அம்பேத்கர் சிந்தனைகளை முழுமையாக உள்வாங்குவதற்கான தொகுப்பு - நேர்காணல்: கெளதம சன்னா

அம்பேத்கர் சிந்தனைகளை முழுமையாக உள்வாங்குவதற்கான தொகுப்பு - நேர்காணல்: கெளதம சன்னா
Updated on
3 min read

இந்திய ஜனநாயகத்தின் சிற்பிகளில் முதன்​மையானவரும் இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் தந்தவருமான டாக்டர் பி.ஆர்​.அம்​பேத்கர் தன் வாழ்நாளில் பல லட்சம் பக்கங்களை எழுதி​யுள்ளார். ஆனால், அவர் எழுதி​ய​வற்றில் ஒரு பகுதி மட்டுமே நூல்களாகவும் இணையத்​திலும் நமக்குக் கிடைக்​கிறது. அவர் எழுதி​ய​வற்றில் பெரும்​பகுதி முறையாகத் தொகுக்​கப்​படாமல் உள்ளது. இந்தக் குறையை நீக்கும் நோக்கத்​துடன் ஆய்வாளரும் விடுதலைச் சிறுத்​தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலா​ள​ருமான கெளதம சன்னா ‘அம்பேத்​கரியம் - புரட்​சி​யாளர் அம்பேத்​கரின் எழுத்துகள், பேச்சுகள், ஆவணங்கள்’ என்னும் தலைப்பில் 50 தொகுதி​களைத் தொகுத்​துள்​ளார். விடுதலைச் சிறுத்​தைகள் கட்சியின் தலைவர் தொல்.திரு​மாவளவனின் 60ஆம் பிறந்​தநாளை ஒட்டி, ‘கனவுத் திட்ட’மாகத் தொடங்​கப்பட்ட இந்தப் பணியை இரண்டரை ஆண்டுகளில் முடித்​திருக்​கிறார். ஜெய்பீம் ஃபவுண்டேஷன் வெளியிடும் 22,630 பக்கங்கள் கொண்ட இந்த நூல் தொகுப்பு குறித்து கெளதம சன்னாவிடம் பேசியதில் இருந்​து:

‘அம்பேத்கரியம்’ என்னும் இவ்வளவு பெரிய தொகுப்புக்கான எண்ணம் எப்படி உருவெடுத்தது?

அம்​பேத்கர் வாழும் காலத்​திலேயே நிறையப் புத்தகங்களை எழுதி வெளியிட்​டார். அதையும் தாண்டி, அவர் பெரிய நூல் தொகுப்புத் திட்டங்களை வைத்திருந்​தார். அவற்றுக்கான கட்டுரைகளையும் உள்ளடக்கக் குறிப்பு​களையும் (synopsis) எழுதிவைத்​திருந்​தார். ஆனால், 1956இல் அம்பேத்கர் மரணம் அடைந்​து​விட்​ட​தால், அந்தத் திட்டங்கள் எதுவுமே நிறைவேறவில்லை. அவருக்குப் பின் அந்தக் கட்டுரைகள், குறிப்புகள் எல்லாமே சிதறிப் போய்விட்டன. மேலும், அவர் இறப்புக்குப் பிறகு ஏற்பட்ட சில சட்டச் சிக்கல்​களால் அந்தக் கட்டுரைகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்​டு​விட்டது. பகவான் தாஸ் என்பவர் ஆதார நூல்களாக நான்கு தொகுதி​களைக் கொண்டு​வந்​தார். மகாராஷ்டிர அரசு, வசந்த் மூன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, அந்தப் பணியைத் தொடர்ந்தது. அவர்கள் ஒன்றிரண்டு தொகுதி​களைக் கொண்டு​வந்​தனர்.

