அடுத்த அமெரிக்க அதிபர் ‘ஆல்ஃபா மேல்’ ட்ரம்ப்பா?

அடுத்த அமெரிக்க அதிபர் ‘ஆல்ஃபா மேல்’ ட்ரம்ப்பா?
Updated on
3 min read

முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பைப் படுகொலை செய்ய நடந்த முயற்சி அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தை மேலும் பரபரப்பாக்கியிருக்கிறது. ஜூலை 13 அன்று பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் நகரில், 20 வயதேயான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் அவரைச் சுட்டுக்கொல்ல முயன்றார்.

உடனடியாகப் பாதுகாப்புப் படையினரால் க்ரூக்ஸ் சுட்டு வீழ்த்தப்பட்டுவிட்டார். இதன் பின்னணி குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. அதேவேளையில், இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் ட்ரம்ப்பின் வெற்றிவாய்ப்பு அதிகரித்திருப்பதாகப் பேச்சு எழுந்திருக்கிறது. ஆனால், அதையும் தாண்டி இந்தத் தேர்தல் தொடர்பாகப் பேச வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன.

கீழிருந்து மேலே... 2024 பிப்ரவரியில், அமெரிக்க அதிபர்களின் செல்வாக்கு தொடர்பாக ஹ்யூஸ்டன் பல்கலைக்கழகம் / கோஸ்டல் கரோலினா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில் ட்ரம்ப்புக்குக் கிடைத்த இடம் 45. ஆம்! அமெரிக்காவின் மிக மோசமான அதிபர்களில் ஒருவர் என்றது அந்த ஆய்வு. தற்போதைய அதிபர் ஜோ பைடன் அதில் 14ஆவது இடத்தில் இருந்தார்.

91 குற்றவியல் வழக்குகளைச் சந்தித்தவர் ட்ரம்ப். கரோனா காலத்தில் மோசமாகச் செயல்பட்டவர்; ஜனநாயகத்துக்கு எதிரானவர்; 2020 அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பின்னரும் வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேற மறுத்தவர், முக்கிய ஆவணங்களை ‘எடுத்து’ச் சென்றவர். இப்படி ஏராளமான எதிர்மறை அம்சங்கள் இருந்தாலும், அவரை மீண்டும் அதிபர் வேட்பாளராகக் குடியரசுக் கட்சி நிறுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்தக் கட்சியின் ஏகோபித்த ஆதரவும் அவருக்குக் கிடைத்திருக்கிறது. வழக்குகளிலிருந்தும் விடுபட்டுவருகிறார். ட்ரம்ப்பின் அரசியல் பயணம் முற்றுப்பெற்றுவிட்டது என்று பேசியவர்கள்கூட, இப்போது தங்கள் கருத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது நிலைப்பாட்டை ஜூலை 13 சம்பவம் மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது எனலாம்.

துப்பாக்கிச்சூட்டுக்குப் பின்னர் காதில் ரத்தம் வழிய, பின்னணியில் அமெரிக்க தேசியக் கொடி காற்றில் பறக்க, முஷ்டியை உயர்த்தி ட்ரம்ப் முழக்கமிட்டது ஒரு வீறார்ந்த காட்சியாகப் பதிவாகிவிட்டது. நவம்பர் 5இல் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் அந்த ஒளிப்படம் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அந்தப் படம் அச்சிடப்பட்ட டி-சர்ட்டுகளும் அமெரிக்கச் சந்தையில் அமோகமாக விற்பனையாகின்றன. எதையும் எதிர்கொண்டு வெல்லக்கூடிய ‘ஆல்ஃபா மே’லாக (Alpha Male) ட்ரம்ப்பை அவரது ஆதரவாளர்கள் பார்க்கிறார்கள். “அமெரிக்காவின் நலனுக்காகக் கடவுள்தான் ட்ரம்ப்பைக் காப்பாற்றியிருக்கிறார்” என்று நெக்குருகுகிறார்கள்.

தடுமாறும் பைடன்: மறுபுறம், தனது ஜனநாயகக் கட்சியினரிடமே ஆதரவை இழந்து, தடுமாறிக்கொண்டிருக்கிறார் அதிபர் பைடன். அவரது ஆட்சிக் காலத்தில் பணவீக்கம் அதிகரிப்பு, தொழில் துறை கொள்கை தொடர்பான சட்ட மசோதா போன்றவை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின.

