லயோலா 100 : உயர் கல்வித் துறையில் ஒரு மாறுபட்ட மைல்கல்!

லயோலா 100 : உயர் கல்வித் துறையில் ஒரு மாறுபட்ட மைல்கல்!
Updated on
2 min read

சென்னை லயோலா கல்லூரி, 2024-2025 இல் நூற்றாண்டுப் பயணத்தைப் புது எழுச்​சியோடு தொடர்​கிறது. 1925 முதல் 2025 வரை கடந்த 100 ஆண்டுகளில் இக்கல்லூரி இந்திய அறிவுசார் தளத்தில் ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்​தியுள்ளது. இந்த நூற்றாண்டு காலப் பயணமானது விரிவாக்கம், அனைவரையும் உள்ளடக்கிய கல்வி, அறிவுசார் பயணம் என்ற மூன்று கருத்துகளை அடிப்​படையாகக் கொண்டு இயங்குகிறது.

உருவான பின்னணி: லயோலா கல்லூரி மதராஸ் கத்தோலிக்க மறை மாவட்டப் பேராயர் ஜே.ஆலன் விடுத்த அழைப்பின் அடிப்​படையில், இயேசு சபையினரால் (Society of Jesus) நிறுவப்​பட்டது. லயோலா கல்லூரியின் வரலாறு 1924 மார்ச் 10 மதராஸ் மாகாணத்தின் ஆளுநர் வெல்லிங்​டனும், அவரது மனைவியும் இணைந்து நாட்டிய அடிக்​கல்லில் இருந்து தொடங்​கியது. தந்தை பிரான்சிஸ் பெட்ரம் முதல் பத்து வருடங்கள் தலைவராகவும் முதல்​வராகவும் கல்லூரிக்கான சிறந்த அடித்​தளத்தை ஏற்படுத்​தினார்.

கல்லூரியின் இரண்டாவது நிறுவனர் என்று பெருமையோடு அழைக்​கப்​படும் தந்தை ஜெரோம் டிசோசாவின் (1942-1950) பணிக் கா​லத்தில் பல புதிய துறைகள் உருவாக்​கப்​பட்டு கல்லூரி விரிவாக்​கப்​பட்டது. ஜே.குரியாகோஸ் (1970 முதல் 1983), தலைமையின் கீழ் லயோலா கல்லூரி அடுத்த கட்ட நகர்வை நோக்கி முன்னேறியது.

பல்கலைக்கழக மானியக் குழு வழங்கிய தன்னாட்சி அதிகாரத்தை (Autonomous) இந்தியாவில் எட்டு கல்லூரிகளில் ஒரு கல்லூரியாக லயோலா பெற்றது. இதன் மூலம் தனது பாடங்களை, பாடத்​திட்டத்தினை உருவாக்​கவும், தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிடவும் அதிகாரம் பெற்றது.

சமூக நோக்கம்: லயோலா கல்லூரியின் முக்கிய லட்சியம் மக்களுக்குப் பாகுபாடற்ற கல்வி வழங்க வேண்டும் என்பதே. அதன் அடிப்​படையில் கல்லூரியின் அனைத்துச் செயல்​பாடுகளிலும் சமூகத்தில் பிற்படுத்​தப்​பட்ட, ஒடுக்​கப்​பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து மக்களுக்கும் வாய்ப்பு அளிக்​கப்​படுகிறது.

கல்லூரி மாணவர் சேர்க்​கையில், இத்தகைய பின்புலத்தில் இருந்து வரும் மாணவர்​களுக்குத் தனி வாய்ப்​பும், அந்த மாணவர்கள் கல்லூரியில் இணைந்த பிறகு சிறப்புக் கவனமும் மேம்பாடும் வழங்க வேண்டும் என முடிவுசெய்​யப்​பட்டது. அதனைக் கடந்த மூன்று தசாப்​தங்​களுக்கு மேலாகச் செயல்​படுத்தி, சமூகத்தில் ஒரு மெளனப் புரட்சியை ஏற்படுத்தி, இன்றும் செயல்​படுத்​திவருகிறது.

லயோலாவின் பாடத்​திட்டம் மாணவர்களை அறிவுத் திறத்​துடனும், மனிதர்கள் சார்ந்த அக்கறையுடனும் ஒருங்​கிணைந்து உருவாக்க வேண்டும் என்ற உயரிய கொள்கையோடு உருவாக்​கப்​பட்டது. தொடக்கம் முதலே மதிப்​பீட்டுக் கல்வி (Value Education), மதிப்​பீடுகள் அடிப்​படையான கல்விக்கு முக்கியத்​துவம் தரப்படுகிறது.

