ஓவியச் சந்தை தமிழகக் கலைப்படைப்புகளுக்கான வாசல்

அமரவர்மா தனது ஓவியத்துடன்
அமரவர்மா தனது ஓவியத்துடன்
Updated on
2 min read

ஓவியக் கண்காட்​சிகள் மட்டுமே இதுவரை நடந்து வந்த சென்னை​யில், அரசு சார்பில் முதன்​முறையாக ஓவியச் சந்தை நடைபெற்றுள்ளது. ஆகஸ்ட் 3, 4, 5ஆகிய நாள்களுக்கு சென்னை எழும்பூர் அரசு அருங்​காட்சியக வளாகத்தில் இந்நிகழ்வு நடந்தது. கேன்வாஸ், அக்ரிலிக், வாட்டர் கலர், மணல் வகை ஓவியங்​களுடன் பல வகையான சிற்பங்​களும் விற்பனைக்கு வைக்கப்​பட்​டிருந்தன. தமிழக அரசின் கலை, பண்பாட்டுத் துறை இந்நிகழ்வை ஒருங்​கிணைத்தது. கலைஞர்கள் 100 பேர் பங்கேற்​றனர்​.

சென்னை கவின்​கலைக் கல்லூரி மாணவர்​களின் கைவண்​ணத்தில் உருவான கலைப்​பொருள்களை நிகழ்வில் அதிகளவில் காண முடிந்தது. சுடுமண் (டெரகோட்டா), பீங்கான் (செராமிக்) வகைக் கலைப்​பொருள்கள் பல, அவர்களது திறனுக்குச் சான்று கூறின. “கைவிரல்​களால் அழுத்தி அழுத்தி வடிவத்தை உருவாக்கும் ‘பிஞ்ச்’ முறை, பல பகுதி​களைத் தனித்​தனியாகச் செய்து ஒரே உருவமாக இணைக்கும் ‘ஸ்லிப் காஸ்ட்​டிங்’ முறை, சுருள் முறை, ஜப்பானியத் தேநீர்ச் சடங்கு​களில் இடம்பெறும் ராக்கு மண் பாண்டத் தொழில்​நுட்பம் போன்றவற்றில் கலைப் பொருள்​களைச் செய்துள்​ளோம். உருவத்தைச் செய்வது, சுடுவது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் கல்லூரி​யிலேயே செய்தோம். 300 ரூபாயில்​இருந்து பொருள்கள் உள்ளன. விற்பனைப் பொருள்கள் ஒவ்வொன்​றிலும் ஒரே ஒரு மாதிரிதான் உள்ளது” என விற்பனைப் பொருள்​களின் மதிப்பை உணர்த்து​கிறார் செராமிக் பயிலும் மாணவர் யுகேஷ்வரன்.

மாணவரான கணேஷ், “மழைநீர் வடிகால் தோண்டும் வேலை கல்லூரி வளாகத்துக்குள் அண்மையில் நடைபெற்றது. அதில் கிடைத்த மண்ணில் செய்த கலைப்​பொருள்​களும் அரங்கில் இருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்​கிறது” என்கிறார். தன்னுடைய யதார்த்த பாணி ஓவியங்கள் வழியே ஒரு பெண்ணுல​கத்தைப் படைத்​தவர், மறைந்த கலைஞர் இளையராஜா. அவரது மனைவி பிரியாவும் ஓவியர்​தான். இவர்களின் மகள் அபிநயா, தற்போது கவின்​கலைக் கல்லூரியில் ஓவியப் பிரிவு மாணவி. இவ்விரு​வரின் படைப்பு​களும் ஓர் அரங்கில் இடம்பெற்றிருந்தன. “பெண்கள் என்றாலே சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும் என்கிற எண்ணம், ஓவியங்​களிலும் தொடர்​கிறது. அதற்கு மாறான நிறங்​களில் பெண்களை வரைய எனக்குப் பிடித்​திருக்​கிறது. பனி மிகுந்த பகுதி​களில் குறிப்​பிட்ட காலத்தில் மட்டுமே நிகழும் ‘நார்த்​தர்ன் லைட்ஸ்’ போன்ற நிகழ்வுகளை நாம் நேரில் காண்பது அரிது. நம்மைப் பரவசம் கொள்ளச் செய்யும் அத்தகைய நிகழ்வு​களையும் வரைய விரும்​பு​கிறேன்” என்கிறார் அபிநயா.

ஒடிஷாவில் உள்ள கொனார்க் சூரியக் கோயிலில் காணப்​படும் சக்கரம் போன்றவற்றைச் சித்தரிக்கும் ஓவியங்கள் ஓர் அரங்கில் நிரம்​பி​யிருந்தன. அவற்றை வரைந்த ரவி, கவின்​கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவர். “சிற்​பம்தான் என் துறை. சிரவண பெலகோலா, கஜோரா, ராணி கேவ்ஸ் போன்ற இடங்களில் உள்ள சிற்பங்கள் மீது பெரும் ஈர்ப்பு ஏற்பட்டது. அவற்றை நேரில் பார்க்​காதவர்​களுக்கு வரைந்து காட்ட வேண்டும் என்கிற உந்துதலில், ஓவியனாகி​விட்​டேன்” என்கிறார் ரவி. சிற்பங்​களில் உள்ள வெடிப்​புக்கூட இவரது ஓவியங்​களில் தவறவிடப்​படு​வதில்லை. சிற்பங்கள் தற்போது எப்படி இருக்​கின்றன என்பதை இதன் மூலம் மக்களுக்குத் தெரியப்​படுத்து​கிறார் அவர்.

