

ஐ.நா.வில் சர்வதேசக் குடிமைப் பணி மூத்த அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆர்.கண்ணன். தற்போது ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் கௌரவப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் பற்றிப் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். தற்போது, ‘THE DMK YEARS’ என்று நூலை எழுதியுள்ளார். வரும் 31ஆம் தேதி (31.07.24) அந்த நூல் வெளியாகவுள்ளது. 1949இல் தொடங்கப்பட்டுத் தற்போது பவள விழா கொண்டாடும் திமுகவின் தோற்றம், வளர்ச்சி, கட்சி சந்தித்த ஏற்ற இறக்கங்கள், செயல்பாடுகள் குறித்து இந்நூலில் அவர் எழுதியிருக்கிறார்.
ஐ.நா.வில் அதிகாரியாகப் பணியாற்றிய உங்களுக்கு, எழுத்துத் துறை மீது ஆர்வம் வந்தது எப்படி?
நான் எழுதுவதற்குக் காரணமானவர் ‘இந்து’ என்.ராம். அவர்தான் ‘ஃபிரண்ட்லைன்’ (Frontline) இதழில் யுகோஸ்லாவியா பற்றி எழுத வாய்ப்பளித்தார். அவர் கொடுத்த உற்சாகத்தால் ‘தி இந்து’ நாளிதழில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டுத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கட்டுரைகள் எழுதினேன். தொடர்ந்து அண்ணா பற்றிய புத்தகத்தையும் எழுதினேன்.
திமுக தலைவராகவும் தமிழக முதல்வராகவும் அண்ணாதுரை, மு.கருணாநிதி ஆகியோரை எப்படிப் பார்க்கிறீர்கள்? விமர்சனங்களை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்?
கட்சித் தலைவராக அண்ணா, தம்பிகளுக்கு மென்மையான அண்ணனாக விளங்கினார். கட்சியினரிடையே ஒரு குடும்ப உணர்வை ஏற்படுத்தினார். கருணாநிதியும் கட்சி நிர்வாகிகளின் பெயர்களைக்கூட நினைவில் வைத்திருந்தார்; கட்சியைத் துடிப்புடன் நடத்திச்சென்றார். தமிழக முதல்வராக அண்ணா இரண்டு ஆண்டுகள் மட்டுமே பொறுப்புவகித்தார். அதில் சில மாதங்கள் உடல்நலக் குறைவால் சிகிச்சையிலே கழிந்தது. ஆட்சியைப் பொறுத்தவரை அவர் சில சமரசங்களைச் செய்துகொண்டார். கருணாநிதியும் முதல்வராக இருந்தபோது இலங்கைப் பிரச்சினை, மதுவிலக்கு உள்ளிட்ட விஷயங்களில் சமரசம் செய்துகொண்டார்.
அண்ணாதுரை, மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகிய மூவரில் யார் தலைமையில் திமுக சிறப்பாகச் செயல்பட்டதாக நினைக்கிறீர்கள்?
நிச்சயமாக கருணாநிதி காலத்தில்தான். திமுக புதிய உயரங்களைத் தொட்டது. கட்சி பெரிய பிளவுகளைச் சந்தித்தது. கருணாநிதியின் ஆட்சி இரண்டு முறை கலைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தொடர்ந்து 12 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இல்லை. இருந்தும் சோதனைகளைக் கடந்து திமுகவைத் துடிப்பாகவும் தொண்டர்கள் சோர்ந்துபோகாமல் உற்சாகமாகவும் கருணாநிதி வைத்திருந்தார். சோதனைகளைத் தாண்டி மத்தியில் 12 அமைச்சர்கள் பெறக்கூடிய அளவுக்குத் திமுகவின் செல்வாக்கு தேசிய அளவில் உயர்ந்தது.