இந்நிலையில், ஜூன் 27இல் ட்ரம்ப்புடனான நேரடி விவாதத்தின்போது பைடன் உளறிக் கொட்டியது, அவரது செல்வாக்கை மேலும் சரித்துவிட்டது. 81 வயதாகும் பைடன், வல்லரசு நாட்டின் அதிபராவதா எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

போட்டியிலிருந்து பைடன் விலகியே ஆக வேண்டும் என்று கலிபோர்னியாவைச் சேர்ந்த - ஜனநாயகக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான ஆடம் பி.ஷிஃப் உள்ளிட்ட பலர் வலியுறுத்தி வருகிறார்கள். ட்ரம்ப் ஆதரவுக் குழுவுக்கு மாதம் 45 மில்லியன் டாலர் வழங்கவிருப்பதாகப் பெருந்தொழிலதிபர் எலான் மஸ்க் உறுதியளித்திருக்கிறார். மாறாக, பைடனுக்காக நன்கொடை வழங்குவதைப் பலர் நிறுத்திக்கொண்டதாக ஜனநாயகக் கட்சியினர் புலம்புகிறார்கள்.

ட்ரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மட்டும் வைத்துத் தனது அரசை விமர்சிப்பது சரியல்ல; கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்டு போலீஸாரால் கொல்லப்பட்டது, 2020 தோல்விக்குப் பிறகு ட்ரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டிடத்தை முற்றுகையிட்டது உள்ளிட்ட சம்பவங்கள் குறித்தும் பேச வேண்டும் என்கிறார் பைடன்.

ஆனால், அவரது குரலில் ஏனோ வலிமை தொனிக்கவில்லை. ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரை ஆகஸ்ட் முதல் வாரத்தில்தான் அதிபர் வேட்பாளர் அதிகாரபூர்வமாக முன்னிறுத்தப்படவிருக்கிறார். இந்தப் பரபரப்புகளுக்கு மத்தியில் அதிபர் பைடனுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

சரியான துணை: சர்ச்சைக்குரிய ஜே.டி.வேன்ஸை துணை அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தியிருக்கிறார் ட்ரம்ப். அரசியலில் அதிக அனுபவம் இல்லாத வேன்ஸை ட்ரம்ப் தேர்வுசெய்ததன் பின்னணியில் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. வேன்ஸ் குடியரசுக் கட்சியிலேயே ட்ரம்ப்புக்கு எதிரான அணியில் இருந்தவர்.

“ட்ரம்ப் ஓர் அமெரிக்க ஹிட்லர்” என்றெல்லாம் விமர்சித்தவர். ஆனால், தற்போது தனது நிலைப்பாட்டை முழுமையாக மாற்றிக்கொண்டு ட்ரம்ப்பின் உறுதியான ஆதரவாளராக நிற்கிறார். மேலவை (செனட்) உறுப்பினரான வேன்ஸ், எதிர்காலத்தில் அமெரிக்காவின் முக்கியமான தலைவராக உருவெடுப்பார் என்று இப்போதே ஆரூடங்கள் சொல்லப்படுகின்றன.

ட்ரம்ப்பின் வெளியுறவுக் கொள்கைகள் அமெரிக்க நலனையே பிரதானமாகக் கொண்டவை. அமெரிக்காவின் தொழில் துறையையும் வர்த்தகத்தையும் பாதுகாக்க, இறக்குமதிக்கு அதிக வரி விதிக்கும் முறையைக் (Protectionism) கடைப்பிடித்தவர். சீனாவோடு வர்த்தகப் போரையே நடத்தியவர்.

சமீபத்தில்கூட, “தைவான் பாதுகாப்புக்காக அமெரிக்கா நிறைய செலவு செய்திருக்கிறது. எனவே, தைவான் எங்களுக்குப் பணம் தர வேண்டும்” என்று தடாலடியாகப் பேசியிருக்கிறார். அதுதான் அவரது பாணி தேசியவாதம். வேன்ஸும் அப்படியானவர்தான்.

ட்ரம்ப்பைப் போலவே ரஷ்யா, இஸ்ரேல் ஆகிய நாடுகளை ஆதரிப்பவர். உக்ரைனுக்கு அமெரிக்கா உதவுவதை எதிர்ப்பவர். காஸா மீதான இஸ்ரேலின் போரை நியாயப்படுத்துபவர். சீனாவுக்கு எதிரானவர். காலநிலை மாற்றம் என்னும் கருத்தாக்கத்தை ஆதரிக்காதவர். கருக்கலைப்புக்கு எதிரானவர்.

மொத்தத்தில் ட்ரம்ப்புக்கு மிக மிகப் பொருத்தமான துணை! ட்ரம்ப் முன்னெடுத்த ‘அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக்குவோம்’ (Make America Great Again - MAGA) என்னும் இயக்கத்தில் தீவிரமாகச் செயலாற்றிவருபவர் வேன்ஸ். அவரது மனைவி உஷா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது அவருக்குக் கூடுதல் அனுகூலம்.

