

ராவணனை முதன்மைக் கதாபாத்திரமாகக் கொண்டு தி.ஜானகிராமன் ‘ராவணன் காதல்’ சிறுகதையை எழுதியுள்ளார். தி.ஜா.வின் அபூர்வமான கதைகளுள் இதுவும் ஒன்று. இதில் காதலுக்கும் காமத்துக்குமான உறவைத் தீவிரத் தொனியில் பேசியிருக்கிறார். புஞ்சிகஸ்தலை பிரம்மாவைத் தரிசிக்கச் சென்றுகொண்டிருக்கிறார். ராவணன் இவரது அழகைக் கண்டு மயக்கம் கொள்கிறார். ஏற்கெனவே, ராவணன் பெற்றிருக்கக்கூடிய அசாதாரண வரங்கள் ஆணவத்தை உருவாக்குகின்றன. எந்தப் பெண்ணும் தன் விருப்பத்துக்குக் கட்டுப்பட்டவள் என்பது ராவணன் எண்ணம். புஞ்சிகஸ்தலை தி.ஜா.வின் மொழியில் மேலும் அழகூட்டப்படுகிறார். ‘உனக்குப் பிறகு பிரம்மா எந்த அழகையும் படைக்கவில்லையோ?’ என்கிறார் ராவணன். இந்தப் பேச்சு புஞ்சிகஸ்தலையிடம் எடுபடவில்லை. ராவணனின் உடல் காமத்தால் தீப்பற்றி எரிகிறது. பெண்களின் உடலை அடைவதற்குரிய எளிய வழி, காதல்தான். அந்தப் பாதையைத்தான் ராவணன் தேர்ந்தெடுக்கிறார். இந்தக் கதையைப் பொறுத்தவரை புஞ்சிகஸ்தலைக்கு இன்னும் திருமணம் முடியவில்லை. ‘பார்த்த சில கணங்களில் எப்படிக் காதல் வந்துவிடுகிறது?’ என்று ஆச்சரியப்படுகிறார் புஞ்சிகஸ்தலை. காதலுக்கு மனம் முக்கியமில்லை; ஒருவர் ஆணாகவும் மற்றொருவர் பெண்ணாகவும் இருக்க வேண்டும் என்கிற கள யதார்த்தத்தைப் பேசுகிறார் ராவணன்.
காதலுக்கு எதிர்ப் பாலின உடல்தான் பிரதானம்; அறிமுகமும் நட்பும் காலமும் அவசியமில்லை என்பது ராவணனின் கருத்து. மூலப் பிரதியில் இவ்வளவு பெரிய உரையாடல் நடைபெறவில்லை. ராவணன் மூலமாக தி.ஜா.தான் காதல் குறித்த புனிதப் போர்வையை விலக்கிப் பார்க்கிறார். ஆண் - பெண் உறவின் அபத்தங்களை உடைத்துப் பேசியவர் தி.ஜானகிராமன்; காதலுக்குப் பின்னால் காமம் பல்லிளித்துக் கொண்டிருப்பதை அறியாதவரா தி.ஜா.? அக்காலத்தில், முன்பின் அறிமுகம் இல்லாத தலைவனும் தலைவியும் இயற்கையாக ஓரிடத்தில் எதிர்பாராத விதமாகச் சந்தித்துக் கூடி மகிழ்ந்ததை இயற்கைப் புணர்ச்சி என்றனர். இது தெய்வத்தால் நிகழ்வதாகவே அவர்கள் நம்பினர். அதே இடத்தில் மறுநாளும் சந்தித்துக் கொள்வர். இதனை ‘இடந்தலைப்பாடு’ என்றனர். அவர்களது சந்திப்பில் உள்ளப் புணர்ச்சி, மெய்யுறு புணர்ச்சி என இரண்டுமே அடுத்தடுத்து நிகழ்ந்துவிடுகிறது. ‘உள்ளப் புணர்ச்சியும் மெய்யுறு புணர்ச்சியும் / கள்ளப் புணர்ச்சியுள் காதலர்க்கு உரிய’ (நம்பியகப்பொருள்) என்று அன்றே இலக்கணம் எழுதி வைத்திருக்கிறார்கள்.