அண்ணா, கருணாநிதி ஆகியோரின் காலங்கள் வேறு. இப்போது சமூக ஊடகங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. மக்களிடம் அவை ஏற்படுத்தும் தாக்கம் தீவிரமாக உள்ளது. மக்களிடம் ஏற்படுத்தப்படும் கருத்துருவாக்கத்தைத் தாண்டி, அரசு நிர்வாகத்தில் முடிவுகளை எடுப்பது கடினம். அமைச்சர்களின் செயல்பாடுகள், சட்டம் - ஒழுங்கு நிலை போன்றவை குறித்து அதிருப்திகள் இருந்தாலும் முதல்வராக ஸ்டாலின் பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்திவருகிறார். அவரது ஆட்சிக் காலம் முழுமையடையவில்லை. எதிர்காலத்திலும் அவர் ஆட்சிக்கு வரலாம். இப்போதே அவரது ஆட்சிக் காலம் பற்றி ஒட்டுமொத்தமாக எடைபோட முடியாது.
பெரியார், அண்ணாதுரை கொள்கைகளுக்கு திமுக, அதிமுக கட்சிகளில் எது நெருக்கமாக இருந்ததாக உணர்கிறீர்கள்?
எம்.ஜி.ஆர். இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்தினார். ஜெயலலிதா, 69 சதவீத இடஒதுக்கீட்டை அரசியல் சாசனத்தின் 9ஆவது அட்டவணையில் சேர்க்க நடவடிக்கை எடுத்து இடஒதுக்கீட்டைப் பாதுகாத்தார். கருணாநிதி ஆட்சியில் பெண்களுக்குச் சொத்தில் பங்கு, தமிழ் வளர்ச்சி, கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை உள்ளிட்டவற்றைச் செய்தார். இரண்டு கட்சிகளுமே பெரியார், அண்ணா கொள்கைகளுக்கு ஏற்றபடி பல விஷயங்களைக் கொண்டுவந்துள்ளன. மாநில உரிமைகளுக்கும் குரல் கொடுக்கின்றன. ஆட்சிக்கு வரும்போது மட்டும் இந்த உரிமைக் குரல் மிதமாகிவிடுகிறது.
சாதி ஆதிக்கத்தை எதிர்த்துத்தான் திராவிட இயக்கம் தோன்றியது. அதில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றிபெற்றுள்ளதா?
வேங்கைவயல் சம்பவம், பள்ளி மாணவர்கள் சாதி அடையாளத்துக்காகக் கையில் கயிறு கட்டிக்கொள்வது, சாதி வெறியுடன் மாணவர்கள் தாக்கிக்கொள்வது போன்றவற்றைச் சாதி ஒழிப்பில் பின்னடைவாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு சாதிக்கென்று கட்சிகள், அந்தக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டுள்ள சூழலில் சாதியை ஒழிக்க முடியாத சூழல் நிலவுகிறது. என்றாலும், திமுகவை மட்டுமே இந்த விஷயத்தில் குறைசொல்ல முடியாது.
திமுக பவள விழாவைக் கொண்டாடும் இந்த நேரத்தில், அக்கட்சியின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
அதிமுக பிளவுபட்டிருக்கிறது. பாஜக வளர்ந்துவருகிறது. நடிகர் விஜயின் புதிய கட்சியும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போகிறது. சீமான் வளர்ந்து வருகிறார். நாம் தமிழர் கட்சியின் சின்னம் மாற்றப்பட்டுப் புதிய சின்னம் வழங்கப்பட்டு, அதை மக்களிடம் பிரபலப்படுத்தப் போதுமான கால அவகாசம் இல்லாமல் இருந்தால்கூட, அக்கட்சி கணிசமான வாக்குகளைப் பெறுகிறது; இளைஞர்கள் ஈர்க்கப்படுகின்றனர். தற்போதைய ஆட்சி மீதும் மக்களிடம் அதிருப்தி உள்ளது. இதெல்லாம் திமுகவுக்குச் சவாலை ஏற்படுத்தும். திமுக உள்பட இனி எந்தக் கட்சியும் தமிழகத்தில் தனித்து ஆட்சி அமைக்க முடியாது. கூட்டணி ஆட்சிதான் அமையும். ஆட்சியைப் பிடிக்கக் கூட்டணி என்கிற நிலை மாறி, கூட்டணிதான் ஆட்சியையே நடத்தும்!