உண்மையில், பைடனுக்கும் ட்ரம்ப்புக்கும் (78) இடையே வயது வித்தியாசம் வெறும் மூன்று ஆண்டுகள்தான். அதை பைடனும் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனாலும் 39 வயதேயான வேன்ஸ் இருப்பதால், முதுமை குறித்த சர்ச்சைகளைத் தவிர்க்கக் குடியரசுக் கட்சிக்கு நல்ல வாய்ப்பு!

தற்போதைய நிலவரம்: துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பின்னர் ஜூலை 16இல் மில்வாக்கியில் நடந்த குடியரசுக் கட்சிக் கூட்டத்தில், தொழிலாளர் சங்கத்தின் (International Brotherhood of Teamsters) பொதுச் செயலாளர் ஷான் ஓ’ப்ரையன் கலந்துகொண்டு பேசினார். 121 ஆண்டுகளில் முதன்முதலாக ஒரு தொழிலாளர் தலைவர் குடியரசுக் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றியிருப்பது கவனம் ஈர்த்திருக்கிறது.

இதுவரை ஜனநாயகக் கட்சிக்கே ஆதரவளித்து வந்த தொழிலாளர் சங்கம் (13 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டது) இந்தத் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்று அறிவித்திருக்கிறது. எனினும், இதுவே ஜனநாயகக் கட்சியின் முக்கியமான பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

குடியரசுக் கட்சி ஆதரவாளர்களில் 70%க்கும் அதிகமானோர் பழமைவாதிகள். சட்டவிரோதக் குடியேறிகளை வெறுப்பவர்கள், கறுப்பினத்தவர் மீது பாகுபாடு காட்டுபவர்கள் போன்றோரின் இயல்பான தெரிவு ட்ரம்ப்தான். அவர் சட்டவிரோதக் குடியேறிகளை வெளியேற்றிவிட்டு, எல்லையில் சுவர் எழுப்புவார் என அவரது பெரும்பாலான ஆதரவாளர்கள் நம்புகிறார்கள். ட்ரம்ப் மீதான தாக்குதலுக்கு ரகசியப் பாதுகாப்புப் படையில் பெண்களைச் சேர்த்தது ஒரு காரணம் என்றுகூட குடியரசுக் கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள்.

இவர்கள், அரசமைப்புச் சட்டத்தின் இரண்டாவது திருத்தத்தின்படி துப்பாக்கிகளை வைத்துக்கொள்வது அமெரிக்கர்களின் உரிமை என்று வாதிடுபவர்கள். ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடந்த பின்னரும் துப்பாக்கிகளுக்குத் தடை விதிப்பதை ஆதரிக்க அவர்கள் முன்வரவில்லை. மாறாக, துப்பாக்கிகளைத் தவறாகப் பயன்படுத்தாத வகையில் அமெரிக்கர்களின் மனநலனைப் பாதுகாப்பதில்தான் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று வாதிடுகிறார்கள்.

துப்பாக்கி வைத்துக்கொள்வதை ஊக்குவிக்கும் நேஷனல் ரைஃபிள்ஸ் அசோசியேஷன் (என்.ஆர்.ஏ.) என்னும் அமைப்பு, ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சிக்குப் பெருமளவில் நன்கொடை வழங்கும் நிறுவனங்களில் ஒன்று. இந்தத் தேர்தலில், ட்ரம்ப்புக்கு ஆதரவளிப்பதாக என்.ஆர்.ஏ. தெரிவித்திருக்கிறது; பதிலுக்குத் துப்பாக்கி உரிமையைப் பாதுகாப்பதாக ட்ரம்ப் வாக்குறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப் வென்றால்... உக்ரைனுக்கு நிதி வழங்கக் கூடாது எனத் தொடர்ந்து வலியுறுத்திவரும் ட்ரம்ப் மீண்டும் அதிபரானால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் இன்னும் தீவிரமடையலாம் என்று கருதப்படுகிறது.

அவர் வந்தால், ரஷ்யாவுடனான அமெரிக்காவின் அணுகுமுறை மாறும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ட்ரம்ப்பைப் பொறுத்தவரை ரஷ்யாவை விடவும் சீனாதான் அமெரிக்காவுக்கு எதிரான நாடு. ஆக, இன்றைய சூழலில் ட்ரம்ப்பின் மீள்வரவை எதிர்பார்ப்பது குடியரசுக் கட்சியினர் மட்டுமல்ல என்பது தெளிவு!

- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in