Published : 14 Aug 2014 12:00 AM
Last Updated : 14 Aug 2014 12:00 AM

லண்டன்: கனவுகளின் தேசம் அல்ல

வந்தாரை வாழவைக்கும் நகரம் என்ற பெயரை லண்டன் தற்போது இழந்திருக்கிறது.

மட்டக்களப்பிலிருந்து எனது நீண்ட கால நண்பர் தொலைபேசி எடுத்துச் சொன்னார். “உங்கை லண்டனுக்கு எனது சொந்தக்காரப் பொடியன் (இளைஞன்) ஒருத்தன், ஸ்ருடன்ற் (ஸ்டூடண்ட்) விசாவில் வாறான். ஒரு வேலை எடுத்துக் கொடுங்கோ”. இப்படியான தொலைபேசி அழைப்புகள் சிலோனிலிருந்து அடிக்கடி எனக்கு வரும். லண்டன் பெரும் சீமை என்று ஒரு பெருமை அந்தக் காலத்தில் இருந்தது. பொருளாதாரச் சிக்கல்களுக்கான தீர்வின் இடமாகவும் லண்டன் முன்பு ஒரு காலத்தில் இருந்ததுதான். ஆனால், இப்போது அப்படி இல்லை.

ஏஜென்டுகளுக்கு 15 லட்சம், 20 லட்சம் ரூபாய் கொடுத்து விசா வாங்கி இங்கு வந்து இறங்கி விமானத்தில் வைத்து கடவுச்சீட்டைக் கிழித்துக் கழிப்பறைக்குள் போட்டுவிட்டுக் குடிவரவுப் பிரிவில் வந்து நின்றுகொண்டு, “எனக்கு போக்கிடம் இல்லை” என்று சைக்கினையில் குடிவரவு அதிகாரியிடம் சொல்ல, அவர் கூட்டிக்கொண்டுபோய் அகதி அந்தஸ்து கொடுத்ததெல்லாம் பழைய கதை.

இப்போதெல்லாம் அகதிகளுக்கு, குடியேற்றவாசி களுக்கு, பெரும் இறுக்கமான கொள்கையைக் கடைப் பிடிக்கத் தொடங்கிவிட்டது லண்டன். எல்லாம் இந்த கன்சர்வேட்டிவ் அரசு வந்த பிறகுதான். இந்த அரசு எப்படியாவது வெளிநாட்டுக்காரர்களை ஒரு வழியாக ஒழுங்குபடுத்த வேண்டும் என்று துடிப்பாக வேலை செய்கிறது.

இங்கிலாந்து அரசின் அதிரடி மாற்றம்

முதல் அகதி அந்தஸ்து கேட்டு இதுவரை தங்கி யிருந்த ஆயிரக் கணக்கானவர்களுக்கு விசா கொடுத்திருக் கிறார்கள். ஆனால், புதியவர்கள் விஷயத்தில் அரசு கடும் போக்கையே கொண்டிருக்கிறது. இப்போது பிரிட்டனும் மேற்கத்திய நாடுகளும் அகதிகளைத் துரத்திக்கொண்டிருக்கின்றன. அகதிகளை அங்கு வர வேண்டாம் என்று பகிரங்கமாகவே விளம்பரம் போட்டுச் சொல்கிறது ஆஸ்திரேலியா. ஐரோப்பிய நாடுகள் அகதிகள் விஷயத்தில் எந்த இரக்கமும் காட்டத் தயாராக இல்லை. வேலை செய்ய முடியாமலும் காப்பீட்டு எண் (இன்ஸூரன்ஸ் நம்பர்) இல்லாமலும் அகதிகளாகப் பதிய முடியாமலும் ஆயிரக் கணக்கானவர்கள் வீதிகளில் அலைந்துகொண்டிருக்கின்றனர். இப்படியாக சட்டவிரோதமாக லண்டனில் இருப்பவர்களைக் காவல் துறையினரும் குடிவரவுத் துறையும் சேர்ந்து கைதுசெய்துவருகின்றனர்.

