Last Updated : 18 May, 2018 08:36 AM

 

Published : 18 May 2018 08:36 AM
Last Updated : 18 May 2018 08:36 AM

சித்தராமையாவை வீழ்த்திய மோடி – அமித்ஷா அஸ்திரங்கள்!

ல்வேறு மதங்கள், மொழிகள், சாதிகள், இனங்கள் கொண்ட இந்தியாவில் தேர்தல் முடிவுகள் எப்போதும் ஆச்சரியத்தை ஏற்படுத்துபவை. எந்தவொரு தேர்தலிலும் வியப்புக்குரிய செய்திகள் ஏதாவது இருக்கும். நடந்து முடிந்த கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலும் அதற்கு விதிவிலக்கல்ல. முக்கியமான விஷயம் என்னவென்றால், 36.2% வாக்குகளைப் பெற்ற பாஜகவுக்கு 104 இடங்கள் கிடைத்துள்ளன. ஆனால், 38% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் 78 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. காங்கிரஸைவிட 1.8% குறைவான வாக்குகளைப் பெற்ற பாஜகவுக்கு 26 இடங்கள் அதிகமாகக் கிடைத்துள்ளன. இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு என்ன காரணம்?

பாஜக வென்ற இடங்களில் மிகக் குறைவான வாக்குகளைப் பெற்றதா என்றால் அதுவும் இல்லை. 5 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் 18 தொகுதிகளில் வென்றுள்ளது. இதில் நான்கு தொகுதிகளில் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் பாஜகவை வீழ்த்தியுள்ளது.

ஆச்சரியப்படுத்திய முடிவு

அதேநேரத்தில் 5 ஆயிரத்துக்கும் குறைவான வாக்கு கள் வித்தியாசத்தில் 6 இடங்களில் மட்டுமே பாஜக வென்றுள்ளது. ஒரே ஒரு தொகுதியில் மட்டும் 697 வாக்கு கள் வித்தியாசத்தில் பாஜகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. மஜத வென்ற 37 தொகுதிகளிலும், அக்கட்சி 2-வது இடத்தைப் பெற்ற இடங்களிலும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. அதாவது, 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் டெபாசிட் இழந்ததுடன் 15 தொகுதிகளில் தமிழகத்தைப் போலவே 5 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால், இது பாஜகவுக்குத்தான் சாதகமாக அமைந்திருக்கிறது. எப்படி?

அங்குதான் இருக்கிறது பிரதமர் மோடி - பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் அரசியல் வியூகம். கர்நாடகத் தேர்தல் பணிகளைக் கடந்த 2017 ஆகஸ்ட் மாதமே தொடங்கிய அமித் ஷா, அங்கு பாஜக வென்று ஆட்சி அமைப்பது கடினம் என்பதை உணர்ந்துகொண்டார். உட்கட்சி மோதலால் பாஜக அங்கு பலவீனமடைந்திருந்தது. ஆர்எஸ்எஸ் வலுவாக உள்ள தெற்கு பெங்களூரு, கடலோர கர்நாடகம் தவிர மற்ற இடங்களில் பாஜக பலமிழந்திருந்தது. அதன் பிறகு, கர்நாடகம் முழுவதும் அமித் ஷா சுற்றுப்பயணம் செய்தார். கர்நாடக அரசியல் சூழ்நிலை, சாதிகள், மடங்களின் ஆதிக்கம், தலித்களிடம் காங்கிரஸுக்கும், மைசூர், மாண்டியா பகுதியில் மஜதவுக்கும் உள்ள அபரிமிதமான செல்வாக்கு, முதல்வர் சித்தராமையாவின் செல்வாக்கு ஆகியவற்றைத் தெரிந்து கொண்டார்.

அடுத்தடுத்த திட்டங்கள்

பின்னர் அவர்களை வீழ்த்துவதற்கான வியூகங்களை வகுக்கத் தொடங்கினார். காங்கிரஸை வீழ்த்த வேண்டுமானால் சித்தராமையாவுக்கு எதிராக, ஒரு வலுவான தலைவரை முன்னிறுத்த வேண்டும். எடியூரப்பாவைத் தவிர, வேறு யாரை முன்னிறுத்தினாலும் கட்சி பிளவுபட்டு விடும் எனும் நிலை இருந்தது. அதனால் எடியூரப்பா வைத் தவிர அவருக்கு மாற்று வழியே இருக்கவில்லை. இத்தனைக்கும் அவருக்குச் சாதகங்களைவிட பாதக மான அம்சங்கள் அதிகம் இருந்தன. அதனை மாற்ற கர்நாடகம் முழுக்க யாத்திரை செல்லுமாறு எடியூரப்பாவை அமித் ஷா கேட்டுக்கொண்டார். 100 நாட்களுக்கும் மேல் நடந்த இந்த யாத்திரையால் மக்களிடையே குறிப்பாக லிங்காயத்துகள் மத்தியில் இழந்த தனது செல்வாக்கை மீட்டெடுத்தார் எடியூரப்பா.

