Last Updated : 28 Jun, 2018 09:32 AM

 

Published : 28 Jun 2018 09:32 AM
Last Updated : 28 Jun 2018 09:32 AM

மவுலிவாக்க பயங்கரம்: பாடம் கற்றுக்கொண்டோமா?

நா

ன்காண்டுகளுக்கு முன்னால் இதே நாளில்தான் (ஜூன் 28) அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. கட்டுமானம் நடந்து கொண்டிருந்த 11 மாடிக் கட்டிடம் தகர்ந்து விழுந்தது. 61 தொழிலாளர்கள் பலியாயினர். மவுலிவாக்கம் என்கிற பெயரை உலகெங்கிலும் உள்ள ஊடகங்கள் உச்சரித்தன. ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. படிப்பினைகள் பட்டியலிடப்பட்டன. எனில், கடந்த நான்காண்டுகளில் இது போன்ற அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றனவா?

கட்டிடங்களின் இடிபாடுகளில் விலை மதிப்பற்ற மனித உயிர்கள் பறிபோவது தொடரவே செய்கிறது. அப்படியான இரண்டு விபத்துகளைப் பார்க்கலாம். கடந்த ஆண்டு ஜூலை மாதம் மும்பையின் காட்கோபர் பகுதியில் 40 ஆண்டுகள் பழமையான ஐந்து மாடிக் குடியிருப்புக் கட்டிடம் ஒன்று காலை 10:30 மணியளவில் இடிந்து விழுந்தது. அப்போது குடியிருப்பில் இருந்த இரண்டு குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாரில் போக்குவரத்துக் கழகத்தின் பணிமனையின் கூரை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தின் ஓர் அதிகாலையில் தகர்ந்து விழுந்தது. ஓய்வெடுத்துக் கொண்டிருந்த எட்டு போக்குவரத்து ஊழியர்கள் அவர்களது உறக்கத்திலிருந்து விழிக்கவேயில்லை.

தகர்ந்த நம்பிக்கை

மூன்று விபத்துகளில் பலியானவர்களும் தங்களைச் சுற்றியுள்ள நான்கு சுவர்களும் தலைக்கு மேலுள்ள கூரையும் பாதுகாப்பாக இருக்கிறது என்று நம்பியவர்கள். அந்தக் கூரையே அவர்கள் தலை மீது விழும் என்று கற்பனையிலும் கருதியிராதவர்கள். மூன்று விபத்துகளுக்குமான காரணங்கள் வெவ்வேறானவை. ஆனால், மூன்று அசம்பாவிதங்களும் பொறியியல்ரீதியான குறைபாடுகளினால் நிகழ்ந்தவை. மனித முயற்சியினாலும் தீர்க்கமான விதிமுறைகளினாலும் தவிர்த்திருக்கக்கூடியவை.

மவுலிவாக்கம் விபத்து நடந்தவுடனேயே ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. அக்குழு கண்டறிந்த சில குறைபாடுகள் வருமாறு: கான்கிரீட்டின் அடர்த்தி குறைவாக இருந்தது. இடிபாடுகளிலிருந்து எடுக்கப்பட்டு ஊடுகம்பிகள் தரம் தாழ்ந்தவையாக இருந்தன. அடித்தளம் அமைக்கப்பட்ட ஆழத்தில் மண்ணின் தாங்குதிறன் போதுமானதாக இல்லை. மிக முக்கியமாக, கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் வரைபடத்தில் காட்டப்பட்டிருந்த சில தூண்கள் கட்டப்படவேயில்லை. கீழ்த்தளம் வாகனங்கள் நிறுத்துவதற்கானது. வாகனங்கள் நிறுத்துவதில் கூடுதல் வசதிக்காக அவை அகற்றப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

காட்கோபர் கட்டிடம் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஆனால், இடிபாடுகளைப் பரிசோதித்த வல்லுநர்கள் கட்டுமானப் பொருட்கள் தரமானவைதாம் என்று சான்றளித்தனர். பின் எப்படி நேர்ந்தது விபத்து? தரைத்தளத்தின் உரிமையாளர், இந்தக் கட்டிடக் கூட்டமைப்பின் செயலாளருங்கூட. அவர் தனது தளத்தில் மராமத்து வேலைகள் செய்வதாகச் சொல்லிக்கொண்டு ஒரு கான்கிரீட் தூணை மாற்றியமைத்ததாகச் சொல்லப்படுகிறது.

பல பழைய கட்டிடங்களிலும், ஒன்றோ இரண்டோ தளங்கள் உள்ள சில புதிய கட்டிடங்களிலும் கூரைகளைச் சுவர்களே தாங்குமாறு வடிவமைத்திருப்பார்கள். ஆனால், அடுக்ககங்களிலும், குறைந்த தளங்கள் உள்ள பல புதிய கட்டிடங்களும்கூட கான்கிரீட் உத்தரங்களும், தூண்களும் வைத்துக் கட்டுகிறார்கள். கூரையின் சகல பாரமும் உத்தரங்கள் வழி தூண்களுக்குக் கடத்தப்பட்டு, இந்தத் தூண்களே எல்லாப் பாரத்தையும் தாங்கி நிற்கின்றன. இந்தத் தூண்களை மனம் போனபடி மாற்றுவதும் அகற்றுவதும் அறிவீனம் மட்டுமில்லை, குற்றகரமானதும்கூட.

