இனியும் தேவையா ராஜ்பவன்கள்?

இனியும் தேவையா ராஜ்பவன்கள்?
Updated on
3 min read

மீபத்திய கர்நாடகத் தேர்தல் மீண்டும் புது விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. ஆளுநரின் அதிகாரம் எவ்வளவு என்பதுதான் அது! பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பா ஒரு வாரமே அவகாசம் கேட்டிருந்த நிலையில், அவருக்கு 15 நாட்கள் வழங்கி உத்தரவிட்ட ஆளுநரின் முடிவின் காரணமாகவே, உச்ச நீதிமன்றம் தலையிட்டு, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டிவந்தது. ஆளுநரின் முடிவானது, விருப்ப அதிகாரம் எனும் தெளிவில்லாத அதிகாரத்தின் நிச்சயமற்றத்தன்மையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாடு எனும் வகையில் இது பாரபட்சமானதுதான். ஆனால், நீதித் துறையின் தலையீட்டைக் கோரும் அளவுக்கு சட்டத்துக்குப் புறம்பானது அல்ல.

கர்நாடகத் தேர்தலைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று சிலர் கோரினர். ஆளுநர் பதவி அரசியல் சார்பற்றவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றனர் சிலர். தேர்தல் முடிவுகள் இப்படி யாருக்கும் பெரும்பான்மை இல்லாத வகையில் வரும்போது, ஆளுநர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கான சட்டத்தை உச்ச நீதிமன்றம் உருவாக்க வேண்டும் என்று சிலர் கோரினர். இவை எல்லாமே தற்காலிகத் தீர்வுகள்தான்; அவை ஒரு முக்கிய விஷயத்தைக் கவனிக்கத் தவறுகின்றன. பிரச்சினை ஆளுநர் பதவிக்கு வருபவரின் அடையாளத்தைப் பொறுத்தது என்பதல்ல; அரசியல் சட்டத்தின் வடிவமே பிரச்சினைக்குரியது என்பதுதான் விஷயம்.

கூட்டாட்சிக்கும் ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான பாரபட்சமான அரசியல் முடிவுகளுக்காக ஆளுநர் மாளிகை தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், அரசியல் சட்ட திட்டத்தில் ஆளுநரின் பங்கு தொடர்பாக நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதைச் செய்வதற்கு, பிரிட்டிஷ் ஆட்சிக் காலம் தொடங்கி ஆளுநர் அலுவலகத்தின் பின்னணியைப் புரிந்துகொள்வது அவசியம். 20-ம் நூற்றாண்டின் தொடக்கம் முழுவதும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து பொறுப்புமிக்க அரசை உருவாக்குவதற்கான படிப்படியான சீர்திருத்தங்களைப் பெறுவதற்கான வழிமுறைகளை இந்திய தேசிய இயக்கங்கள் வெற்றிகரமாக மேற்கொண்டன. இந்தச் சீர்திருத்தங்கள் 1935 இந்திய அரசு சட்டத்தில் எதிரொலித்தன. குறிப்பிட்ட அதிகார எல்லை கொண்ட அமைப்பின் வழியாகப் பிராந்திய சட்ட மன்றங்களை இந்தச் சட்டம் நிறுவியது.

எனினும், பிரிட்டிஷாருக்கு இருந்த மிதமிஞ்சிய அதிகாரம் அவர்களிடமே இருப்பதை உறுதிசெய்யும் பொருட்டு, ஆளுநர் பதவியை இந்தச் சட்டம் தக்கவைத்துக்கொண்டது (இது பழைய ‘இரட்டை ஆட்சி’ முறையின் எச்சம்). மேலும் ஆளுநருக்கு, சிறப்பு பொறுப்புகள் அளிக்கப்பட்டன, அதாவது, அவரது விருப்பப்படி விஷயங்களில் தலையிட அனுமதிக்கப்பட்டார். ஆளுநர் பதவிக்கு ஆதரவானவர்கள், இரண்டு விரிவான வாதங்களை முன்வைத்தனர். முதலாவது, திறன்வாய்ந்த சட்ட மன்ற உறுப்பினர்களுக்கான பற்றாக்குறை இருக்கிறது என்பது.

இரண்டாவது, வளர்ச்சியின் தொடக்கக்கட்டத்தில் இருக்கும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், குறிப்பிட்ட அளவிலான அதிகாரக் குவிப்பு அவசியம் என்பது. எனினும், ஆளுநர் பதவி என்பது ஒரு அரசியல் சட்ட பதவியாக மட்டும் நீடிக்கும் என்றும், மாநிலங்களின் அன்றாட நிர்வாக நடவடிக்கைகளில் தலையிடும் அதிகாரம் அவருக்கு இருக்காது என்றும் உறுதியளிக்கப்பட்டது. எனினும், முதல் அமைச்சரவையை அமைப்பது தொடர்பான ஆளுநரின் அதிகாரங்கள், பெரிய அளவில் பெரும்பான்மை அல்லது கணிசமான சிறுபான்மை கொண்டிருப்பவர்களில் யாரை அழைப்பது என்பது தொடர்பான அதிகாரங்கள் பற்றி ரோஹிணி குமார் சவுத்ரி எனும் உறுப்பினர் தீர்க்கதரிசனத்துடன் கேள்வி எழுப்பினார். ஆனால், இதுபோன்ற பிரச்சினைகளை நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் மூலம் தீர்த்துவிடலாம் என்று சொல்லி அவரது வாதம் புறந்தள்ளப்பட்டது.