லிங்காயத் சமூகம் தனி மதமாக அறிவிக்கப்பட்டதும் பாஜக அதிர்ச்சியில் உறைந்தது. உடனடியாகச் சுதாரித்துக் கொண்ட அமித் ஷா, லிங்காயத் மற்றும் வீரசைவ மடாதிபதிகளைச் சந்திக்குமாறு எடியூரப்பாவிடம் சொன்னார். அவரும் ஒவ்வொரு மடாதிபதியாகச் சென்று சந்தித்துள்ளார். அமித் ஷாவும் மடாதிபதிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். அதற்கு வெற்றியும் கிடைத்தது.

அடுத்து, சித்தராமையா வீசிய அஸ்திரம் கன்னட தேசியம். கர்நாடகத்துக்கென தனிக் கொடியை அறிமுகப்படுத்தி அமித் ஷாவின் தூக்கத்தைக் கெடுத்தார். ஆனால், அதனை எதிர்கொள்ள கர்நாடகத்தில் வசிக்கும் தெலுங்கு, தமிழ், இந்தி பேசும் மக்களின் ஆதரவைத் திரட்ட அமித் ஷா முடிவுசெய்தார். மூன்று மாதங்களுக்கு முன்பே ஆந்திரம், தெலங்கானா, தமிழகம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த பாஜக ஊழியர்களை முழுநேரமாகக் களமிறக்கினார். இதுவும் காங்கிரஸைப் பலவீனப்படுத்த பாஜகவுக்கு உதவியது.

வித்தியாசமான வியூகம்

மைசூர், மாண்டியா போன்ற பகுதிகளில் பாஜகவுக்குச் செல்வாக்கு இல்லை. ஒரு சில தொகுதிகளைத் தவிர, மற்ற இடங்களில் வெல்வது கடினம் என்பதை உணர்ந்த அமித் ஷா, அங்கு காங்கிரஸை வீழ்த்த புதிய உத்தியைக் கையாண்டார். இந்தப் பகுதிகளில் மஜத வலுவாக உள்ளது. இங்கு பாஜக வாக்குகளைப் பிரித்தால் காங்கிரஸ் எளிதாக வென்றுவிடும். இதனைத் தடுக்க மைசூர், மாண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 40-க்கும் அதிகமான தொகுதிகளில் பெயரளவுக்கு மட்டுமே பாஜக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். பிரச்சாரமும் பெயரளவுக்கு இருந்தது. மைசூர் போன்ற பெரிய நகரங்களில் மோடி, அமித் ஷா போன்ற பெரும் தலைவர்கள் மட்டும் பிரச்சாரம் செய்தனர். அமித் ஷாவின் இந்த வியூகத்தால் சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையாவே தோற்றுப்போனார். அங்கு மஜத 1,21,325 வாக்குகளைப் பெற்றது. சித்தராமையாவுக்கு 85,823 வாக்குகள் கிடைத்தன. பாஜக 12,064 வாக்குகளை மட்டுமே பெற்றது.

மஜத வென்ற 37 தொகுதிகளில் 9 தொகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் குறைவாகவே பாஜக பெற்றுள்ளது. இரண்டு தொகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் குறைவாகப் பெற்றுள்ளது. அமித் ஷாவின் இந்த வியூகத்தால், பாஜகவுக்கு வாக்குகள் குறைந்தாலும் 20-க்கும் அதிகமான தொகுதிகளை காங்கிரஸ் இழந்துள்ளது. 1.8% வாக்குகள் குறைந்தும் காங்கிரஸைவிட 26 தொகுதிகள் அதிகமாகக் கிடைக்க அமித்ஷாவின் ‘டம்மி வேட்பாளர்’ வியூகம் ஒரு முக்கிய காரணம். கன்னட தேசியம் பேசிய சித்தராமையாவை வீழ்த்த ஆர்எஸ்எஸ் தேர்தல் களத்தில் தீவிரம் காட்டியது. வழக்கமான கோடைகாலப் பயிற்சி முகாம்களைக் கூட தள்ளிவைத்து விட்டு, மூன்று மாதங்கள் தேர்தல் பணிகளில் மட்டுமே ஆர்எஸ்எஸ் கவனம் செலுத்தியது. இதனால்தான் பலமாக இருந்த காங்கிரஸைப் பின்னுக்குத்தள்ளி, பாஜகவால் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க முடிந்தது. மொத்தத்தில் மோடி - அமித் ஷாவின் தேர்தல் வியூகங்கள் சித்தராமையா எனும் ஆளுமையை வீழ்த்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

- எம்.சரவணன்,

தொடர்புக்கு: saravanan.mu@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x