Last Updated : 22 Jun, 2018 03:12 AM

 

Published : 22 Jun 2018 03:12 AM
Last Updated : 22 Jun 2018 03:12 AM

செய்’ செய்த வினை!

தமிழ் வாக்கியத்தில் ஆங்கில வினைச்சொற்களால் நேரடியாக இயங்க முடியாது. செய் அல்லது பண்ணு போன்ற வார்த்தைகளின் துணை கொண்டே பொருள் தர முடியும். உதாரணமாக, ‘குக்’ எனும் வினைச்சொல்லை தமிழ் வாக்கியத்தில் பயன்படுத்த வேண்டுமென்றால், ‘அவன் நன்றாக குக் செய்தான்’ என்றே எழுத முடியும். ஆனால், சமை என்பதை நேரடியாக, ‘அவன் நன்றாக சமைத்தான்’ என எழுதலாம். ஸ்மைல் செய்கிறாள்; புன்னகைக்கிறாள். ஹெல்ப் பண்ணு; உதவு.

ஆங்கிலச் சொற்களின் புழக்கம் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் சூழலில் பெரும் பாதிப்பை தமிழ் வாக்கிய அமைப்பு கண்டிருக்கிறது.‘சீக்கிரம் பிரஷ் பண்ணு, ட்ரை பண்ணா எல்லாம் முடியும்’ என இயல்பு வாழ்க்கையில் இத்தகைய பயன்பாடு இயல்பாகிப்போயிற்று. இலக்கிய உலகிலும்கூட இதன் தாக்கம் பெரிது. இந்தச் சூழலில், தமிழ் வினைச்சொற்களும் ‘செய்’யின் துணையோடுதான் புழங்குகின்றன. அவன் நன்றாக சமையல் செய்தான். அவள் அழகாகப் புன்னகை செய்கிறாள். அவனுக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டும். முயற்சி செய்தால் எல்லாமே நடக்கும். இயல்பாகத் திரியும் வினைச்சொற்களின் பண்பை நாம் மறந்து கொண்டிருக்கிறோம்.

இன்னொரு மோசமான வேலையையும் இந்த ‘செய்’ செய்திருக்கிறது. குயில் கூவும், மயில் அகவும், நாய் குரைக்கும், சிங்கம் கர்ஜிக்கும் என ஒவ்வொன்றையும் தனித்துவமான சொற்களால் குறிப்பிடுகிறோம். இதேபோல, ‘வாக்குவாதத்தில் ஈடுபட்டான், சரியாக்கிவிடு...’ என அதற்குகந்த சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது அவ்வாக்கியம் கூடுதல் பொலிவுபெறும்.‘வாக்குவாதம் செய்தான், சரி செய்துவிடு’என்பது தற்போதைய பயன்பாடு.மொழியில் இயங்கும் பெரும்பாலாவர்கள் கணினியின் பயன்பாடுக்கு மாறியாயிற்று. எனவே, இயல்பு வாழ்க்கையில் ஒன்று எழுத்தில் ஒன்று என சவாலாக இருப்பின் கணினியின் துணைகொண்டு இதை எளிதில் களைந்துவிடலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x