தொன்மம் தொட்ட கதைகள் - 11: ஒரு அரக்கியின் காதல்

தொன்மம் தொட்ட கதைகள் - 11: ஒரு அரக்கியின் காதல்
Updated on
2 min read

எழுத்தாளர் தேன்மொழி எழுதியுள்ள ‘நாகாபரணம்’ என்கிற சிறுகதை, காப்பிய வரலாற்றில் மிக மோசமாகச் சித்திரிக்கப்பட்ட சூர்ப்பணகை என்கிற பெண்ணின் நிறைவேறாத காதலை மறுவாசிப்புச் செய்திருக்கிறது.

ராமனைக் கண்டதும் சூர்ப்பணகை காதல் கொள்கிறாள்; அவனை அடையத் துடிக்கிறாள். ராமனின் அழகு இவளைத் தொந்தரவுசெய்கிறது. அவனுக்காகத் தன் அரக்கர் வேடத்தை மாற்றிக்கொள்கிறாள். ராமன் மீதான காமம், நாகப்பாம்பின் விஷத்தைப் போல சூர்ப்பணகையின் தலைக்கு ஏறியதாகக் கம்பர் கூறுகிறார். சூர்ப்பணகையின் ஆசைக்கு சீதை தடையாக இருக்கிறாள். சீதையை ராமனிடமிருந்து அப்புறப்படுத்தினால் மட்டுமே தனது ஆசை நிறைவேறும் எனச் சூர்ப்பணகை நினைக்கிறாள். லக்குமணன் சீதைக்குக் காவல் இருப்பதை அறியாத சூர்ப்பணகை, சீதையைத் தூக்கிச் செல்ல முயல்கிறாள். லக்குமணன் சூர்ப்பணகையின் காது, மூக்கு, முலைக்கண் ஆகியவற்றை வாளால் சீவி எறிகிறான். சூர்ப்பணகை ரத்தப் பெருக்கால் துடிக்கிறாள்; எண்திசையும் கேட்கப் புலம்புகிறாள்.

ஆனாலும் ராமன் மீதான சூர்ப்பணகையின் காதல், ஒரு கட்டத்தில் லக்குமணனின் செயலை மன்னிக்கவும் தயாராக இருக்கிறது. ராமனை மணம் முடிக்க இயலாத சூழலில் லக்குமணனை மணந்துகொள்ளவும் தயாராக இருக்கிறாள். ராமனுக்குத் தன் அழகைக் காட்டி மயக்க நினைக்கிறாள்; ராவணனின் வலிமையைச் சொல்லி மிரட்டிப் பார்க்கிறாள். பெண்மையின் இருப்பை அவர்கள் முன்பு கொட்டிக் கவிழ்த்து மன்றாடுகிறாள்.

ராமனும் லக்குமணனும் சூர்ப்பணகையை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ, அவ்வளவு அவமானப்படுத்துகிறார்கள். அவர்கள் இருவரும் தன்னை எள்ளி நகைக்கிறார்கள் என்பதுகூட அறியாதவளாகச் சூர்ப்பணகை இருக்கிறாள். அவர்கள் இருவரும் மாற்றி மாற்றிச் சொல்வதை ஒரு குழந்தையைப் போல நம்புகிறாள். இவளைத்தான் கம்பர் ‘காலமோர்ந் துடனுறை கடிய நோயனாள்’ என்று அறிமுகப்படுத்துகிறார். சூர்ப்பணகையை ஒரு நகைப்பிற்குரிய கதாபாத்திரமாகவே கம்பர் கையாண்டிருக்கிறார்.

தேன்மொழி
தேன்மொழி

இந்தியா முழுக்க வழங்கிவரும் பெரும்பாலான ராமாயணங்களில் சூர்ப்பணகை கதாபாத்திரம் வெவ்வேறு தன்மைகளில் இடம்பெற்றுள்ளதை (ராம காதையும் இராமாயணங்களும்) அ.அ.மணவாளன் ஆய்வுசெய்திருக்கிறார். காமத்தின் ஒரு பகுதியாகவே காதல் அணுகப்படுகிறது. பெண்கள் தங்கள் காமத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்வதில்லை. சூர்ப்பணகை இதில் விதிவிலக்கு. ராமனின் உடல் வலிமைக்குத் தான் மட்டுமே பொருத்தமானவள் என்பது அவளது எண்ணம். சீதை, மென்மையானவள். அரக்கர்களை அழிக்கும் உன் செயலுக்கு, அவள் எந்தவிதத்திலும் உதவ மாட்டாள் என்பதை ராமனிடமே கூறுகிறாள். தன் இனத்தை அழிக்கத் தானே உதவுவதாகச் சூர்ப்பணகை கூறுவதுதான் அவள் காதலின் உச்சம்.

