

இந்தியா முழுமைக்குமான ஆங்கிலேயரின் காலனி ஆதிக்க நடவடிக்கைகள் பலவற்றுக்குச் சென்னை மையப்புள்ளியாக இருந்தது. மற்றொருபுறம் கல்வி, மருத்துவம், நூலகம் உள்பட இந்நகரத்தில் தொடங்கப்பட்ட பல திட்டங்கள் நாட்டுக்கே முதல் முயற்சியாக அமைந்தன. அவ்வகையில், சென்னையின் வரலாறு என்பது இந்திய வரலாற்றின் தவிர்க்க முடியாத பகுதி. சென்னையை அறிந்துகொள்வது, பல முக்கியமான துறைகளின் தொடக்கத்தை அறிந்துகொள்வதாகும்.
இந்தப் பின்புலத்தில் ‘சென்னையின் கதை’ (The story of Madras) என்கிற ஆவணப்படம், 1600களிலிருந்து ஒரு நகரமாகச் சென்னை வளர்த்தெடுக்கப்பட்ட விதத்தை முக்கியமான கட்டிடங்கள், நினைவுச்சின்னங்கள் வாயிலாகப் பேசுகிறது. கட்டுமானக் கலை வல்லுநரும் ‘இன்டாக்’ (இந்திய தேசியக் கலை-பண்பாட்டு மரபுக்கான அறக்கட்டளை) அமைப்பின் சென்னைப் பிரிவின் ஒருங்கிணைப்பாளருமான சுஜாதா சங்கர் இப்படத்தை இயக்கியுள்ளார். ‘சென்னை நாள்’ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள என்எஃப்டிசி தாகூர் திரையரங்கில் இப்படம் அண்மையில் திரையிடப்பட்டது.
நவீன வரலாற்று நோக்கில் சென்னையின் முக்கியத்துவத்தைத் தன்னார்வலராகப் பதிவுசெய்து வந்தவர் எஸ்.முத்தையா. அழகும் ஆவணச் சிறப்பும் வாய்ந்த சென்னையின் முக்கியமான இடங்கள், கட்டுமானங்கள் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டும் என 40 ஆண்டுகளாக அவர் எழுதியும் பேசியும் வந்தார். முத்தையாவின் விவரிப்பில் இந்த ஆவணப்படம் அமைந்துள்ளது.
போர்த்துக்கீசியர்கள், டென்மார்க் நாட்டினர் போன்றோரை அடுத்து ஆங்கிலேயர் சென்னைக்கு வந்தனர் என்பது பலர் அறிந்தது. இவர்களில் பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் சென்னை சில ஆண்டுகள் இருந்தது பலரும் அறியாதது. மயிலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட தென் பகுதி வளர்ச்சியில் முன்னிலை வகிப்பதாகவும் திருவொற்றியூர், ராயபுரம் போன்ற வட பகுதிகள் பின்தங்கிய பகுதிகளாகவும் இன்று கருதப்படுகின்றன. ஆங்கிலேயர் காலத்தில் இந்த நிலை நேரெதிராக இருந்தது. வட பகுதியைத்தான் அவர்கள் களமாகக் கொண்டு இயங்கினர். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதியான பிரான்சிஸ் டே, ஆள் நடமாட்டம் அற்ற கடலோரப் பகுதி ஒன்றை 1639இல் ஒப்பந்தம் இட்டு வாங்கினார். செயின்ட் ஜார்ஜ் கோட்டை இருக்கும் அப்பகுதி ஆங்கிலேயரால் வாங்கப்பட்ட ஆகஸ்ட் 22ஆம் தேதிதான் ‘சென்னை நா’ளாகக் கொண்டாடப்படுகிறது. அக்கோட்டையின் மேல்தளத்தில் அப்போது கலங்கரை விளக்கம் செயல்பட்டது. அங்குள்ள தேவாலயம் கம்பெனியின் நிதியில் அல்லாமல், தனிநபர்களின் நன்கொடையிலேயே கட்டப்பட்டது.
மிளகு போன்ற நறுமணப் பொருள்களைத் தேடி வந்த ஆங்கிலேயர்கள் பருத்தி, மரம், தங்கம் போன்றவற்றை ஏற்றுமதி செய்யவும் சென்னை வசதியாக இருந்தது. சீனர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ‘பட்டு வழித்தட’த்துக்கு மாற்றாக வங்கக் கடல் பகுதி, ஆங்கிலேயருக்கு உதவியது. போட்டியைச் சமாளித்தபடி வியாபாரம் மட்டுமே செய்துகொண்டிருந்த ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்களின் குறுக்கீட்டுக்குப் பின்னர் ஆட்சியாளர்களாக மாற நினைத்ததைப் பற்றியும் ஆவணப்படம் கூறுகிறது. வரலாற்று மதிப்பை உணராத மனநிலை காரணமாகச் சென்னையின் பல முக்கிய வரலாற்றுச் சின்னங்கள் சிதைக்கப்பட்டிருப்பதும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.