Published : 14 May 2018 08:49 AM
Last Updated : 14 May 2018 08:49 AM

கர்நாடகம் எங்களுக்குத் தென்னிந்திய நுழைவாயில்!: அமித் ஷா

கர்நாடகத் தேர்தலை 2019 மக்களவைப் பொதுத் தேர்தலுடனும் பிற விவகாரங்களுடனும் எப்படிப் பொருத்திப்பார்க்கிறீர்கள்?

கர்நாடகத்தில் மூன்று முக்கிய விஷயங்கள் உள்ளன. 1. பிரதமர் மோடி வளர்ச்சி யாத்திரை மேற்கொண்டுள்ளார், அதில் கர்நாடகம் பின்தங்கியிருக்கிறது. 2. சாதி, வாரிசு அரசியல், மதச் சிறுபான்மை யினரைத் தாஜாசெய்வது போன்ற அம்சங்கள் நமது தேர்தல் அரசியலைப் பாதித்துவருகின்றன. இதை மாற்ற விரும்புகிறோம். 3. கர்நாடகத்தை எங்களுக்கான தென்னிந்திய நுழைவாயிலாகப் பார்க்கிறோம்.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கர்நாடகத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது, தொங்கு சட்டப் பேரவைதான் அமையும் என்கின்றன; இதைப் பற்றிக் கவலைப்படுகிறீர்களா?

எங்களுக்கு எப்போதுமே இப்படித்தான் நடக் கிறது. திரிபுரா, உத்தராகண்ட், மணிப்பூர் - ஏன் குஜராத்தில்கூட கருத்துக் கணிப்புகளில் நாங்கள் பின்தங்கித்தான் இருந்தோம் அல்லது தொங்கு சட்டசபை என்றுதான் சொன்னார்கள். பிறகு, எங்களுக்கு ஆதரவு கூடுவதாகக் கூறுவார்கள். வாக்குக்கணிப்பில் பார்த்தால் நாங்கள் பெரும்பான்மையை நோக்கி நகர்ந்திருப்போம். கர்நாடகத்தில் தொங்கு சட்ட மன்றம் அமையும் என்பதை நல்ல சகுனமாகவே கருதுகிறேன் (புன்னகைக்கிறார்).

கன்னட இனப் பெருமை, மொழி உணர்வு, தனிக் கொடி ஆகியவற்றைச் சுற்றியே காங்கிரஸ் பிரச்சாரம் தொடர்ந்தது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

காங்கிரஸைவிட இதில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம். கன்னடியர்களின் பெருமையை நினைவூட்ட புலிகேசி, ஹர்ஷவர்த்தனரை வென்றதை நினைவுபடுத்தியிருக்கிறார். உடையார்களுக்கும் ஹைதர் அலிக்கும் நடந்த அதிகாரச் சண்டை குறித்து ஏன் பேசவில்லை? திப்பு சுல்தானுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறது காங்கிரஸ்?

கர்நாடகத் தேர்தல் தவிர, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் தொடர்பாகவும் எதிர்க்கட்சிகளுடன் நீங்கள் மோத வேண்டியிருக்கிறதே?

எதிர்க்கட்சிகளின் கடமை இது. அவர்கள் எங்களைப் பாராட்டுவார்கள் என்றா எதிர்பார்க் கிறீர்கள்!

ஒருகாலத்தில் வலுவான கூட்டாளிகளாக இருந்த தெலுங்கு தேசம், சிவ சேனையுடன் உறவு எதிர்காலத்தில் எப்படி இருக்கும்?

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதும் கூட்டணிகள் என்றாலே கட்சிகளிடையே கருத்து மோதல்களும் வேறுபாடுகளும் இருந்தன. மம்தா பானர்ஜி, ஜெயலலிதா ஆகியோருடனும் கூட்டணி வைத்தோம், கருத்து வேறுபாட்டால் பிரிவுகளும் நிகழ்ந்தன. இப்போதுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி யிலேயே சிவசேனையுடன் கருத்து வேறுபாடுகள் தொடர்கின்றன. 2019 மக்களவைத் தேர்தலில், 2014 தேர்தலின்போது இருந்ததைவிட அதிக கட்சி களுடன் தேர்தலைச் சந்திப்போம்.

2014-ல் பல மாநிலங்களில் அதிகபட்சத் தொகுதிகளில் வென்றீர்கள்; 2019-ல் அது சாத்தியமில்லை. இந்தப் பற்றாக்குறையை எப்படி ஈடு செய்வீர்கள்?

2014-ல் எங்களால் வெல்ல முடியாத 219 மக்களவைத் தொகுதிகளில் கவனம் செலுத்தி 2019-ல் வெற்றியடைவோம். வட கிழக்கு மாநிலங்களில் இப்போது 18 தொகுதிகளில் வெற்றிபெற முடியும். ஒடிஷா, மேற்கு வங்கத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். 2014-ல் மூன்றாவது இடத்தில் இருந்தோம். முதலிடத்துக்கு வந்துவிடுவோம். தெலங்கானாவிலும் நாங்கள் வெல்லக்கூடிய தொகுதிகள் இருக்கின்றன. கட்சியை விரிவுபடுத்திவருகிறோம், அதனால்தான் பல மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தோம். 2014-ல் வென்ற தொகுதிகளைவிட அதிக தொகுதிகளில் 2019-ல் வெற்றிபெறுவோம்.

கர்நாடகத் தேர்தலில் ஆட்சி யாருக்கு என்பதைத் தீர்மானிக்கப்போவது மதச்சார்பற்ற ஜனதா தளம் என்கிறார்களே?

ஒரு மாவட்டம் தவிர, எல்லா மாவட்டங்களுக்கும் சென்றேன். கட்சித் தொண்டர்களிடமும் மக்களிட மும் ஆங்காங்கே பேசினேன். இது மாற்றத்துக் கான தேர்தல் என்பதை மக்கள் உணர்ந்திருக் கிறார்கள். அந்த மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய ஒரே கட்சி பாஜகதான். மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு அந்த வலு இல்லை.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை பாஜகவின் நிழல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வர்ணித்திருக்கிறாரே?

ராகுல் பேசுவதையெல்லாம் நான் ஒரு விஷயமாகவே எடுத்துக்கொள்வதில்லை, நீங்கள் ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள்!

ராஜஸ்தான், உத்தர பிரதேச மாநில மக்களவை இடைத் தேர்தல்களில் பாஜகவுக்கு ஏற்பட்ட பெருந்தோல்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?

எந்த இடைத் தேர்தலும் மத்திய அரசைத் தீர்மானிப்பதில்லை. மக்கள் பாஜகவை அல்லது மோடியை விரும்புகிறார்களா என்பவையெல்லாம் பொதுத் தேர்தலின்போதுதான் தீர்மானிக்கப்படும். அடுத்த பிரதமர் யார் மோடியா, இன்னொருவரா என்ற கேள்வி ஏற்படும்போது மோடியின் பெயர்தான் தேர்வாகும்.

எதிர்க்கட்சிகள் ஓரணியாகத் திரள்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஒரு காலத்தில் காங்கிரஸுக்கு எதிராகத்தான் பிற கட்சிகள் அணி சேர்ந்தன. எங்கள் கட்சி அந்த இடத்துக்குவந்துவிட்டது என்பதைப் பெருமிதத்துடன் பார்க்கிறேன்.

‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x