தன் கணவனைக் கொன்ற அண்ணனைப் பழிவாங்க ராமனைப் பயன்படுத்திக் கொண்டாள் என்ற பார்வையும் சூர்ப்பணகை வரலாற்றின்மீது கட்டப்படுகிறது. சூர்ப்பணகை அரக்கி என்பதைக் கடந்து, அவள் ஒரு பெண் என்பதை நவீனப் பிரதிகள் கணக்கில் எடுத்துக்கொண்டன. ‘என் உறுப்புகளை அறுத்ததைக்கூட நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை’ என்கிறாள். சூர்ப்பணகையின் இந்தக் குரல்தான் தேன்மொழியை அசைத்துப் பார்த்திருக்கிறது. ‘நாகாபரணம்’ என்கிற சிறுகதையில் சூர்ப்பணகையின் அக மனதை மொழிப்படுத்தியிருக்கிறார்.

நிறைவேறாத இரண்டு காதலர்கள் பத்தாண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொள்கிறார்கள். அவள் தன்னை சூர்ப்பணகையாக உருவகித்துக்கொள்கிறாள். இந்த இடத்தில் அவன் இயல்பாகவே ராமனுடன் பொருந்திப் போகிறான். ஒரு பெண்ணாக சூர்ப்பணகையை அணுகும்போது, அவள் இரண்டு ஆண்களால் மிகக் கொடூரமாக அவமானப்படுத்தப்பட்டாள் என்கிற இடத்திலிருந்தே பேச வேண்டியிருக்கிறது. ஒரு கதைசொல்லிக் கதாபாத்திரம் மூலமாக சூர்ப்பணகையின் நியாயத்தைப் பேச வைத்திருக்கிறார் தேன்மொழி.

‘லக்குவணா எதற்காக என் உறுப்புகளைச் சிதைத்தாய்? உன் அண்ணன் ராமனை எனக்குப் பிடித்ததில் என்னடா தவறு? ஆயிரம் பெண்டாடும் உன் அப்பன் உறுப்பை அறுப்பாயா?’ என்று சூர்ப்பணகை கேட்கிறாள். காமம், ஆண் பெண்ணுக்குப் பொதுவானது. ஒரு பெண் அதனை வெளிப்படையாகச் சொல்லும்போது, அவள் ஏளனம் செய்யப்படுகிறாள் என்பதற்கு சூர்ப்பணகை ஓர் உதாரணம். ராமன், ஏகபத்தினி விரதத்தன்மையைக் கடைப்பிடிக்கவே தன் ஆசைகள் அனைத்தையும் கட்டுப்படுத்திக்கொண்டான்; அவனுக்கும் சூர்ப்பணகை மீது காதல் இருந்திருக்கும் என்கிற அனுமானத்தை எப்படி முழுமையாக மறுக்க முடியும்?

ராமனை வலிமையின் அடையாளமாகக் கட்டமைக்கிறது ராமாயணம். அவனது காமம் தன்னால்தான் முழுமைபெறும் என்று நம்புகிறாள் சூர்ப்பணகை. காமத்திற்குச் சரி, தவறு என்கிற அறமெல்லாம் தெரியாது. தனக்கான அறத்தை அதுவே உருவாக்கிக்கொள்ளும். சூர்ப்பணகையின் கடந்த காலத் துயரங்களையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அரக்கர் குலத்தைச் சார்ந்தவளாக இருந்தாலும், கணவனைப் பறிகொடுத்தவள். தனிமைத் துயரில் உழல்பவள். அதனால்தான் ஒரு கட்டத்தில், சீதையைச் சக்களத்தியாகவும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறாள். இந்தக் கதை வழியே சூர்ப்பணகையின் பக்கம் நின்று தேன்மொழி நியாயம் கேட்கிறார். பல நேரம் பதில்களைவிடக் கேள்விகளே முக்கியமானவையாகத் தெரிகின்றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in