லயோலாவின் பாடத்​திட்டம் என்பது வெறும் வகுப்பு​களோடு நில்லாமல் சமூக, கள முன்னெடுப்புகள் மூலம் மாணவ, மாணவிகளின் அறிவுசார் ஆளுமை வளர்ச்சியையும், சமூகப் பொறுப்பையும் ஒருங்கே வழங்குகிறது.

பெருமைக்குரிய மாணவர்கள்: இக்கல்லூரி தனது வரலாற்றுப் பயணத்தில் பல துறை வல்லுநர்களை, தலைவர்களை, விளையாட்டு வீரர்களை உருவாக்​கிக்​கொண்​டும், தொடர்ந்து பயணித்து​க்​கொண்டும் இருக்​கிறது. இக்கல்​லூரியில் படித்துப் பின்னாள்​களில் பெரும் உயரங்​களைத் தொட்ட இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்​கட்​ராமன், வெண்மைப் புரட்​சியின் தந்தை வர்கீஸ் குரியன், ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும், பின்னர் பன்னிரண்​டாவது இந்திய நிதிக் குழுமத்தின் தலைவராகவும் இயங்கிய டாக்டர் சி.ரங்​கராஜன், இந்தியப் பாதுகாப்பு ஆலோசகராகவும் - அதனைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராகவும் பதவிவகித்த எம்.கே.நாராயணன், கல்வியாளர்களான முனைவர் மால்கம் எஸ்.ஆதிசேஷய்யா, முனைவர் டி.என்​.அனந்​தகிருஷ்ணன் போன்றோர் இங்கு பயின்​றவர்​கள்​தான்.

மேலும், புகழ்​பெற்ற பத்திரிகையாளர்களான என்.ராம், சசிகுமார் மேனன், மகசேசே விருது பெற்ற பி.சாய்நாத் ஆகியோர் இக்கல்​லூரியின் மாணவர்களே. உச்ச நீதிமன்​றத்தின் மூன்று நீதிபதிகள், பல இந்தியக் குடிமைப் பணி அதிகாரிகள், தலைவர்கள் எனப் பலரை இக்கல்லூரி உருவாக்கி தேசத்துக்கு வழங்கியிருக்​கிறது.

தவிர, பல்வேறு விளையாட்டு வீரர்​களையும் உருவாக்​கியுள்ளது. அதில் குறிப்பாக புகழ்​பெற்ற டென்னிஸ் வீரர்களான ராமநாதன் கிருஷ்ணன், அமிர்​தராஜ் சகோதரர்கள், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் போன்றவர்கள் இக்கல்லூரி வரலாற்றின் ஓர் அங்கத்​தினர். இத்துடன் புகழ்​பெற்ற திரைப்படக் கலைஞர்​களையும் இயக்குநர்​களையும் உருவாக்கிய பெருமை லயோலாவின் காட்சித் தொடர்​பியல் (Visual Communication) துறைக்கு உண்டு.

தொடரும் பயணம்: 1925ஆம் ஆண்டு மூன்று இளங்கலைப் படிப்பு​களில், 75 மாணவர்​களோடு தொடங்கிய லயோலாவின் கல்விப் பயணமானது இன்று விரிவு பெற்று 24 இளங்கலைப் பட்டப்​படிப்புகள், 21 முதுகலைப் படிப்புகள், 15 வெவ்வேறு துறைகளில், முழு நேரம், பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வு என்று பெரும் வளர்ச்​சியைக் கண்டிருக்​கிறது.

இன்று இக்கல்​லூரியில் 450க்கும் மேற்பட்ட பேராசிரியர்​களின் வழிகாட்டலில் 10,000 மாணவ, மாணவிகள் கல்வி பயில்​கின்​றனர். என்றும் எதிலும் உயர்வானதை அடைய வேண்டும் என்கிற உத்வேகத்​துடன் இயங்கும் பேராசிரியர்​களின் வழிகாட்டுதல் மூலம் ‘பிரகாசிக்​கட்டும் உங்கள் ஒளி’ (Let Your Light Shine) என்ற விருது வாக்கோடு மாணவர்​களுக்கு ஊக்கமளிக்​கிறது இக்கல்​லூரி. ஆணும் பெண்ணும் பிறருக்கா​கவும் சமூகத்து​க்கா​கவும் (Men and Women for and With Others) என்ற நோக்கத்​துடன் பல மாணவ, மாணவிகளை உருவாக்கும் பயணத்தில் பல்வேறு சவால்களை எதிர்​கொண்டு, தடைகளைத் தாண்​டிப் பயணிக்​கிறது.

- தொடர்புக்கு: bernarddsami@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in