ஹாங்காங் முன்னுதாரணம்

ஹாங்காங்கில் புதிய கட்டிடங்களைக் கட்டுவதென்றாலும், பழைய கட்டிடங்களை மாற்றியமைக்க வேண்டுமென்றாலும், அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்டிடக் கலைஞரையும் ஒரு கட்டிடவியல் பொறியாளரையும் நியமிக்க வேண்டும். இவர்களது வரைபடங்களையும், கணக்கீடுகளையும் அரசின் கட்டிடத்துறைக்குச் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். கட்டுமானங்கள் நடக்கும்போது இவ்விருவரும் தகுதியான மேற்பார்வையாளர்களை நியமித்து கட்டிடம் அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்களுக்கும், ஹாங்காங் கட்டிட விதிகளுக்கு இணங்கக் கட்டப்படுகின்றனவா என்று பரிசோதிக்க வேண்டும். இவர்களுக்குப் பொறுப்புகள் உண்டு, அதிகாரங்கள் உண்டு, தவறிழைத்தால் தண்டனையும் உண்டு.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் எல்லா நகராட்சிகள், ஊராட்சிகளிலும் அடிப்படையான கட்டிடவியல் வரைபடங்கள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். பொறியியல் வரைபடங்களைச் சமர்ப்பிக்க வேண்டாம். மேலும் கட்டிடம் முறையாகக் கட்டப்படுகிறதா என்று ஆய்வுசெய்கிற பொறுப்பும் கட்டிடக் கலைஞருக்கும், கட்டிடவியல் பொறியாளருக்கும் இல்லை. இந்த முறை மாற வேண்டும். விரிவான விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டு, தகுதி வாய்ந்த கட்டிடக் கலைஞர்களும், கட்டிடவியல் பொறியாளர்களும் அங்கீகரிக்கப்பட்டு, அவர்களது பொறுப்பும் விதிமுறைகளில் உட்படுத்தப்பட வேண்டும். எல்லாப் பொறுப்பும் உரிமையாளருக்கே என்கிற இப்போதைய விதிமுறை பல விபத்துகளுக்கு வழிவகுக்கிறது.

கட்டிடவியல் பொறியாளர்கள் எங்கே?

பொறையாறில் நடந்ததும் ஒரு பொறியியல்ரீதியான விபத்துதான். என்றபோதும், அது தன்மையளவில் மவுலிவாக்கம், காட்கோபர் விபத்துகளிலிருந்து வேறுபட்டது. பொறையாறு பணிமனை 1943-ல் கட்டப்பட்டது. இது போன்ற பழையதும், புதியதுமான பல கட்டிடங்களில் அரசின் பல்வேறு துறைகள், வாரியங்கள் இயங்கிவருகின்றன. இவற்றில் கல்வி, வருவாய், சட்டம், குடும்பநலம் போன்ற துறைகளின் கட்டிடங்களை மேற்பார்த்துத் தகுதிச் சான்றிதழ் வழங்கிவருகிறது பொதுப்பணித் துறை. ஆனால், பல்வேறு வாரியங்களைச் சார்ந்து கட்டிடங்களையும், மேலும் போக்குவரத்து, தொழில், மீன்வளம், பால்வளம், கால்நடை முதலான பல துறைகளின் கட்டிடங்களையும் அந்தந்தத் துறைகளே மேற்பார்த்துக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது. எல்லாத் துறைகளிலும் அனுபவமிக்க கட்டிடவியல் பொறியாளர்கள் இருப்பதில்லை.

ஹாங்காங்கின் அரசுத் துறையொன்றின் தகுதி வாய்ந்த கட்டிடவியல் பொறியாளர்களே எல்லா அரசுத் துறைக் கட்டிடங்களையும் ஆண்டுதோறும் மேற்பார்த்து தகுதிச் சான்றிதழ் வழங்குவார்கள். தமிழகத்திலும் பொதுப்பணித் துறைக்கோ அல்லது வேறு துறைக்கோ இந்தப் பொறுப்பை வழங்க வேண்டும். அவர்கள் தகுதியான கட்டிடவியல் பொறியாளர்களை நியமித்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். எல்லா அரசுக் கட்டிடங்களுக்கும் அவர்களே தகுதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்.

விரிவான விதிமுறைகள் அவசியம்

புதிய கட்டிடங்களும் புனரமைக்கப்படுகிற கட்டிடங்களும் தகுதி வாய்ந்த கட்டிடக் கலைஞர்களையும், கட்டிடவியல் பொறியாளர்களையும் கொண்டு வடிவமைக்கப்பட வேண்டும். அவர்களே கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட வேண்டும். பழைய கட்டிடங்களுக்குத் தகுதிச் சான்றிதழ் வழங்குவதற்கு கட்டிடவியல் பொறியாளர்களை அரசு நியமித்துக்கொள்ள வேண்டும். ஹாங்காங்கைப் போல இவர்களுக்குப் பொறுப்பும், அதிகாரமும் வழங்கப்பட வேண்டும். தவறிழைத்தால் தண்டிக்கப்படவும் வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள நான்கு சுவர்களும் தலைக்கு மேல் உள்ள கூரையும் பாதுகாப்பானதாக விளங்க இது முக்கியமான முன்னெடுப்பாக அமையும். மேலும், தேசமெங்கிலும் கட்டிட இடிபாடுகளில் பலியானவர்களுக்குச் செய்யப்படும் அஞ்சலியாகவும் அமையும்!

- மு.இராமனாதன்,

ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர்.

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x