

இந்தியாவில் பல்வேறு மொழிகளின் இலக்கியங்களைப் பாதுகாக்கவும் பரப்பவும் சாகித்ய அகாடமி 1954இல் நிறுவப்பட்டது. சிறந்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி ஊக்குவிப்பது, அவர்களது பணிகளுக்கு நிதிநல்கை வழங்குவது, பல்வேறு இந்திய மொழிகள் சார்ந்த நூல்களை வெளியிடுவது, அவற்றை ஆங்கிலத்திலும் வெளியிடுவது, வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு இடையே பண்பாட்டு நோக்கில் தொடர்பு ஏற்படும் வகையில் நிகழ்வுகளை நடத்துவது போன்றவை சாகித்ய அகாடமியின் செயல்பாடுகள்.
ஒவ்வோர் ஆண்டும் சிறந்த எழுத்தாளர், சிறந்த மொழிபெயர்ப்பாளர் போன்ற பிரிவுகளின்கீழ் சாகித்ய அகாடமி வழங்கும் விருதுகள், இலக்கிய வாசகர்களின் கவனத்தை ஈர்ப்பவை. அகாடமிக்கு டெல்லியில் தலைமையகமும் மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய இடங்களில் பிராந்திய அலுவலகங்களும் உள்ளன.
ஒருகாலத்தில் சென்னையிலும் இதற்குப் பிராந்திய அலுவலகம் இருந்தது. அது பெங்களூருக்கு மாற்றப்பட்டது. இது தமிழ் வாசகர்களுக்கு ஓர் இழப்பு எனினும், அதை ஈடுசெய்யும்வகையில், அகாடமியின் துணை அலுவலகம் (Sub-Regional Office) சென்னையில் செயல்படுகிறது. இந்திய மொழிகளில் தமிழுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம், சென்னை தேனாம்பேட்டையில் குணா கட்டிட வளாகம் என்னும் தனியார் இடத்தில் இயங்கிவருகிறது. அகாடமி அச்சிடும் நூல்கள், வேறோர் இடத்தில் வாடகை செலுத்திப் பராமரிக்கப்படுகின்றன. இந்தி மொழி நூல்களுக்கு இணையாக சாகித்ய அகாடமி தமிழ் மொழியில் வெளியிடும் நூல்களும் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகின்றன. வேறெந்த மொழியிலும் சாகித்ய அகாடமி நூல்கள் இவ்வளவு விற்பனை ஆவதில்லை.
தமிழ் வாசகர்களின் ஆதரவோடும் லாபத்துடனும் இயங்கி வரும் தமிழகப் பிரிவுக்குத் தனிக் கட்டிடம் கேட்டு, சாகித்ய அகாடமி சார்பில் தமிழக அரசிடம் 2023இல் கோரிக்கை வைக்கப்பட்டது. இலக்கியத் துறையில் முத்திரை பதித்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நினைவாகத் தமிழக அரசு, சாகித்ய அகாடமிக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே அக்கோரிக்கை. கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவடைந்துவிட்ட நிலையில், சாகித்ய அகாடமியின் கோரிக்கை என்ன ஆனது? அகாடமியின் தமிழகப் பிரிவுக்கான ஆலோசனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் பேராசிரியருமான அறவேந்தனிடம் கேட்டோம். ‘தற்போது தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் அகாடமியின் அலுவலகம், இலக்கிய நிகழ்வுகள் நிகழும் அரங்கு, நூலகம், விற்பனைப் பிரிவு ஆகிய நான்கும் குறுகிய பரப்பில் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சூழல் அகாடமியின் செயல்பாடுகளுக்குத் தடையாக உள்ளது.
அலுவலகம், அரங்கம், நூலகம், விற்பனையகம் நான்கும் இட நெருக்கடியில்லாமல் செயல்படுவதற்கு ஏற்பப் புதிய இடம் அமைய வேண்டும். அதற்காக 10,000 சதுர அடி கொண்ட இடம் எங்களுக்குத் தேவை. சென்னை போன்ற மாநகரத்துக்குள் இப்படி ஓர் இடத்தை ஒதுக்கீடு செய்வது கடினம் எனில், இடத்தை இரண்டு பகுதிகளாக அரசு அளிக்கலாம். அவற்றில் ஒன்றில் நூல்களைப் பராமரிப்போம். கர்நாடக அரசு பெங்களூருவில் உள்ள சாகித்ய அகாடமிக்கு இடம் அளித்துள்ளது. படிப்பறிவையும் வாசிப்பு இயக்கத்தையும் வலுப்படுத்துவதில் மிகுந்த அக்கறை காட்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சாகித்ய அகாடமியின் கோரிக்கையை நிறைவேற்றுவார் என்னும் நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்கிறார் அறவேந்தன்.
சென்னை கோட்டூர்புரத்தில் இயங்கி வரும் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் சாகித்ய அகாடமிக்கு இடம் ஒதுக்கப்பட்டால், நூல் வேண்டுவோர் தங்களை அணுக எளிதாக இருக்கும்; அலுவலகத்துக்குத் தேவைப்படும் பரப்பளவு அங்கு அமையச் சாத்தியங்கள் அதிகம் என்றும் ஓர் ஆலோசனையை அவர் முன்வைக்கிறார். இலக்கியம் மூலம் தெற்கையும் வடக்கையும் இணைக்கும் சாகித்ய அகாடமிக்கும் வாசகர்களுக்கும் அது பயன் உள்ளதாக இருக்கும்.