பிரச்சினை விரைவிலேயே உருவானது. சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, சென்னை மாகாணத்துக்கு 1952-ல் தேர்தல் நடந்தது. 375 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட மன்றத்தில், பல கட்சிகளின் கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முன்னணி 166 இடங்களை வென்றது. காங்கிரஸுக்கு 152 இடங்கள் கிடைத்தன. ஆட்சியமைக்க ஐக்கிய ஜனநாயக முன்னணி கோரியபோது அதை ஏற்க மறுத்த ஆளுநர் ஸ்ரீபிரகாசா, ஆட்சியமைக்க வருமாறு காங்கிரஸுக்கு அழைப்புவிடுத்தார். இதையடுத்து, ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தது. இதற்காக, ஐக்கிய ஜனநாயக முன்னணியை உடைக்கும் வேலைகள் நடந்தன. அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்றெல்லாம் உறுதியளிக்கப்பட்டது. “முறையற்ற இந்த நடவடிக்கையின் காரணமாக, சுதந்திரத்துக்குப் பிந்தைய முதல் காங்கிரஸ் அரசின் முதலமைச்சராக ஆனார் ராஜாஜி” என்று சமூக உரிமைகள் வழக்கறிஞர் கே.ஜி.கண்ணபிரான் எழுதியிருக்கிறார்.

இந்த வரலாறு சுட்டிக்காட்டப்படுவது என்பது, 1952 தேர்தலையும் 2018 தேர்தலையும் சமமாக வைத்து ஒப்பீடு செய்வதற்காகவோ, பழைய பாவங்களை வைத்துப் புதிய பாவத்தை நியாயப்படுத்துவதற்காகவோ அல்ல; மாறாக, ஆளுநர் பதவி என்பது, அரசியல் சட்ட வடிவமைப்பின்படியே, கூட்டாட்சி முறைக்கும் மக்கள் ஜனநாயகத்துக்கும் ஒரு தடைக்கல்லாக செயல்படுவதைச் சுட்டிக்காட்டத்தான்!

ஆளுநர் பதவி என்பது ஒரு அரசியல் சட்டப் பதவி மட்டும்தான் என்று அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் வலியுறுத்தியிருந்தனர் என்றாலும், மத்திய அரசின் விருப்பத்துக்கு ஏற்ப, அரசியல் சூழலை வளைத்துக்கொள்ளும் அளவுக்கு ஆளுநருக்கு விருப்ப அதிகாரம் இருக்கிறது என்பதற்கான மிகச் சமீபத்திய உதாரணம்தான் கர்நாடகத் தேர்தலுக்குப் பிறகு நடந்த நிகழ்வுகள். 1950-ல் அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள், நமது மதிப்பீடுகளையும் தாண்டிய - தவிர்க்க இயலாத விஷயங்களின் அடிப்படையில் செயல்பட்டனர் என்பதால், அவர்களுடைய அன்றைய புரிதலை இன்றைக்கு நாம் மதிப்பிட முடியாதுதான். ஆனால், 2018 காலகட்டம் வரை தொடரும் அந்தப் புரிதலை இன்றைக்கு மதிப்பிடும் நிலையில் நிச்சயம் நாம் இருக்கிறோம்.

நிரந்தரமான தீர்வு என்பது - மேலோட்டமான பழுதுபார்ப்பு வேலைகளின் மூலமாகச் சாத்தியமாவது அல்ல. ஆட்சியமைப்பது தொடர்பான விதிமுறைகளை அரசியல் சட்டத்திலேயே தெளிவாகக் குறிப்பிடுவது; பதவியேற்பது என்பதை ஒரு நிகழ்ச்சி எனும் அளவுக்கு மட்டும் சுருக்குவது; சம்பந்தப்பட்ட மாநிலத்தின் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியால் பதவியேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுவது என்பன போன்ற நடவடிக்கைகள் சரியாக இருக்கும் அல்லவா? இந்த யோசனைகள் அல்லது இப்பிரச்சினைக்கு சரியான தீர்வு வழங்கும் பிற யோசனைகள் பற்றிய விவாதம்தான் இன்றைக்குத் தேவை!

- கவுதம் பாட்டியா, டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர்.

தி இந்து ஆங்கிலம்

தமிழில்: வெ.சந்திரமோகன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in