நாட்டுக்கு உள்ளே வரும் சட்டவிரோதக் குடியேறி களையும், ஏற்கெனவே தங்கியிருப்பவர்களையும் உடனடியாகப் பிடித்து நாடுகடத்துவதற்கு யு. கே. போடர் ஏஜென்சி எல்லா வகையான கடும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று குடிவரவுத் துறை அமைச்சர் சொல்கிறார். “விசா இல்லாதவர்களைக் கைதுசெய்து நாடுகடத்துவோம். லண்டன் முழுவதிலும் இவ்வாறான கைது நடவடிக்கைகள் துரிதமாக்கப்படும்'' என்று பிரெண்ட் உள்ளூர் குடிவரவுத் துறை உதவி பணிப்பாளர் ஸ்டீவ் பிஸர் கூறுகிறார்.

காப்பீட்டு எண், உரிய விசா போன்றவை இல்லாதவர் களை வேலைக்கு வைத்திருக்கும் கடை முதலாளிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் பெருமளவில் அபராதம் விதிக்கப்படும். காப்பீட்டு எண் இல்லாத ஒருவரைப் பணியில் வைத்திருந்தால் கடைக்காரர் 20 ஆயிரம் பவுண்டுகள் தண்டப் பணம் கட்ட வேண்டும். இதுதான் சட்டம் இங்கு.

வேலை கிடைப்பது குதிரைக் கொம்பு

நாங்கள் லண்டனுக்கு வந்த தொண்ணூறுகளில் பெட்ரோல் நிலையம் வைத்திருக்கும் தமிழர் யாராவது எங்களுக்கு வேலை தருவார். தமிழர் கடைகள், தமிழர்களின் பெட்ரோல் நிலையங்கள் எங்களுக்குப் பெரும் உதவியாக இருந்தன. ஆனால், இப்போது 20 ஆயிரம் பவுண்டுகள் தண்டப் பணத்தைக் கட்டுவதற்கு எல்லோரும் பயந்துபோய் இருக்கின்றனர். அதனால், சட்டவிரோதமாக வேலை தர யாரும் அஞ்சுகிறார்கள்.

இங்கு லண்டனுக்கு மாணவர்களாக வருகிறவர்கள் மாணவர் விசாவில் வந்துவிட்டுக் கல்லூரிக்குப் போகாமல் லட்சம் லட்சமாய் சம்பாதித்துப் பணக்காரர்களாகலாம் என்று நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவுமில்லை. எனக்குத் தெரிந்த பொடியன் ஒருவன் பயண நிறுவனம் ஒன்றுக்கு ரூ.15 லட்சம் கொடுத்து 2 வருட விசா வாங்கியிருக்கிறான். லண்டன் போய் 15 மாதத்தில் கட்டிவிடலாம் என இங்கு வந்திருக்கிறான். அங்கு சிலோனில் ஊர் முழுக்கக் கடன். பெற்றோர்கள் ‘மகன் லண்டனில் இருக்கிறான். கடனைக் கட்டிவிடலாம்' என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள். இங்கு மகனுக்குக் கிழமைக்கு 10 மணித் தியாலம்தான் வேலை. அதுவும் கோழி பொரிக்கும் கடையில் கிழமைக்கு (வாரத்துக்கு) 40 பவுண்டுகள்தான் அவனுடைய உழைப்பு. பங்கு போட்டுத் தங்கும் அறையின் வாடகையே மாதம் 200 பவுண்டுகள். படிப்புமில்லை, வேலையுமில்லை. இங்கு நாயாய், பேயாய் நடுத்தெருவில் அலைந்துகொண்டிருக்கிறான்.

விசா இல்லாதவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது இங்கே. ஒரு வங்கிக் கணக்கைத் திறக்கவோ, நோய் என்றால் மருந்து எடுக்கவோ, வாகனம் ஓட்டத் தெரிந்தால் ஓட்டுநர் உரிமம் எடுக்கவோ ஒன்றும் முடியாது. ‘பல்லுக் கழட்டின பாம்பாட்டம்’ எத்தனை நாளைக்கு லண்டனில் இருப்பது?