வி.பி.சிங் பிரதமரான பிறகு 1990களில் இந்தத் திட்டம் மீண்டும் உயிர்​பெற்றது. டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை தொடங்​கப்​பட்டு, அதன் தலைவராக வசந்த் மூன் நியமிக்​கப்​பட்​டார். அவர் விறுவிறு​வென்று அம்பேத்கர் நூல்களைத் தொகுத்​தார். வி.பி.சிங் அரசு கவிழ்ந்த பிறகு, இந்தப் பணிக்கான நிதி ஒதுக்கீடு குறையத் தொடங்​கியது. வசந்த் மூன் இறக்கும் வரை அம்பேத்கர் நூல்களைத் தொகுக்கும் பணிக்கு அவர்தான் தலைவராகச் செயல்பட வேண்டும் என்று கே.ஆர்​.நாராயணன் குடியரசுத் தலைவராக இருந்​தபோது உத்தரவு பிறப்​பித்​தார். அதற்குப் பிறகு, இந்தப் பணி சற்றுத் துரிதமடைந்தது. வசந்த மூன் இறப்ப​தற்குள் 19 தொகுதிகள் கொண்டு​வரப்​பட்டன. அதற்குப் பின் நிதிப் பற்றாக்​குறையைக் காரணம் காட்டி, இந்தத் திட்டத்தை மத்திய அரசு மீண்டும் கைவிட்​டு​விட்டது. மீண்டும் மகாராஷ்டிர அரசு நரே என்பவரின் தலைமையில் ஒரு குழுவை அமைத்து மேலும் இரண்டு தொகுதி​களைக் கொண்டு​வந்தது.

அம்பேத்கர் அறக்கட்​டளை மூலமாக இவற்றில் 17 தொகுதிகள் தமிழில் மொழிபெயர்க்​கப்​பட்டன. தமிழ் நூல்கள் 37 தொகுதிகளாக உள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், இந்த நூல்களைத் தொகுக்கும் பணி எந்த நிலையில் உள்ளது என்று அம்பேத்கர் அறக்கட்​டளை​யிடம் கேள்வி எழுப்​பினேன். நிதி இல்லாததால் இந்தப் பணி நிறுத்​தப்​பட்​டிருப்​ப​தாகப் பதில் வந்தது. இதனால்தான் அம்பேத்கர் எழுதி​ய​வற்றை முழுமையாகத் தொகுக்கும் பணியைக் கையில் எடுக்க முடிவுசெய்​தேன்​.

இந்தத் தொகுப்புப் பணியில் நீங்கள் பின்பற்றிய அணுகுமுறை என்ன?

அம்​பேத்கர் நூல்களை நிறையப் படித்​திருந்​தாலும் அவர் ஒரு கருப்​பொருள் குறித்துப் பேசிய​வற்றை முழுமையாக உள்வாங்​கிக்​கொள்ளத் தேவையான தொடர்பைக் (link) கண்டறிய வேண்டி​யிருந்தது. அம்பேத்​கரியத்துக்கு என்று ஒரு சிந்தனை முறை உள்ளது. அம்பேத்கர் எப்படி ஒரு கருதுகோளை உருவாக்​கிக்​கொள்​கிறார்... அதை எப்படி எல்லாம் நாம் நீட்டிக்க முடியும் என்று யோசித்​தேன். இந்தப் பார்வை​யுடன் அம்பேத்​கரின் நூல்கள் அனைத்​தையும் படித்துப் பார்த்து, அந்தத் தொடர்​புகளை நான் கண்டு​பிடித்​தேன். உதாரணமாக, சாதி குறித்த முதல் கட்டுரையை அம்பேத்கர் 1917இல் எழுதினார். அதில் சாதியின் தோற்றம், சாதி எப்படி இயங்கு​கிறது ஆகியவற்றைப் பற்றித்தான் பேசுகிறார். ஆனால், சாதி எப்படித் தோன்றியது என்பதைத் தொடர் ஆய்வின் மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகுதான் கண்டறிந்​தார். சாதி எப்படித் தோன்றியது என்று வேறொரு நூலில் எழுதும்போது அது தொடர்பாக 1917இல் எழுதிய கட்டுரையைப் பார்க்கச் சொல்லி ஓர் அடிக்​குறிப்பைக் கொடுத்​துள்​ளார். அம்பேத்கர் சாதி பற்றி வெவ்வேறு காலக்​கட்​டத்தில் எழுதிய கருத்துகள் பலவும் வெவ்வேறு தொகுதி​களில் சிதறிக் கிடக்​கின்றன. ‘அம்பேத்​கரியம்’ தொகுப்பில் அம்பேத்கர் சாதி குறித்துப் பேசிய அனைத்தும் ஒரே நூலில் இருக்​கும். இந்தியாவில் சாதியைப் பற்றித் தெரிந்து​கொள்​வதற்கான கையேடாக (Ready reckoner) அந்நூல் இருக்​கும். இப்படி இருக்​கும்போது ஒவ்வொன்றைப் பற்றியும் அம்பேத்கர் எழுதி​ய​வற்றின் முழுப் பரிமாணத்தை வாசகர் உள்வாங்​கிக்​கொள்ள முடியும்.

