

முறைப்படுத்தப்பட்ட / வெளிப்படைத்தன்மையான நூலக ஆணை குறித்து அரசாணை வெளியாகி, முதல் சுற்று நூலக ஆணை எவ்வாறு இருக்கும் என்று காத்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், இப்படி ஒரு கட்டுரை எழுத அவசியம் வரும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. பெரம்பலூர் அருகே ஒரு கிராமத்தில் உள்ள நூலகத்தில் எடுக்கப்பட்ட ஒளிப்படத்தை ஒரு வாசகர் பதிந்திருந்தார். அந்த நூலின் பெயர் ‘புயலிலே ஒரு தோணி’. நூலக அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இந்தப் புத்தக அட்டையின் முதுகுப்புறத்தில் ப.சிங்காரத்திற்குப் பதிலாய் ‘நகுலன்’ என்று இருந்தது. சற்றைக்கெல்லாம் இச்செய்தியைப் புலனங்களிலும் செய்தித்தாள் குழுக்களிலும் இங்கும் அங்குமாய்ப் பகிரத் தொடங்கிவிட்டார்கள்.
கரோனாவுக்குப் பிந்தைய காலகட்டம் என்பது, ஏற்கெனவே சவாலான பதிப்புத் துறையை மேலும் கடினமான விஷயங்களைச் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியது. கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களுக்குச் சென்று புத்தகக் காட்சியில் கலந்துகொண்டு புத்தகங்களை வாசகர்களிடம் கொண்டுசெல்லப் பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் இக்காலத்தில் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில், இது போன்ற ஓர் ஒளிப்படம் சமூக ஊடகத்தில் பரவலாகும்போது, வெவ்வேறு இடங்களிலிருந்தும் இத்தகைய நூலகக் கொள்முதல் முறைகேடுகள் குறித்த ஒளிப்படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவர ஆரம்பித்தன.
உண்மையில், சர்ச்சை உண்டான ‘புயலிலே ஒரு தோணி’ ப.சிங்காரம் எனும் பெயரில்தான் வெளியானது. நூலின் அட்டை வடிவமைப்பில் மட்டும் பிழையாக ‘நகுலன்’ என்று வந்துவிட்டது. நூலகத்தின் அலமாரியில் பார்க்கும்போது நகுலன் எழுதியதுபோலத் தோற்றமளிக்கும். இந்நிலையில், நூலகங்களில் நடந்த முறைகேடான கொள்முதல்களைத் தட்டிக்கேளாமல், மேற்கண்ட பதிவு நகுலனைப் பரிகாசம் செய்ததாகக் குறிப்பிட்டுக் கண்டனம் எழுந்தது. அதை ஒட்டிச் சமூக ஊடகங்களில் வெவ்வேறு நபர்கள் பகிர்ந்த, முறைகேடாகக் கொள்முதல் செய்யப்பட்ட நூல்களின் ஒளிப்படங்கள் பகிரப்பட்டன.
‘சில தன்னார்வலர்கள் முன்னெடுத்தால் இப்படி நூலகங்களில் தகுதியற்ற புத்தகங்கள் என்னவெல்லாம் வைக்கப்பட்டிருக்கின்றன என்பதைத் தொகுக்க முடியும்’ என நானும்கூட ஃபேஸ்புக்கில் பதிவுசெய்தேன். வாசகர்கள் படங்களை அனுப்பிவைத்தனர். மேலும் சிலர், நூலகத்தில் பார்த்தவையாகச் சில தகவல்களைக் கொடுத்தார்கள். கிடைத்த தகவல்களைக் கொண்டு பார்க்கையில் கடந்த ஆட்சிக் காலங்களில் (இந்த ஆட்சியில் நூலக ஆணை இன்னும் வரவில்லை) முறைகேடாகக் கொள்முதல் செய்யப்பட்ட நூல்களில், வாசகர்களுக்கு எந்த விதத்திலும் பயனற்ற நூல்கள் பல வாங்கப்பட்டுள்ளன.
