எம்.ஏ.நுஃமான் 80: படைப்பு மனம் கொண்ட திறனாய்வாளர்!

எம்.ஏ.நுஃமான் 80: படைப்பு மனம் கொண்ட திறனாய்வாளர்!
Updated on
3 min read

இலங்கை கல்முனைக்​குடியில் 1944ஆம் ஆண்டு பிறந்த எம்.ஏ.நுஃமான் இந்த ஆகஸ்ட் மாதத்தோடு எண்பது வயதை எட்டி​யிருக்​கிறார். கவிஞர், திறனாய்​வாளர், மொழியிய​லாளர், மொழிபெயர்ப்​பாளர், பதிப்​பாசிரியர் என்று பல முகங்​களைக் கொண்டவர் நுஃமான். இலங்கைப் பல்கலைக்​கழகங்​களில் பேராசிரியராகவும் தென்கிழக்​காசி​யாவின் சில பல்கலைக்​கழகங்​களில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியவர். தமிழிலும் ஆங்கிலத்​திலும் 30க்கும் அதிகமான நூல்களை வெளியிட்டுக் கல்விப்புல அறிஞராக விளங்கும் நுஃமான், அடிப்​படையில் கவிஞர். 1960களின் தொடக்​கத்தில் இலங்கையின் நீலவாணன், மஹாகவி, இ.முரு​கையன் போன்ற கவிஞர்களை ஆதர்ச​மாகக்​கொண்டு எழுதத் தொடங்​கினார்.

1960களின் இறுதியில் ‘கவிஞன்’ என்ற பெயரில் காலாண்டு இதழொன்​றையும் தொடங்கி நடத்தி​யிருக்​கிறார். கவிதா நிகழ்வுகளை நடத்தி​யதோடு, அவற்றில் கவிதைகளையும் பாடினார். 1982இல் முதல் கவிதைத் தொகுப்பு ‘அழியா நிழல்கள்’ வெளிவந்​தா​லும், 1983இல் அன்னம் வெளியீடாக வெளியான ‘மழை நாட்கள் வரும்’ தொகுப்பு பெரும் கவனத்தைப் பெற்றது. 1980களில் இலங்கையி​லிருந்து வெளியான முக்கியமான கவிதைத் தொகுப்பு​களில் ‘பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்’ (1984) நூலை அ.யேசுராஜாவோடு இணைந்து தொகுத்​தவர்.

31 கவிஞர்​களின் 82 அரசியல் கவிதைகள் கொண்டதாக சேரன் உள்ளிட்டோர் தொகுத்த ‘மரணத்துள் வாழ்வோம்’ (1985) நூலிலும் இவர் கவிதைகள் இடம்பெற்றிருந்தன.

படைப்பாளி நுஃமான்

நுஃமானைப் படைப்​பாளி, திறனாய்​வாளர் என்ற இரண்டு வகைகளுக்குள் அடக்க முடியும். ஒரு வகையில், இவையிரண்டும் இங்கு எதிரும் புதிரு​மான​தாகக் கருதப்​படு​கின்றன. பின்னாள்​களில் நுஃமானின் வெளிப்​பாடும் திறனாய்வு சார்ந்ததாக அதிகம் அமைந்​திருந்தது என்பது குறிப்​பிடத்​தக்கது. எனினும், அவர் எதைப் பற்றி எழுதினாலும் படைப்பு மனத்தைத் தவற விடாது அணுகினார் என்பதுதான் அவரின் தனித்துவமாக இருக்​கிறது.

நேர்காணல் ஒன்றில், தன்னுடையதில் எழுத்​தாளன் அல்லது படைப்பாளி என்கிற அடையாளத்தையே முக்கியமென்று கருது​வ​தாகக் குறிப்​பிட்​டுள்​ளார். அதேவேளை​யில், படைப்பாளி உணர்வு​பூர்​வ​மானவர், விமர்சகர் அறிவு​பூர்​வ​மானவர் என்கிற இரட்டை எதிர்​மறையை மறுக்கும் அவர், படைப்பு​ணர்வு அற்றவர் நல்ல விமர்​சக​ராகவோ அறிவு​பூர்வமான சிந்தனைத் திறனற்றவர் நல்ல படைப்​பாளி​யாகவோ மலர்தல் சாத்தி​யமல்ல என்று கருதுகிறார். இவ்வகை​யில், அவரின் அணுகு​முறை​களில் வழமையி​லிருந்து விலகிய சில அம்சங்களை மட்டும் எடுத்​துக்​கொள்​ளலாம்.

