

ஃபிரான்ஸ் காஃப்கா மறைந்து நூறு ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு உலகெங்கும் சிறப்புக் கண்காட்சிகள், ஆவணப்படங்களின் திரையிடல், ஆய்வரங்குகள், சொற்பொழிவுகள் நடைபெற்றுவருகின்றன. சென்னையில் ஜெர்மன் பண்பாட்டு மையமான கதே நிறுவனம் நடத்திய நிகழ்வில் கலந்துகொண்டு காஃப்கா பற்றி உரையாற்றினேன்.
காஃப்கா நினைவாக பிராக் நகரின் மையத்தில் அவரது தலை மிகப்பெரிய கண்ணாடிச் சிற்பமாக உருவாக்கப்பட்டுள்ளது. 2014இல் டேவிட் செர்னியால் உருவாக்கப்பட்ட இந்தத் தலை சுழலக்கூடியது. இதன் மூலம் காஃப்காவின் முகம் மாறிக்கொண்டே இருக்கிறது. இது ஒரு குறியீடு.
காஃப்காவை வாசிக்கும் ஒவ்வொருவரும் தன்னைக் காஃப்காவாகவே உணர்கிறார்கள். தந்தையின் அதிகாரத்தை வெறுக்கிற மகனாக, குழப்பமடைந்த காதலனாக, அன்றாட வாழ்க்கையில் பொருந்த முடியாமல் போன இளைஞனாக, அதிகாரத்தால் துரத்தப்படும் மனிதனாக என காஃப்கா என்பது ஓர் அடையாளம். எழுத்தால் மட்டுமே மீட்சி அளிக்க முடியும் என நம்பும் கலைஞனாக காஃப்கா வாழ்ந்திருக்கிறார். காஃப்காவின் ஆசைகள். கனவுகள், ஏமாற்றங்கள், குழப்பங்கள் யாவும் நமக்குள்ளும் இருக்கின்றன. இந்தியக் குடும்பங்களில் ஒரு காஃப்கா உருவாவது இயல்பானதே.
அவரது புகழ்பெற்ற ‘உருமாற்றம்’ சிறுகதையில், விற்பனைப் பிரதிநிதியான கிரிகோர் சாம்சா காலை எழுந்தவுடன் கரப்பான்பூச்சியாக மாறிவிடுகிறான். அவனது பிரச்சினை கரப்பான் பூச்சியாக உருமாறியதல்ல. எப்படி வேலைக்குப் போவது, எப்படி ரயிலைப் பிடிப்பது என்பதே. அன்றாடத்தால் துரத்தப்படுகிறவர்கள் தன்னைக் கரப்பான்பூச்சியாகக் கருதுவது புரிந்துகொள்ளக்கூடியதே.
கிரிகோர் சாம்சா மட்டுமில்லை. காஃப்காவின் கதைகளில் வரும் முக்கியக் கதாபாத்திரங்கள் யாவரும் எதிர்பாராமையின் சுழலில் சிக்கிக்கொண்டவர்களே. கிரிகோர் சாம்சா உடலளவில் கரப்பான்பூச்சியாக மாறியிருக்கிறான். ஆனால், மனித மனத்தையே கொண்டிருக்கிறான். இந்தத் தத்தளிப்பு நவீன மனிதனுக்குரியது. காஃப்காவைக் கனவுகளே வழிநடத்துகின்றன. ‘உருமாற்றம்’ கதையில்கூடக் கனவுகள் குறுக்கிட்ட தூக்கமற்ற இரவிலிருந்து கிரிகோர் சாம்சா விழித்தெழுகிறான். துர்க்கனவில் சிக்கிக் கொண்டதுபோல, அவனது நிஜ வாழ்க்கை மாறிவிடுகிறது. உலகை விடவும் வீடு பாதுகாப்பானது என்று கிரிகோர் சாம்சா நினைக்கிறான். கரப்பான்பூச்சியாக மாறிவிட்டாலும் அன்னை பரிவோடு உணவளித்து அவனைப் பராமரிக்கிறாள். சகோதரி பாசத்துடன் நடந்துகொள்கிறாள். ஆனால், சம்பாதிக்க வழியற்றுப் போய்விட்ட மகனைத் தந்தைக்குத்தான் பிடிக்கவில்லை. அவன் மீது கோபம் கொள்கிறார்; வெறுக்கிறார்.
