Last Updated : 19 Jan, 2014 12:00 AM

 

Published : 19 Jan 2014 12:00 AM
Last Updated : 19 Jan 2014 12:00 AM

வரலாற்றின் பின் ஒரு தொடர் ஓட்டம்

ஒரு புத்தகம் எழுத எவ்வளவு காலம் மெனக்கெடலாம்? பழ.அதியமான் 15 ஆண்டுகள் மெனக்கெட்டிருக்கிறார்.

சேரன்மாதேவி குருகுலப் போராட்டப் பின்னணியைப் பற்றி ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தோடு 1998-ல் தன் பயணத்தைத் தொடங்கிய அதியமான், அந்தப் போராட்டத்தைப் பற்றிய முதல் நூலான ‘பெரியாரின் நண்பர்: டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு’ புத்தகத்தை 2012-ல் கொண்டுவந்தார்; இரண்டாவது நூல் ‘சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்’ கடந்த மாதம் வெளியாகியிருக்கிறது (‘காலச்சுவடு’ வெளியீடு). தமிழக அரசியல் போக்கையே புரட்டிப்போட்ட நிகழ்வு சேரன்மாதேவி குருகுலப் போராட்டம். காங்கிரஸிலிருந்து பெரியார் வெளியேற்றத்துக்கும் திராவிட இயக்கத்தின் பேரெழுச்சியின் தொடக்கத்துக்கும் அதுவே மையம். ஆனால், தமிழில் அந்த நிகழ்வைப் பற்றி விரிவான வரலாற்றுப் பதிவொன்று வர 88 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அதியமானின் இந்த நூல்கள் மட்டும் அல்ல; முந்தைய நூல்களான ‘தி.ஜ.ர.’, ‘அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப்’, ‘வ.ரா.’, ‘சக்தி வை. கோவிந்தன்’ ஆகியவையும் இப்படித்தான்; பெரும் உழைப்பைக் கோருபவை. அடுத்து வைக்கம் போராட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறார் அதியமான்.

“எங்க அம்மா பேர் சக்தி; அதாவது ஆற்றல்.சித்தி பேர் ரஷ்யா. மாமா பேர் ஸ்டாலின். 1930-களில் வைக்கப்பட்ட பெயர்கள் இதெல்லாம்.அப்படிப்பட்ட குடும்பத்துல பெண் எடுத்த எங்கப்பா, எங்களுக்கு எல்லாம் இளங்கோ, பூங்குழலி, மலையமான், அதியமான்னு பேர் வெச்சார். நான் வளர்ந்த குடும்பப் பின்னணியை இது உணர்த்தும்னு நெனைக்கிறேன். அப்பா நல்ல வாசகர். நல்ல புத்தகங்கள் வாங்குறதுக்குன்னே 150 கி.மீ. பயணம்செஞ்சு அடிக்கடி சென்னை வருவார். ரஷ்ய மொழிபெயர்ப்புப் புத்தகங்களை எல்லாம் அள்ளிக்கிட்டு வருவார். வாசிப்பு மேலான ஆர்வம் இப்படிக் கொஞ்சம்கொஞ்சமா வரலாற்று மேலான பேரார்வமா மாறுனுச்சு. அதுதான் நாம வரலாற்றுல எவ்வளவு அசட்டையா இருக்கோம்கிறதையும் உணர்த்துனுச்சு.

சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தையே எடுத்துக்குவோமே, தமிழ்நாட்டு அரசியலோட உள்கட்டுமானத்தையே குலைச்சுப்போட்ட போராட்டம் அது. ஆனா, அதுபத்திப் படிக்கணும்னு தேடினப்ப, ஒரு சின்ன புத்தகம்தான் எனக்குக் கிடைச்சிச்சு. எவ்வளவு பெரிய வரலாற்று நிகழ்வு அது? அது ஏற்படுத்தின மாற்றங்கள் எவ்வளவு? யோசிச்சுப்பாருங்க… ஒரு மனுஷனுக்குப் பக்கத்துல சக மனுஷன் உட்கார்ந்து சாப்பிட எவ்வளவு நூற்றாண்டுகள் ஆகியிருக்கு? நாயும் பன்றியும் உரிமையோட சுத்தித் திரியுற தெருக்கள்ல ஒரு மனுஷன் கால் வெச்சு நடக்குறதுக்கு எத்தனை பேர் மல நாத்தத்துக்கு இடையில கொட்டடியில கிடக்க வேண்டியிருந்திருக்கு? ஒரு போராட்டத்துக்குப் பின்னாடி எத்தனை பேர் வாங்கின அடி, உதை, வலி, வதை எல்லாம் உறைஞ்சுகிடக்கு? ஆனா, அப்படிப்பட்ட முக்கியமான போராட்டங்களுக்கான ஆவணப் பதிவே நம்மகிட்ட இல்லேன்னா வர்ற தலைமுறை எதைப் படிக்கும்? நமக்குச் செய்யப்பட்ட தியாகங்களை எப்படி உணரும்? அட, ஆளாளுக்கு வரலாற்றையே மாத்திடுவானே?