பெண்ணுடலைப் பார்ப்பதுதான் காதலின் முதல் படிநிலை. இதனைப் பழங்காலத்தில் ‘காட்சி’ என்றார்கள். தலைவியின் மெய் தொட்டுக் காதலைப் பயின்ற தலைவன், தலைவியின் மெய் பயிறக் கிடைக்காதபோது தவித்துப் போனான். தோழியையும் பாங்கனையும் தேடி ஓடினான். தலைவி மீண்டும் புணர்ச்சிக்கு உடன்படாதபோது மடலேறுவேன் என்று மிரட்டல் விடுத்தான். எனவே, காமமும் சேர்ந்ததுதான் காதல். ராவணன் இதனைத் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறான். புஞ்சிகஸ்தலைக்கு ராவணனால் சொல்லிப் புரியவைக்க இயலவில்லை. எனவே, அவனது வழக்கமான வழியைத் தேர்ந்தெடுக்கிறார். தி.ஜா. அந்தக் காட்சியை இப்படி எழுதுகிறார்: “அந்த வனப்புடல் எதிர்த்துப் போராடுவதும் மழையையும் புயலையும்போல ஓர் அழகாகத்தான் பட்டது அவனுக்கு. தீயில் விழுந்ததுபோல் துடித்தாள். மூவுலகையும் வென்ற வீரம் அவளை மிஞ்சிவிட்டது.” இப்போது பிரச்சினை பிரம்மாவிடம் செல்கிறது. இந்தப் பகுதி புனைவில் மிக முக்கியமானது. ‘தாங்கள் தேவதைகளை எதற்காகப் படைத்தீர்கள்?’ என்று கேட்கிறார் ராவணன். ‘தேவர்களுக்காக மட்டும்; இத்தேவதைகள் அவர்கள் நல்வினைக்கான பரிசு’ என்பது பிரம்மனின் வாதம். ராவணன் இதனைக் கடுமையாக எதிர்க்கிறார். பாற்கடலைக் கடைந்தபோது அறுபதாயிரம் அரம்பையர் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. தேவர்களை மகிழ்விப்பதுதான் அவர்களது பிரதான தொழில். இதில் பிரம்மா தேவர்களின் சார்பாக நின்று பேசுகிறார். ‘தேவலோகம் இதற்குத்தானா? இதற்குத்தான் இவ்வளவு நல்லவர்களாக வேஷம் போடுகிறீர்களா?’ என்பது ராவணனின் மனக்குரல்.
இந்த உரையாடலின் முடிவில், ‘இனி, எந்தப் பெண்ணையாவது - உன்னை விரும்பாத பெண்ணை - பலாத்காரம் செய்யும் எண்ணத்துடன் நீ தொட்டால், உன் தலை நூறு துண்டாக வெடித்துவிடும்’ என்ற சாபத்தை அளிக்கிறார். இந்தச் சாபம்தான் ராவணனிடமிருந்து சீதையைக் காப்பாற்றுகிறது. மீண்டும் புஞ்சிகஸ்தலையைச் சந்திக்கிறார் ராவணன். காமத்திற்குச் சாபம் தெரியாது. ராவணனின் கை நீளுகிறது. சாபம் நினைவுக்குவர கையை இழுத்துக்கொள்கிறார். ராவணனைப் பழிவாங்கிவிட்ட திருப்தி புஞ்சிகஸ்தலைக்கு. ‘ராவணன் காதல்’ என்ற இப்புனைவை மேலோட்டமாகப் பார்த்தால், ராவணன் பெற்ற சாபத்தையே தி.ஜா. எழுதியிருப்பதாகத் தோன்றும். ஆனால், இந்தச் சாபக் கதையை வைத்துக்கொண்டு அவர் நடத்தியிருக்கும் உரையாடல் காத்திரமானது.
- உதவிப் பேராசிரியர்
தொடர்புக்கு ramesh5480@gmail.com