன் சாமுராய்’.
நூற்றுக்கணக்கான ஹாலிவுட் திரைப்படங்கள் எண்ணிலடங்காப் பிற மொழித் திரைப்படங்கள் அனைத்திலும் ‘செவன் சாமுராய்’ பாதிப்பு இருக்கிறது. இயக்குநர்களையும் நடிகர்களையும் ஒருசேரப் பாதித்த திரைப்படம் ‘செவன் சாமுராய்’. ஜப்பானியப் புதிய அலை திரைப்படத்தின் தொடக்கப் புள்ளி இந்தத் திரைப்படம். ஜப்பானியக் கதை சொல்லும் முறையில் சிக்கலான கதைமாந்தர்களின் வழியே, ஆழமான சமூக முரண்பாட்டைப் பேசியதன் மூலம் ஒரு புதிய அலை திரைப்படங்கள் உருவாகக் காரணமானது ‘செவன் சாமுராய்’. இந்தப் படத்தின் வெற்றியும் கிடைத்த அங்கீகாரமும் ஜப்பானியப் படங்களுக்கு ஒரு புதிய திறப்பை ஏற்படுத்தின. குரோசோவாவின் மேற்கும் கிழக்கும் சந்திக்கும் உத்தி, அவரது அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்தது. அதுவரையில் ஜப்பானிய சினிமாவை ஆட்டிப்படைத்த நாடக பாணியிலான ஜிடைகேகி வகைத் திரைப்படங்களை முடிவிற்குக் கொண்டுவந்தது ‘செவன் சாமுராய்’.
இயல்பான நடிப்பு, ஒளிப்பதிவு, ஒவ்வொரு சட்டகத்திற்குள்ளும் முன்னும் பின்னும் ஆக வெவ்வேறு அடுக்குகளில் நகரும் நடிகர்கள், கேமரா கோணம் எல்லாம் இணைந்து, காட்சிபூர்வமாகக் கதை சொல்லும் முறையை வளர்த்தது. சாமுராய்கள், விவசாயிகளின் கடமை, சமூகத்தில் அவர்கள் பொறுப்பு என்ன என்பதை வரையறுத்தது. அதுவரையில் இருந்துவந்த வர்க்க வேறுபாடுகளையும் தன்னையே தியாகம் செய்துகொள்ளக் கட்டாயப்படுத்தப்படும் சமூகக் கட்டமைப்பையும் கேள்வி கேட்டு, நவீனமயமாக்கலை ஆதரித்தது இப்படம்.
எழுபதாண்டு கொண்டாட்டம், முடிவுறாத திரையிடல்
1954இல் வெளியான செவன் சாமுராய் கடந்த எழுபது ஆண்டுகளாகத் தொடர்ந்து உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களில், பயிலரங்குகளில், கல்லூரிகளில், பொது இடங்களில் திரையிடப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. ஃபிலிம் ரோல்கள், கேசட், சி.டி. டி.வி.டி. பென் ட்ரைவ், இன்டர்நெட் என வடிவங்கள் மாறினாலும் திரையில் அசையும் சாமுராய்களின் மூர்க்கம் இன்னமும் குறையவில்லை. ரசிகர்களிடமும் சினிமா கற்றுக்கொள்ளும் மாணவர்களிடமும் ஒரே நேரத்தில் தாக்கம் செலுத்துகிறது இப்படம். அழுத்தமான கதாபாத்திரங்கள், யதார்த்தமான கதைசொல்லல், உடன் அழைத்துச் செல்லும் ஒளிப்பதிவு, சுவாரசியத்தைக் குலைக்காத படத்தொகுப்பு, கச்சிதமான எழுத்து, இயக்கம் என அனைத்து வகையிலும் அகிரா குரோசோவாவின் ‘செவன் சாமுராய்’ தலைமுறைகள் கடந்தும் கொண்டாடப்பட வேண்டிய மகத்தானதொரு கலைப்படைப்பு.
தொடர்புக்கு: vijai1975@gmail.com