கொனார்க் சக்கர ஓவியத்தை வரைந்து முடிக்க அதிகபட்சம் 4 மாதங்கள் ஆகின்றன. இத்தகைய ஓவியங்​களுக்கு ரூ.30 ஆயிரம் என விலை வைத்தா​லும், மக்கள் அதன் நியாயத்தைப் புரிந்து​கொள்​வதுதான் ரவி போன்ற கலைஞர்களை வாழ வைக்கிறது. “ஒருமுறை வட இந்தியாவைச் சேர்ந்த ஒருவர், என் ஓவியம் ஒன்றை எப்படியோ அச்சடித்து விற்று​விட்​டார். ஒரிஜினல் ஓவியம் சென்னையில் உள்ள விற்பனைக் கூடம் ஒன்றில் பத்திரமாக இருந்தது. அந்த மோசடி நபர், இந்தத் தகவலைக் கூறி ஒரிஜினலையும் விலைக்குக் கேட்டார். சிலர் ஓவியத்தை என்னிடம் வாங்கி, எனக்குத் தெரியாமலேயே கூடுதல் விலைக்கு விற்பதும் உண்டு” என்கிறார் ரவி.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்​தாண்டத்தைச் சேர்ந்த அமரவர்மா அங்கே ஓவியப் பள்ளி நடத்திவரு​கிறார். இவர் வரைந்​திருந்த ஓவியங்கள் நிகழ்வில் பேசுபொருளாக அமைந்தன. மீன் விற்கும் ஒரு பெண்மணியைச் சித்தரிக்கும் அக்ரிலிக் ஓவியத்துக்கு இவர் வைத்துள்ள விலை ரூ.16 லட்சம். இதைச் சிலர் வாங்கவும் தயாராக உள்ளனர். எனினும் விலையைச் சற்றுக் குறைக்​கும்படி பேச்சு​வார்த்தை நடைபெற்று​வரு​கிறது. “ஒளிப்​படத்தை ஓவியம் என்று சொல்லி ஏமாற்றுவதாக நிகழ்​வின்போது என் காதுபடவே சிலர் கூறினர். ‘இது கையால் வரையப்​பட்டது’ என நான் எழுதிவைக்க வேண்டி​யிருந்தது. அக்ரிலிக் மீடியத்தில் வரைவது கடினமான வேலை. ஓவியத்தைப் பார்த்த பலர் என் கைக்கு முத்தம் கொடுத்துப் பாராட்​டினர். ஒரு சதுர அடிக்கு இவ்வளவு என்பதுபோல கலைக்கு விலை வைக்க முடியாது. நான் விரும்​பினால் இதை இலவசமாகக்​கூடத் தருவேன். ஓவியர்​களின் உழைப்​புக்கும் திறமைக்கும் சமூகத்தில் ஒரு மதிப்பு இருக்க வேண்டும் என உணர்த்​து​வதற்​காகவே இந்த விலையை நிர்ண​யித்​துள்​ளேன்” என்கிறார் அமரவர்மா.

இந்நிகழ்வைத் தமிழ் வளர்ச்சி - செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி​வைத்​தார். எந்தச் செலவும் இன்றி கலைஞர்கள் படைப்பு​களைச் சந்தைப்​படுத்த அரசு ஒரு களத்தை ஏற்படுத்திக் கொடுத்​திருக்​கிறது. எனினும் இந்த நிகழ்வு மக்களிடையே போதுமான கவனம் பெற்றிருந்​தால், இன்னும் பயனுள்ளதாக இருந்​திருக்​கும்.

இது குறித்துக் கலை பண்பட்டுத் துறை தரப்பில் கேட்டபோது, “கலைஞர்​களின் படைப்புகளை, மக்கள் நிரந்​தர​மாகப் பார்வை​யிட்டு வாங்க வசதியாக எங்கள் இணையதளத்தில் அவர்களின் தொடர்பு விவரங்களை அளிக்க உள்ளோம். கலைஞர்கள் இந்த நிகழ்வை நல்ல நடவடிக்கை​யாகவே கருதுகின்​றனர்” என்று தெரிவிக்​கப்​பட்டது.

பெங்களூருவில் ஆண்டுதோறும் நடக்கும் ‘சித்திர சாந்தி’ என்கிற ஓவியச் சந்தை இந்தி​ய அளவில் கவனிக்​கப்​படு​கிறது. ஒரு நாள் நிகழ்வான இது ஏறக்​குறைய 20 ஆண்டுகளாக நடத்​தப்​படு​கிறது. இதுபோல் சென்னை​யில் நடத்​தப்​படும் சந்​தை​யும் பிரசித்​திபெற அரசும் கலை ஆர்​வலர்​களும் வருங்​காலத்​தி​லும் கைகோக்​க வேண்டும்​.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in