

அண்மையில் சென்னையில் நிகழ்ந்த சைபர் குற்ற நிகழ்வில் ரூ.51 லட்சத்தை மூத்த குடிநபர் ஒருவர் இழந்தது பேசுபொருளானது. தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அந்த நபரை, பெண் ஒருவர் கைபேசியில் அழைத்தார். ஆங்கிலத்தில் பேசிய அந்தப் பெண், ‘ஃபெட்எக்ஸ்’ கூரியர் நிறுவனத்தின் மும்பை அலுவலகத்திலிருந்து பேசுவதாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
“சில நாள்களுக்கு முன்பு ஈரானைச் சேர்ந்த ஒருவருக்கு நீங்கள் அனுப்பிவைத்த பார்சலில் போதைப் பொருள்கள், காலாவதியான பாஸ்போர்ட்கள், சில பொருள்கள் இருந்தன. அந்தப் பார்சலில் உங்களின் ஆதார் எண் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று அந்த முதியவரிடம் கூறியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, கைபேசியில் ‘ஸ்கைப்’ (Skype) வழியாக முதியவரைத் தொடர்புகொண்ட ஆண் ஒருவர், காவல் துறை உயரதிகாரி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். முதியவரின் அலைபேசி எண் போலீஸாரின் கண்காணிப்பில் இருந்துவருகிறது என்றும் விசாரணை முடியும்வரை யாரிடமும் பேசவோ தகவல் அனுப்பவோ கூடாது என்றும் எச்சரித்தார்.
பல மணி நேரம் நீடித்த இந்த ‘விசாரணை’யால் பதறிப்போன முதியவர், கடைசியில், தன் வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.51 லட்சம் குறித்த முழு விவரங்களைக் கைபேசி மூலம் அந்த நபருக்குத் தெரியப்படுத்தினார். உடனடியாக மொத்தப் பணத்தையும் இழந்தார்.
சற்று நேரத்துக்குப் பின்னர்தான், இது ஒரு சைபர் குற்றம் என முதியவர் உணர்ந்தார். சென்னை சைபர் குற்றப் பிரிவில் புகார் கொடுத்துவிட்டு, தன்னுடைய பணம் திரும்பக் கிடைக்குமா என்ற ஆதங்கத்துடன் காத்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும், இப்படியான 1,500க்கும் மேற்பட்ட சைபர் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தியாவில் தினந்தோறும் 7,000 சைபர் குற்றங்கள் குறித்த புகார்கள் பதிவாகின்றன என்றும், ஓராண்டில் இந்தியாவில் நிகழும் சைபர் குற்றங்களினால் ஏற்படும் இழப்பு ரூ.70,000 கோடி என்றும், 2019-2023 ஆண்டுகளில் நிகழ்ந்த சைபர் குற்றங்களின் எண்ணிக்கை 26,049இல் இருந்து 15,56,215ஆக (60 மடங்கு) உயர்ந்துள்ளது என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இந்தக் குற்றங்களின் பின்னணியில் நிறைய அதிர்ச்சித் தகவல்கள் உண்டு. ‘கணினியில் பணியாற்றும் வேலை’ என்று ஏமாற்றி, இந்திய இளைஞர்களைத் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அழைத்துச் சென்று, அவர்களை சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட வைக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் தற்போது எழுந்துள்ளது.
இணைய வழி வர்த்தகமும், பணப் பரிவர்த்தனையும் அதிகரித்துவருகின்ற இன்றைய சூழலில், அதிக எண்ணிக்கையில் இணையத்தைப் பயன்படுத்துபவர்களைக் கொண்ட நாடுகள் பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கும் இந்தியாவில், சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன.
ஒருவேளை நீங்கள் சைபர் குற்றத்துக்கு இலக்காக நேரிட்டால், கால தாமதமின்றி 1930 என்ற தொலைபேசி எண் வழியாகவும், www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் உடனடியாகப் புகார் அளித்தால் இப்படியான இழப்புகளிலிருந்து மீள முடியும்.
- தொடர்புக்கு: pkannappan29755@gmail.com