தொன்மம் தொட்ட கதைகள் - 15: கர்ணனின் காதலி

தொன்மம் தொட்ட கதைகள் - 15: கர்ணனின் காதலி
Updated on
2 min read

​வில்லி பாரதத்தில் இடம்பெற்றுள்ள பானும​திக்கும் கர்ணனுக்கும் இடையிலான தொன்மக் கதையை அடிப்​படை​யாகக் கொண்டு எழுத்​தாளர் கரிச்​சான்​குஞ்சு ‘பானுமதி’ என்றொரு சிறுகதையை எழுதி​யுள்​ளார். பதினேழாம் நாள் யுத்தத்தில் கர்ணன் கொல்லப்​படு​கிறார். துரியோதனனின் இறுதி நம்பிக்கையாக இருந்த கர்ணனின் மறைவிற்குப் பிறகு ஏறக்குறைய போர் முடிந்​து​விட்டது என்றே அனைவரும் கருதுகின்​றனர். திருத​ராஷ்டிரனும் காந்தா​ரியும் எப்படி​யாவது துரியோதனனை​யாவது காக்க வேண்டும் என்று முயல்​கின்​றனர். துரியோதனன் எவருடைய பேச்சையும் கேட்கத் தயாராக இல்லை. துரியோதனனை விட்டு​விடும்படி தன் பெரியப்பா கோரிக்கை வைத்தால் தன்னால் நிராகரிக்க முடியாது என்று தருமன் பதற்றமடைகிறார். அதற்குள் அவரைக் கொன்றுவிட வேண்டும் என்று பாண்ட​வர்கள் ஆர்வமாகக் காத்திருக்​கின்​றனர். துரியோதனனைக் கொன்றால்தான் போர் முடியும்; பீமன், திரௌப​தியின் சபதம் நிறைவேறும். இச்சூழ்​நிலை​யில், தன் மனைவி பானும​தியைத் தேடி துரியோதனன் வருகிறார். ஓர் இழைகூடப் பொன்னும் மணியும் அணியாமலும் கூந்தலை அலங்கரிக்​காமலும் இருக்​கிறார் பானும​தி.

பானு​ம​தியின் உத்தரவைப் பெற்றுப் போருக்குச் செல்ல ஆர்வமாக இருக்​கிறார் துரியோதனன். கர்ணனின் மறைவு துரியோதனனை​விடப் பானும​தி​யைத்தான் கடும் துயரத்தில் ஆழ்த்து​கிறது. கணவன் இறந்து​விட்ட ஒரு பெண்ணின் துன்பத்தை பானுமதி வெளிப்​படுத்து​கிறார். போரில் தான் வெற்றி பெறுவதற்​காக பானுமதி நோன்பிருப்​ப​தாகத் துரியோதனன் புரிந்​து​கொள்​கிறார். பானும​தி​யிடம் சிறிதுநேரம் காதல் விளையாட்டில் ஈடுபட விரும்​பு​கிறார் துரியோதனன். அவரோ மறுத்து ஓடுகிறார். துரியோதனன் எட்டிப் புடவையைப் பிடிக்​கிறார். கை பானும​தியின் மாங்கல்​யத்தைப் பிடித்து​விடு​கிறது. துரியோதனன் இதனைத் தீய நிமித்​த​மாகக் கருதிப் பதறுகிறார். ஆனால், இச்சம்பவம் பானும​திக்குக் கர்ணனை நினைவூட்டு​கிறது. சொக்கட்டான் விளையாட்டின் இறுதியில் தன் மேகலையைப் பிடித்​திழுத்த கர்ணனின் நினைவு பானும​தியின் மனதை ஆக்கிரமிக்​கிறது. சிரித்து​விடு​கிறார்.