அரசியல் பொருளாதாரம் சார்ந்த சிந்தனைகள் பல இடங்களில் சிதறிக் கிடந்தன. அவை மட்டும் தனியாகத் தொகுக்​கப்​பட்டு, இந்தத் தொகுப்பில் நான்கு தொகுதிகளாக இணைக்​கப்​பட்​டுள்ளன. சட்டம் சம்பந்தமாக அம்பேத்கர் எழுதியவை தனியாகத் தொகுக்​கப்​பட்​டுள்ளன. இதைச் சட்ட மாணவர்​களுக்கான பாடநூலாக வைக்கலாம். அரசமைப்புச் சட்டத்துக்கான அவருடைய பங்களிப்பு, இந்தியத் தொழில்​துறைக்கும் தொழில்​நுட்​பரீதியாக இந்தியா வளர்ச்சி அடைந்​ததற்கும் அம்பேத்கர் ஆற்றிய பங்களிப்புகள் ஆகியவை குறித்த நூல்கள் இடம்பெற்றுள்ளன. இப்படி​யாகக் கருப்​பொருள் வாரியாகப் பிரித்து, அம்பேத்​கரின் சிந்தனை முறையை அடியொற்றி 50 நூல்களைக் கொண்ட இந்தத் தொகுப்பை உருவாக்​கி​யுள்​ளேன். இந்தத் தொகுதியில் அம்பேத்​கரின் இதுவரை வெளிவராத கடிதங்​களும் ஆவணங்​களும் தொகுக்​கப்​பட்​டுள்ளன. பிரிட்டிஷ் ஆவணக் காப்பகம், பிரிட்டிஷ் நாடாளு​மன்றம், ஆஸ்திரேலிய நாடாளு​மன்றம், கனேடிய நாடாளு​மன்றம் ஆகியவற்றின் நூலகங்​களிலிருந்து அவற்றைப் பெற்று இந்தத் தொகுப்பில் இணைத்​துள்​ளேன்​.

இந்தப் பணியில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள்?

கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்த நூல் தொகுப்புக்கு மட்டுமே என் முழு நேரத்தை ஒதுக்​கினேன். காலை ஆறு மணிக்குத் தொடங்​கினால், இரவு இரண்டு மணிவரை ஆகிவிடும். நூல்களை வாசிப்பது, தட்டச்சு செய்து வந்த நூல்களைப் பிழைதிருத்தி, லேஅவுட்​டுக்கு அனுப்பி, மொழிபெயர்ப்புகளை மூலநூலுடன் ஒப்பிட்டுச் சரிபார்ப்பது எனப் பல பணிகள். சில இடங்களில் மொழிபெயர்ப்பில் வடமொழிச் சொற்களை நீக்கி தமிழ்ச் சொற்களைச் சேர்த்​துள்​ளேன். சில பகுதிகள் பொருத்​தமற்ற மொழிபெயர்ப்பாக இருந்​ததால் ஒட்டுமொத்தமாக மீண்டும் மொழிபெயர்க்க வேண்டி​யிருந்தது.