மார்க்​சியத் திறனாய்​வாளர்

திறனாய்​வாளர் என்கிற முறையில் அவரை மார்க்​சியத் திறனாய்​வுநெறி சார்ந்தவர் என்று கூறலாம். ‘மார்க்​சி​யமும் இலக்கியத் திறனாய்​வும்’ (1987) அவருடைய முக்கியமான நூல்களுள் ஒன்று. அதேவேளை​யில், இலங்கை​யிலும் தமிழகத்​திலும் இருந்த மார்க்​சியத் திறனாய்​வாளர்​களிட​மிருந்து அவர் வேறுபட்​டிருந்​தார். உலகைப் புரிந்​து​கொள்ளவும் மாற்றவும் உதவும் வலுவான சித்தாந்தமாக மார்க்​சியம் இன்றைக்கும் இருக்​கிறது என்றும், இலக்கி​யத்தை உன்னத நிகழ்வாக அன்றிச் சமூக உற்பத்​தியாக நிறுவியதில் மார்க்​சி​யத்தின் பங்கு முக்கிய​மானது என்றும் குறிப்​பிடும் அவர், மார்க்​சி​யத்தை அரசியலாக மட்டுமின்றிச் சமூகத்​தையும் பண்பாட்டு நடைமுறை​களைப் புரிந்​து​கொள்ளவும் பயன்படுத்த முடியும் என்று விளக்​கினார். இலக்கி​யத்தில் எல்லா அம்சங்​களையும் அதனால் விளக்​கிவிட முடியும் என்று தான் நம்பவில்லை என்றும் குறிப்​பிட்​டார். “நான் கட்சி மார்க்​சியர் அல்ல” என்று குறிப்​பிட்டுக் கொண்ட அவர், மார்க்​சி​யத்தைச் சமூகக் கோட்பாடாகப் பொருள்​படுத்​திக்​கொள்ள முயன்றவர் எனலாம்.

தமிழ் இலக்கணத்தைக் கற்பிக்கும் ஆசிரியராக விளங்கிய நுஃமானின் பயணத்தில் நடந்த விதிவிலக்​கொன்றை அடுத்​த​தாகக் கூறலாம். மொழியை ஒரு தொடர்புக் கருவி​யாகப் பார்த்தது மொழியியல். அதேபோல மொழியியலைப் பொறுத்​தவரையில் இலக்கணம் என்பது மொழியின் அமைப்பு மட்டுமே. ஒரு புலமை​யாளராக மொழியியலைப் படிக்க வேண்டி​யிருந்த நுஃமான், ஒரு படைப்​பாளியாக இவற்றை நுட்பமாக இணைத்தும் - பிரித்தும் எதிர்​கொண்​டிருந்தார் என்றே சொல்ல வேண்டும். இலக்கியம் என்பது மொழித்​திறனோ, செய்திறனோ அல்ல என்று கருதிய அவர், நல்ல படைப்​புக்கு ஆழ்ந்த - அகன்ற அனுபவ​மும், அனுபவத்தைப் பொருள்​கொள்ளும் நுண்ணிய உணர்திறனும் படைப்புத்​திறனும் தேவை என்று கருதினார். மெளனி படைப்புகள் பற்றிக் குறிப்​பிடும்போது மொழியில் மர்மங்​களும், மர்மங்கள் ஏற்படுத்தும் மயக்கமும் இயல்பான கலைமுறையாக இருக்க முடியும் என்று கூறியிருக்​கிறார்.

இலக்கி​யத்தில் எதார்த்​தத்தையே பெரிதும் விரும்​பு​கிறேன் என்றாலும், நவீனப் பாணிகளை நிராகரிக்க​வில்லை என்று கூறிய அவர், மொழியியலின் தொடர்ச்​சியில் அறிமுகமான அமைப்​பியல், குறியியல், பின்அமைப்​பியல் போன்ற நவீனக் கலை இலக்கியக் கோட்பாடு​களின் இயந்திரக​தியான பொருத்​தப்​பாடுகளை இலக்கிய உணர்திறன் என்கிற அணுகு​முறையின் துணைகொண்டு எதிர்​கொண்​டார். அமைப்​பியல் கோட்பாட்டைக் கொண்டு எதிரும் புதிருமாக உச்சபட்ச மறுப்புகள் வெளிப்​பட்டுக்​கொண்​டிருந்த காலத்​தில், நிறைந்த வாசிப்பின் பின்புலத்தில் அவற்றைப் பரிசீலித்து எழுதினார்.