துரியோதனனைப் போன்று கர்ணனும் பானும​தி​யிடம் அனுமதி பெற்றே போருக்குச் சென்றார். ‘வெற்றி பெறுங்கள் என்றேன். என்னைக் குளிரவும் குளிர்ந்தும் பார்த்​தார். நானும்​தான்’ என்று கர்ணனின் நினைவுகளை அசைபோடு​கிறார் பானுமதி. பானும​தியின் சிரிப்​புக்குக் காரணம் கேட்கிறார் துரியோதனன். சொல்லித் தீர்த்துவிட வேண்டும் என்று பானுமதி நினைக்​கிறார். “தாவிப் பிடிக்கப் பார்த்​தீர்களே, அந்த நேரத்தில் எனக்குக் கர்ணனின் நினைவு வந்தது” என்கிறார். “ஆமாம்... அவரும் போய்விட்​டார்... என்னை இப்படி ஆக்கி​விட்டு” என்று தன் தலை முதல் கால் வரை சுட்டிக்​காட்டு​கிறார். துரியோதனனுக்கு அப்போதுதான் புரிகிறது. ஒன்றுமே சொல்லாமல் துரியோதனன் வெளியேறுகிறார். “இதைக் கேளுங்​கள்... மனத்தள​வில்...” என்று பானுமதி சொல்லத் தொடங்​கியதைத் துரியோதனனும் கேட்க​வில்லை. “ஆமாம் போ. இனி யாருக்கு எதை நான் விளக்கிச் சொல்ல வேண்டும்?” என்று முணுமுணுத்துக் கொண்டு பானும​தியும் அதை முடிக்க​வில்லை என்று கரிச்​சான்​குஞ்சு கதையை முடித்​திருக்​கிறார்.

கரிச்​சான்​குஞ்​சு
கரிச்​சான்​குஞ்​சு

கர்ணனும் பானும​தியும் நல்ல நண்பர்கள் என்ற தொன்மக் கதையாடலின் மீது கரிச்​சான்​குஞ்சு மறுவாசிப்பை நிகழ்த்​தி​யிருக்​கிறார். பானும​தியைத் துரியோதனன் கடத்திக்​கொண்டு வரும்​போது, கர்ணனே பின் தொடர்ந்​துவந்த மன்னர்​களைப் போரிட்டு வெல்கிறார். அவனது வீரத்தை நேரில் கண்டவர் பானுமதி. கர்ணன் இருக்கும் தைரியத்​தில்தான் துரியோதனனும் இப்படியொரு செயலைச் செய்யத் துணிகிறார். அதனால் கர்ணன் மீது பானும​திக்குக் காதல் இருந்​திருக்க வாய்ப்​பில்லை என்று மறுக்க முடியாது. இவர்கள் இருவரின் உறவுமீது கரிச்​சான்​குஞ்​சுக்கு வேறொரு பார்வை இருந்​திருக்​கிறது. அதனைத்தான் ‘பானுமதி’ என்கிற சிறுகதையில் வெளிப்​படுத்​தி​யிருக்​கிறார்.

தவிர, ‘மனத்​தள​வில்...’ என்றொரு வார்த்​தையை பானுமதி பயன்படுத்து​கிறார். இதனைச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்​கிறது என்ற விமர்​சனத்​தையும் கரிச்​சான்​குஞ்சு மீது வைக்கலாம். ஏனெனில், ‘உடலளவில் தான் தூய்மை​யானவள்’ என்கிற வாசிப்​பையும் இச்சொல் உருவாக்கு​கிறது. ‘ஆமாம் போ. இனி யாருக்கு எதை நான் விளக்கிச் சொல்ல வேண்டும்?’ என்ற இடம் புனைவில் புதிர்த்​தன்மை நிரம்​பியதாக இருக்​கிறது. ‘துரியோதனன் இனி திரும்ப வர மாட்டார்’ என்கிற எண்ணம் பானும​திக்கு இருந்​திருக்க வேண்டும். அதனால்தான் தனது ஒழுக்​கத்தை யாருக்கும் இனி நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிற முடிவுக்கும் வருகிறார். இப்பு​னை​வுக்குள் கரிச்​சான்​குஞ்சு நிகழ்த்​தி​யிருக்கும் மீள் வாசிப்பு மிகப் பெரிது. நெடுங்​காலமாக நம்பப்​பட்டு வந்த, ஒரு தொன்மக் கதையின்மீது ஓர் உடைப்பை ஏற்படுத்​துதல் அவ்வளவு எளிதானது இல்லை.

தொடர்புக்கு: ramesh5480@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in