அம்பேத்​கரின் நீண்ட பொதுவாழ்க்​கையில் ஒவ்வொரு காலக்​கட்​டத்​திலும் அவருடைய அரசியல் சிந்தனை மாறுகிறது. ஆனால், அவருடைய அடிப்படை லட்சி​யத்தை 1917இலேயே முடிவுசெய்​து​விடு​கிறார். அது இறுதிவரை மாறவில்லை. அந்தக் கொள்கைக்கு ஏற்பத் தனது சிந்தனையை மாற்றிக்​கொண்டே வருகிறார். அந்த லட்சி​யத்தை நிறைவேற்று​வதற்கான பணியைத் தொடர்ந்து செய்து​கொண்டிருந்​தார். அவருடைய பணிகளின் வரிசை, சிந்தனை, திட்டங்கள், நோக்கம், லட்சியம் எதுவும் மாறிவிடாமல் பார்த்துக்​கொள்வது பெரிய சவாலாக இருந்தது.

அதோடு, காங்கிரஸ் கட்சியின் வரலாறு காந்தி, நேரு போன்ற சமகாலத் தலைவர்​களின் செயல்​பாடுகள், அம்பேத்​கரின் சமகால தலித் இயக்கங்கள் அவருடன் எப்படி இணங்கியும் முரண்​பட்டும் செயல்​பட்​டார்கள் என்பதை எல்லாம் ஆழமாகப் புரிந்து​கொள்ள வேண்டி​யிருந்தது. அம்பேத்கர் என்னும் பிரம்​மாண்டத் தலைவரைப் பரந்துபட்ட அறிவு இல்லாமல் தொட முடியாது. 20 ஆண்டுகளாக இந்தத் தளத்தில் நான் பணியாற்றிவரு​வதால் அதன் உச்சமாக இந்தப் பணியை நிறைவேற்ற முடிந்​தது.

இந்த நூல் தொகுப்பை மக்களிடம் கொண்டுசெல்வதற்கான திட்டங்கள்?

கிராமந்​தோறும் இந்தத் தொகுப்பைக் கொண்டுசெல்வதுதான் எங்கள் முதல் நோக்கமாக இருந்தது. தமிழ்​நாட்டின் அனைத்துக் கிராமங்​களிலும் அம்பேத்கர் படிப்​பகங்களை உருவாக்கி, அவற்றில் இந்தத் தொகுப்பை வைக்க வேண்டும் என்று திட்ட​மிட்​டோம். இதன்படி ஏற்கெனவே உள்ள அம்பேத்கர் படிப்​பகங்​களைத் தாண்டி நிறைய கிராமங்​களில் புதிதாக அம்பேத்கர் படிப்​பகங்களை அமைத்​துள்​ளோம். பலர் நன்கொடை அளித்​துள்​ள​தால், 500 கிராமங்​களில் உள்ள அம்பேத்கர் படிப்​பகங்​களில் இந்த நூல் தொகுப்பு சென்று சேர்ந்​து​விடும். 6,000 படிப்​பகங்​களில் இந்தத் தொகுப்பைக் கொண்டுசேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ண​யித்​துள்​ளோம். இந்தத் தொகுப்பின் விலை ரூ.24,000. அனைவருக்கும் 50% கழிவு விலையில் (ரூ.12,000க்கு) கொடுக்க​விருக்​கிறோம்​.

‘அம்பேத்கரியம் - புரட்சியாளர் அம்பேத்கரின் எழுத்துகள், பேச்சுகள், ஆவணங்கள்’ (50 நூல்கள்)

ஜெய்பீம் ஃபவுண்டேஷன்

முன்பதிவுக்கு: 80723 84874

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in