நாடு கடத்தல்

அது மட்டுமல்ல. மாணவர்கள் கிழமைக்கு 20 மணி நேரத்துக்கு அதிகமாக வேலை செய்ய முடியாது. இது சட்டம். அதிக நேரம் வேலைசெய்து பிடிபட்டால் அந்த மாணவர் உடனடியாக நாடு கடத்தப்படுவார். வேலை கொடுத்தவருக்கு 20,000 பவுண்டுகள் அபராதம். ஏற்கெனவே, அகதிகளாக உள்ளவர்களுக்கு விசாவை வழங்கிவிட்டு ஏனையோரைத் திருப்பி அனுப்பும் நடைமுறை இப்போது லண்டனில் துரிதப் படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கடந்த வாரம் எனக்குத் தெரிந்த ஒருவர் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். அவர் ரூ.20 லட்சம் கொடுத்துக் களவாக ஜெர்மனி வந்து, பிறகு சரக்கு லாரி மூலமாக லண்டன் வந்தவர். பெண்சாதி பிள்ளைகள் இப்போது ஊரில் இருக்க முடியாமல் காலிப்பக்கமாக (காலி- ஒரு ஊர்) போய்விட வேண்டியதுதான் என்று கொழும்பிலிருந்து என்னோடு பேசும்போது சொன்னார். ஊரில் இருந்தால் கடன்காரர் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டுவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது என்கிறார் அவர்.

இப்போது லண்டனில் வீடுகளுக்கு வந்தும் காவல் துறையினரும் குடிவரவு அதிகாரிகளும் சோதனையிடுகிறார்கள். சாலையில் வைத்தும் சோதனையிடு கிறார்கள். தங்களுக்கு விசா கிடைத்தவுடன் அரசாங் கத்துக்கு விரோதமாக அகதிகள் நடந்துகொள்கிறார்கள். அதுதான் அகதிகள் மீதும் பெரும் கோபம் அரசாங் கத்துக்கு. அண்மையில்கூட ஒரு தமிழ்க் குடும்பம் அகப்பட்டது. அகதிகளால்தான் சட்டவிரோதச் செயல்கள் அதிகரிக்கின்றன என்று புதிய அரசு ஆரம்பம் முதலே சொல்லிவருகிறது.

போலித் திருமணங்கள்

பிரிட்டனில் உள்ள சட்டவிரோதக் குடியேற்றக் காரர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என்று அந்நாட்டின் குடிவரவுத் துறை அமைச்சர் டேமியன் கிரீன் தெளிவாகச் சொல்கிறார். விசாவுக்காகப் பொய்யாகத் திருமணம் செய்துகொள்பவர்களுக்குக் கடுமையான தண்டனை தரப்படும் என்கிறார் அவர். போலியான திருமணங்கள், சட்ட விரோதப் பணியாளர்கள், சட்டவிரோத ஆள்கடத்தல் போன்ற குற்றங்களுக்குக் கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் டேமியன் சொல்கிறார். 2015 தேர்தலுக்கு முன்னதாக பிரிட்டனின் குடிவரவு பல்லாயிரக் கணக்கில் குறைக்கப்படும் என்று திட்டவட்டமாக அவர் சொல்கிறார்.

பிரிட்டனின் எல்லைகள் சிறப்பான முறையில் பாதுகாக்கப்படவில்லை என்று ஏனைய நாடுகள் கருதுகின்றன. பிரிட்டனுக்குள் வந்துவிட்டால் இங்கு சுலபமாக இயங்க முடியும், சட்டவிரோதமாகத் தொழில்செய்ய முடியும் என்று நினைப்பவர்களின் எண்ணத்தை அடியோடு மாற்றுவோம் என்றும் சட்ட விரோதக் குடியேறிகளுக்குக் கடினமான தண்டனை வழங்குவதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்துவோம் என்றும் அமைச்சர் சொல்கிறார். அதனால்தான் இனிமேல் கனவுகளின் தேசமாக இருக்காது லண்டன் என்று நான் சொல்கிறேன்.

- இளைய அப்துல்லாஹ்,புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் எழுத்தாளர், தொடர்புக்கு: anasnawas@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x