இதுநாள் வரை நாம் அறிந்ததெல்லாம் நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள், ஆசிரியருக்கே தெரியாமல் நூலக ஆணை பெற்ற நூல்கள், மலினமாக அச்சடித்து அனுப்பப்பட்ட நூல்கள் போன்றவைதான். ஆனால், தற்போது தெரியவந்துள்ளவை புது வகைத் திருட்டுகள்.
1. ஒரே நூல் இருபதுக்கும் மேற்பட்ட பிரதிகள் ஒரே நூலகத்தில் இருப்பது. (சர்வதேச நூலகங்களில்கூட இப்படி 20 நூல்களைக் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.)
2. நூலின் தலைப்பை மாற்றுவது (நூலின் பெயர் ‘தியாக பூமி’. அதை ‘பனி நிலம்’ என்கிற பெயரில் நூலகங்களில் காணலாம்).
3. நூலின் ஆசிரியரை மாற்றுவது. (எழுத்தாளர் மணவை முஸ்தபாவின் பெயருக்குப் பதிலாக வேறு ஒருவரின் பெயரில் வெளியிடுவது. இது குறித்து ஏற்கெனவே தமிழக முதல்வர் கண்டனம் தெரிவித்திருந்தார்).
4. ஊர்ப்புற/கிராம நூலகங்களில் கொஞ்சம்கூடப் பொருத்தமற்ற ஆங்கில நூல்களைத் தருவிப்பது (இதில் சில நான்கு இலக்க விலை கொண்டவை).
5. ஊர்ப்புற/கிராம நூலகங்களில் தேவையற்ற நூல்களைத் தொடர்ந்து தருவிப்பது (ஒவ்வொரு கொள்முதலிலும் சங்க இலக்கியத் திரட்டுகள் வரும், எந்த ஆட்சி வந்தாலும் ஒவ்வொரு கொள்முதலிலும் சில ஆன்மிக நூல்கள், மலர்கள் தொடர்ந்து இடம்வரும், பரமார்த்த குரு கதைகள் போன்ற நூல்கள் 50க்கும் மேற்பட்டவை இருக்கும்).
6. சில நூல்களின் அட்டையில் ஒரு ஆசிரியரும், உள்ளடக்கத்தில் ஒரு ஆசிரியரும் குறிப்பிடப்பட்டிருப்பார். மொழிபெயர்ப்பாளர்களே நூல் ஆசிரியர்களாகக் கருதப்படுவார்கள். சில நூல்கள் அட்டை மட்டும் மாற்றப்பட்டு, ஒரே கொள்முதலில் வேறு பதிப்பகங்களிடம் இருந்து பெறப்பட்டிருக்கும்.
7. முன்னர் அறிந்ததெல்லாம் நூலாசிரியர்களுக்குத் தெரியாமல் சில நூல்கள் பதிப்பகங்கள் மூலம் நூலக ஆணை பெறப்பட்டிருக்கும். ஆனால் புதிதாகத் தெரிந்துகொண்டது, சில நூல்கள் ஆசிரியருக்கே தெரியாத பதிப்பகங்களால் கொள்முதல் செய்யப்பட்டிருக்கின்றன. (உதாரணம், விட்டல் ராவ் எழுதிய ‘காலவெளி’ நாவல், சி.மோகன் மொழிபெயர்த்த ‘ஓநாய் குலச் சின்னம்’ நாவல் - முறையே முகுந்தன் பதிப்பகம், அரசன் பதிப்பகம் - புத்தகக் கடைகளில் முறையே கலைஞன் பதிப்பகம், அதிர்வு பதிப்பகம் வெளியிட்டவை)
மேற்சொன்னவை எல்லாம் வெவ்வேறு வாசகர்கள், சமூக ஊடகத்தில் புழங்கும் நண்பர்களின் பங்களிப்புதான். இதுவே ஒரு பெரிய எண்ணிக்கையில் வாசகர்கள் நூலகங்களுக்குச் சென்று இப்படியான பகல் கொள்ளைகளை அம்பலப்படுத்தினால், வருங்காலத்தில் அறிவுத் துறையின் முதன்மைத் தொழில்களில் ஒன்றான பதிப்புத் தொழில் என்பது உலகளாவிய அளவில் புகழ் பெறும்.
- யாவரும் பதிப்பாளர்
தொடர்புக்கு: kaalidossan@gmail.com