எளியவர்களையும் செதுக்கிய லயோலா

எளியவர்களையும் செதுக்கிய லயோலா
Updated on
1 min read

லயோலா கல்லூரியில் நான் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு நாள் விடுதிக் காப்பாளராக இருந்த அருள்தந்தை ஒருவர், என்னை அழைத்து, “சுதந்திர தின விழாவில் உன் வகுப்பு சார்பாக, நான் எழுதிக் கொடுப்பதை நீ மேடையில் ஏறிப் பேச வேண்டும்” எனப் பணித்தார்.

கட்டாயத்தின் பேரில் நான் மேடை ஏறியபோது பலர் கேலியாகச் சிரித்தார்கள். எனினும், நான் சிறப்பாகவே பேசினேன். எனக்குக் கிடைத்த கைத்தட்டல்கள் அதை உறுதிப்படுத்தின. அந்த வாய்ப்பை அவர் கொடுத்திருக்காவிட்டால், எனது திறமைகளை அன்றைக்கு நான் அறிந்திருக்க மாட்டேன்.

நாம் சேருகின்ற இடத்தைப் பொறுத்துதான் ஒவ்வொன்றின் தன்மையும் தரமும் அமைகிறது. நான் கல்லூரியில் பயின்றபோது, குடும்பச் சூழ்நிலை காரணமாகக் கல்விக் கட்டணம் கட்ட முடியாததால், தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

இச்சூழலைப் புரிந்துகொண்ட அருள்தந்தை சி.கே.சாமி, தேர்வு எழுத என்னை அனுமதித்தார். இந்த அக்கறையைக் கல்லூரியில் இருந்த அனைத்து அருள்தந்தைகளிடமும் கண்டிருக்கிறேன். ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பெற்று, சமூகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் உயரிய நோக்கமாக இருந்தது.

இது போன்ற செயல்பாடுகளின் மூலம் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு, குறிப்பாக ஏழை எளியவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்கிற உத்வேகத்தையும் முனைப்பையும் கொடுத்தது லயோலா கல்லூரி அனுபவம்தான்.

இதுவே என் நிறுவனத்தில் பணிபுரியும் சக பணியாளர்களின் மேம்பாட்டுக்கு உதவிசெய்யக் காரணமாய் இருந்தது. இந்திய அளவில் இடப்பெயர்ச்சி சார்ந்த (லாஜிஸ்டிக்ஸ்) சேவையை வழங்குவதில் முன்னணி நிறுவனத்தை நடத்தி வருகிறேன். 1984இல் தொடங்கப்பட்ட என் நிறுவனத்தில் 6,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகிறார்கள்.

லயோலா கல்லூரியின் நோக்கம் சாதி, மத பேதமின்றி அனைத்து மாணவர்களுக்கும் சமமான, தரமான கல்வியைத் தருவதே. அது மாணவர் சேர்க்கையிலும் பின்பற்றப்பட்டது. நான் கல்லூரியில் பயின்றபோது பல மத/சாதி/மொழிகளைச் சேர்ந்த மாணவர்களுடன் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த அனுபவம்தான் பின்னாளில் இந்த பேதங்களைக் கடந்து செயல்படுவதற்கான வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

‘The Altitude of Gratitude will determine your Altitude’ - இதுவே லயோலா கல்லூரி அருள்தந்தைகளிடமும், ஆசிரியர்களிடமும் கற்றுக்கொண்ட நல்லொழுக்கம். ஆழமான ஆன்மிக உணர்வு, அசைக்க முடியாத நம்பிக்கைதான் ஒரு மாணவருடைய வாழ்க்கையின் அடித்தளம். இவை இருந்தால் எந்தவிதமான இடையூறுகளையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையைக் கொடுக்கும் என்பதைப் புனித மரியன்னை பள்ளி, தூய வளனார் கல்லூரி, லயோலா கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள் எனக்குக் கற்றுக்கொடுத்தன.

கடந்த 100 ஆண்டுகளில் என்னைப் போன்று பெரிய பொருளாதாரப் பின்னணி இல்லாத எத்தனையோ ஏழை எளிய மாணவர்களைக் கரம் பிடித்து மேலே உயர்த்தியிருக்கிறது லயோலா கல்லூரி. வருகின்ற காலங்களிலும் இது போன்ற மகத்தான பணிகளைத் தொடர வேண்டும்.

- தொடர்புக்கு: xb@indev.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in