தன்னைப் புரிந்துகொள்ளாத தந்தையின் மீது கோபமும் கசப்புணர்வும் கொண்டவராகவே காஃப்கா இருந்தார். அது அவரது படைப்புகளில் தொடர்ந்து வெளிப்படுகிறது. புதுமைப்பித்தன், க.நா.சு., மௌனி எனத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர்கள் 1940களிலே காஃப்காவை வாசித்திருக்கிறார்கள்; கொண்டாடியிருக்கிறார்கள். இவர்களுக்கு காஃப்கா பிடித்துப்போனதற்கு முக்கியக் காரணம், அவரும் தங்களைப் போலவே தந்தையைப் பிடிக்காத மகன் என்பதே.
1919இல் காஃப்கா தன் அப்பாவிற்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இந்தக் கடிதத்தை எழுதியபோது அவரது வயது 36. தான் எழுதிய கடிதத்தை அப்பாவிடம் நேரில் கொடுக்கவில்லை. அம்மாவிடம் கொடுத்து ஒப்படைக்கச் சொல்லியிருக்கிறார். ஆனால், காஃப்காவின் அம்மா அந்தக் கடிதத்தை அப்பாவிடம் தரவில்லை. அந்தக் கடிதம் தந்தையின் அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் மகனின் குரலாக ஒலிக்கிறது. கசப்பேறிய பால்யத்தின் உணர்வுகளைக் காஃப்கா துல்லியமாக எழுதியிருக்கிறார்.
| ஆம்பூரில் ஒரு காஃப்கா ரசிகர்! ஆம்பூரைச் சேர்ந்த அசோகன், காஃப்காவின் தீவிர வாசகர். காஃப்காவின் எல்லாப் படைப்புகளையும் வாசித்தவர். காஃப்கா பிறந்த செக் தலைநகரான பிராக்கில் நடைபெற்றுவரும் காஃப்காவின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தைப் பார்க்க அங்கு சென்றுள்ளார். அந்த நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது போன்ற அவர் எடுத்த ஒளிப்படங்கள் சிலவற்றை மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி இணையத்தில் பகிர்ந்திருந்தார். அவர் எடுத்த சில படங்கள் இதில் பகிரப்பட்டுள்ளன. |
காஃப்காவின் சிறுகதைகள் விநோதமானவை. குறிப்பாக, அவர் எழுதும் கருப்பொருட்களை இன்னொருவர் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ‘பட்டினிக் கலைஞன்’ கதையில் ஒருவன் பட்டினி கிடப்பதைக் காட்சிப்பொருளாக மாற்றி, அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ முற்படுகிறான். அவரது குறுங்கதை ஒன்றில் குளிர்தாங்க முடியாமல் கணப்பு அடுப்பிற்கான நிலக்கரி கேட்டு வரும் ஏழை அவமானப்படுத்தப்படுகிறான். அந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் வாளியோடு வானில் பறந்துவிடுகிறான். இன்னொரு கதையில் நாய் தன்னை மனிதர்கள் நேசிப்பதற்கான காரணத்தைச் சந்தேகம் கொள்கிறது. தனது இனத்தின் வரலாற்றை விசாரணை செய்கிறது. பசித்த வேளையில் ஏன் நாய் வானை நோக்கிச் சப்தம் எழுப்புகிறது. அது பூமியை நோக்கி அல்லவா குரைக்க வேண்டும் என்று யோசிக்கிறது.