குறிப்பாக, ரோலன் பார்த்தின் ‘ஆசிரியர் இறந்து​விட்​டான்’ என்ற கருத்தை எடுத்​துக்​கொண்டு, படைப்பில் ஆசிரியனைப் பொருட்​படுத்தவே தேவையில்லை என்று கூறப்​பட்டதை மறுத்​தார். அதாவது “ஆசிரியரை முற்றிலும் ஒதுக்கி, பிரதியின் முழுமையான அமைப்​பைக்​கூடக் கருத்தில் கொள்ளாமல், பிரதியைத் தன் மனம்போன போக்கில் விளக்க முயலும் ‘வாசிப்புப் பிரதி, பலதளப் பொருண்மை’ என்கிற கருத்தை ஏளனம் செய்வதாக அமைகிறது. மார்க்சிய விமர்​சனத்தில் ஒரு வறட்டு வாதம் மேலோங்கி இருந்​தது​போலவே, அமைப்​பியல் விமர்​சனத்​திலும் ஒரு வறட்டு வாதமே தமிழுக்கு அறிமுகம் ஆகி இருக்​கிறது” என்று சாடினார். மார்க்​சியத் திறனாய்வு நெறி மீது அவருக்கு இருந்த விமர்​சனம், புதிய கோட்பாடுகளை விமர்​சனமின்றித் தழுவு​பவராக மாற்ற​வில்லை என்பதை இங்கே பார்க்​கிறோம். நோம் சாம்ஸ்கியின் மொழி உணர்திறன் என்கிற கருத்தைத் தழுவி யோனத்தான் கல்லர் பேசிய ‘இலக்கிய உணர்திறன்’ வாசகனுக்குத் தேவை. இலக்கிய உணர்திறனும், படைப்பு மனமும் கொண்ட வாசகனிடம்தான் பிரதி புது உயிர்ப்பு பெற முடியும் என்று வாதிட்டார் நுஃமான்.

மொழிபெயர்ப்​பாளர்

இதேபோல மறுமுனையில் இலக்கிய வாசிப்பைச் சமூக அரசியல் பின்புலத்தில் பொருத்திப் புரிந்​து​கொள்ள முற்பட்​டதையும் பார்க்​கிறோம். அவருடைய மொழிபெயர்ப்பு நூல்களில் பாலஸ்​தீனக் கவிதைகள் குறிப்​பிடத்​தக்கது. தன்னுடைய மொழிபெயர்ப்புகள் பெரும்​பாலும் மூன்றாம் உலகப் படைப்புகள் தொடர்​பானவைதான் என்று கூறும் அவர், மொழிபெயர்ப்பை இலக்கியப் பணியாக மட்டுமின்றி சமூக, அரசியல் பணியாகவும் கருது​வ​தாகக் கூறியிருப்பது கவனிக்​கத்​தக்​க​தாகும்.

அதிர்ச்சி மதிப்​பீட்​டிற்காக எதையேனும் கூறிக் கவனம் ஈர்க்க நுஃமான் ஒருபோதும் முயன்ற​வரில்லை. அதனாலேயே அவர் அதிகம் எழுதவில்லை என்பதுபோல் தெரிய​லாம். உண்மை​யில், அவர் குறைவாக எழுதவில்லை. நிதானமாக எழுதி​யிருக்​கிறார் என்பதைப் பார்க்க முடிகிறது. தான் எழுத முற்பட்ட விஷயங்​களைப் பற்றி ஆழமான வாசிப்பை அவர் பெற்றிருந்​தார். கல்வி​யாளர், ஆய்வாளர் என்று சொன்னாலே புறவயமான பார்வைகளை மட்டுமே கொண்ட​வர்கள் என்ற கருத்து இங்கு நிலவு​கிறது. ஆனால், எம்.ஏ.நுஃமான் இதற்கு எதிரான இனிய புறனடை.

- பேராசிரியர், ஆய்வாளர்

தொடர்புக்கு: stalinrajangam@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in