இந்த உணர்வுதான் நாம ஏதாவது செய்யணும்ங்கிற எண்ணத்தை உருவாக்குச்சு. அதோட விளைவுதான் நான் எழுதிக்கிட்டும் தொகுத்துக்கிட்டும் இருக்குற நூல்கள். உண்மையில, இன்னைக்குத் திரும்பிப் பார்க்கும்போது 1980-கள்ல நான், சலபதி, இன்னும் சில நண்பர்கள் எல்லாம் பேசிக்கிட்டிருந்ததை நெனைக்கிறேன். நாங்க செய்யணும்னு பேசிக்கிட்டிருந்ததுல, ரொம்ப கொஞ்சத்தைத்தான் இப்போ செஞ்சுருக்கோம்னு தோணுது. நெனைச்சதுக்கும் செஞ்சதுக்கும் இடையில ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி? நம்மோட சூழலைத்தான் சொல்லணும்.

இந்தச் சேரன்மாதேவி புத்தகத்தையே எடுத்துக்குவோமே, 15 வருஷம் அலைஞ்சு திரிஞ்சுருக்கேன். எப்பவுமே முதன்மை ஆதாரங்கள் அடிப்படையிலதான் எழுதணும்கிறது நான் கடைப்பிடிக்குற விதி. 1924-1925-ல நடந்த போராட்டம் இது. அந்தக் காலத்துப் பத்திரிகைகளைப் பார்க்கணும். எல்லாம் தமிழ்நாட்டுல வெளிவந்ததுதான். ஆனா, இன்னைக்கு அதுல பெரும்பாலானவை இங்கே பார்க்கக் கிடைக்காது. தேட ஆரம்பிச்சா சேரன்மாதேவி, காரைக்குடி, டெல்லி, சிகாகோனு விரியுது இந்த இதழ்கள் இருக்குற இடம். பல்வேறு ஊர்கள், மனிதர்கள், அனுபவங்கள்.

ஒரு துறவிகிட்ட ஒரு ஆவணத்தைப் பார்க்கப் போயிருந்தேன். காந்தியை ‘மகாத்மா’னு குறிப்பிட்டிருக்குற பத்திரம் அது. 1930-கள்ல அரசு ஆவணங்கள்ல அப்படிக் குறிப்பிட்டிருக்குறது அரிதான விஷயம். ஒரு ஜெராக்ஸ் எடுத்துக்கிட்டு தர்றேனு எவ்வளவோ மன்றாடிப் பார்த்தேன். ம்ஹூம்… முடியலை. துறவியே இப்படி.

ஒரு வரலாற்று நூலில் சில வரிகள் எழுத இவ்வளவு உழைப்பு தேவைப்படுது; பணம் தேவைப்படுது. என் பிழைப்புக்கு ‘ஆல் இந்தியா ரேடியோ’ வேலை இருக்கு. இந்த ஆய்வுச் செலவுகளுக்கு எங்கே போறது? குடும்பச் செலவுலதான் கைவைக்கிறேன். வீட்டுல எவ்வளவோ திட்டிப் பார்த்து மனைவி சலிச்சுப்போய்ட்டாங்க. ஒரு வேலைல இருக்குற என்னோட சக்திக்கே மீறின விஷயமா இருக்கு. எழுத்தையே நம்பி இருக்குற ஒரு எழுத்தாளருக்கு இது சாத்தியமா?

சரி, எல்லாத்துக்கும் அப்புறம் புத்தகம் வந்துச்சு. என்ன எதிர்பார்க்கிறோம்? வசையைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கோம். அப்படித்தான் இருக்கு நம்ம சமூகச் சூழல். ஆனா, அதுக்காக விட்டுட முடியுமா? இந்தச் சமூகத்துக்கு நாம ஒவ்வொருத்தரும் செலுத்த வேண்டிய நன்றிக்கடன் இருக்கு. நான் என்னோட புத்தகங்கள் மூலமா அதைச் செலுத்துறேன். அசலும் வட்டியுமா நெறைய சேர்ந்து கிடக்கு!

சமஸ்
தொடர்புக்கு: samas@kslmedia.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x