காஃப்கா நிறையக் கடிதங்கள் எழுதியிருக்கிறார். அவரது காதலி மெலினா, ஃபெலிஸ் பாவர் ஆகியோருக்கு எழுதிய கடிதங்கள் தனித் தொகுப்பாக வெளிவந்துள்ளன. இதுபோலவே காஃப்காவின் டயரியும், அவரது குறிப்பேடும் தனி நூலாக வெளியாகியுள்ளன. நாட்குறிப்புகள் காஃப்காவின் எழுத்தைப் புரிந்துகொள்வதற்கான வரைபடமாக மட்டுமின்றி, அவரது அகவுலகின் சலனங்கள், எழுத்துலக ஆசைகளின் ஆவணமாகவும் வெளிப்படுகின்றன.
காஃப்கா இறக்கும்போது அவரது முக்கிய நாவல் எதுவும் அச்சில் வெளியாகியிருக்கவில்லை. அவர் தனது அத்தனை படைப்புகளையும் எரித்துவிடும்படி நண்பன் மாக்ஸ் பிராட்டிடம் சொல்லியிருந்தார். மாக்ஸ் பிராட் அவரது கையெழுத்துப் பிரதிகளை முறையாகத் திருத்திப் பதிப்பித்து, காஃப்காவிற்கு அழியாப் புகழை உருவாக்கினார். காஃப்காவிற்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி. தஸ்தாயெவ்ஸ்கியின் கதாநாயகனைப் போலவே காஃப்கா வாழ்ந்திருக்கிறார். டிக்கன்ஸ், கதே இருவரையும் மிகவும் விரும்பி வாசித்திருக்கிறார்.
காஃப்காவின் வாழ்க்கை வரலாற்றை மூன்று தொகுதிகள் கொண்ட விரிவான நூலாக ரெய்னர் ஸ்டாச் எழுதியிருக்கிறார். காசநோய் பாதிப்பின் காரணமாகத் தனது நாற்பதாவது வயதில் காஃப்கா இறந்து போனார். ஆண்டன் செகாவ், ஜான் கீட்ஸ், ஷெல்லி, ஸ்டீவன்சன், ஹென்றி டேவிட் தாரோ, எமிலி ப்ராண்டே எனக் காசநோய்க்குப் பலியான எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகம். காசநோய் சிகிச்சை மையத்தைப் பற்றிய தாமஸ் மானின் ‘தி மேஜிக் மவுண்டன்’ நாவலைப் படித்துப் பாருங்கள். நோயின் பாதிப்பு எப்படிப் பரவியிருந்தது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
காஃப்காவின் அகப்பிரச்சினைகள், அவர் எதிர்கொண்ட சமூக, குடும்ப நெருக்கடிகள், உறவுச்சிக்கல்கள், மனக்குழப்பங்கள் எவையும் இன்றைக்கும் மாறிவிடவில்லை. அவரது ‘விசாரணை’ நாவலில் யாரோ சொன்ன பொய்க்காக ஜோசப் கே கைது செய்யப்படுகிறான். முடிவற்ற விசாரணையால் அலைக்கழிக்கப்படுகிறான். பொய்க் குற்றசாட்டிற்கு உள்ளாகும் மனிதன் இருக்கும் வரை காஃப்காவும் இருப்பார்.
அதிகாரம், நீதி, குடும்பத்தின் கட்டுப்பாடுகள், கல்வியின் போதாமை, சமூக, பண்பாட்டுத் தளங்களில் காணப்படும் போலித்தனம் குறித்த சிந்தனைகள், கலையை... கலைஞனைப் புரிந்துகொள்ளாத சமூகத்தின் மீதான கோபம் என காஃப்காவின் எழுத்துகளில் வெளிப்படும் உண்மையே அவரை இன்றும் கொண்டாட வைக்கிறது. நமக்கு நெருக்கமாக்குகிறது.
- எழுத்தாளர்
தொடர்புக்கு: writerramki@gmail.com